Thursday, June 25, 2009

அற்ப சகவாசம்


என் குறுகிய கால கால் நூற்றாண்டு வாழ்க்கை அனுபவத்தில் நல்ல நண்பர்களைப் பெற்று அவர்களுடன் தொடர்ந்தும் நட்புக்கொள்ள முடியாத அளவு காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தும் இருக்கிறேன், சில சுயநலமிகளை இனங்கண்டும் இருக்கின்றேன். சிலர் அவர்கள் குறித்த பசுமையான நினைவுகளை என்னுள் படரவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களை நினைக்கும் தருணங்களிலெல்லாம் மனதில் ஏக்கம் தொற்றிக்கொள்ளும். சிலர் காலங்காலமாக நான் நினைத்து வருந்தும் அளவுக்கு காயங்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளார்கள். “அற்ப சகவாசம் பிராண சங்கடம்” என்ற வார்த்தையை உயிர்ப்பித்துச் சென்ற உத்தமர்கள் அவர்கள்! “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று எனக்கு உணர்த்திச் சென்றவர்கள்.

தவளையும் எலியும் நட்புக் கொண்டன, ஒன்றை ஒன்று பிரியாமல் இருக்கத் தங்களை கயிற்றால் பிணைத்துக் கொண்டன, இரண்டும் தண்ணீரில் குதித்தன, தவளை தண்ணீரைக் கண்டதும் அதில் பாய்ந்து நீந்தியது. எலி மூச்சடைத்து செத்து மிதந்தது! அது போன்றே என்னுடைய நிலையும் ஆனதுண்டு. எனக்கு சமமானவர்களோடோ அல்லது அறிவுடையவர்களோடோ எனது நட்பை நான் விசாலப்படுத்திக்கொள்ளவில்லை என்பதை சில நல்ல மனிதர்கள் எனக்கு இடித்துரைத்துள்ளார்கள்.

எமது வாழ்க்கையானது நட்பால் அரண் செய்யப்பட வேண்டியதுதான். காரணம் நண்பர்கள் இல்லாதோர், வாழ்க்கையில் பல இன்பங்களை இழக்கின்றனர், துன்பங்களைத் தனியாகச் சுமக்கின்றனர். நண்பர்கள் இன்ப துன்பங்களின் சம பங்காளிகள், இருந்தாலும் அந்த நண்பர்களை நாம் தெரிவு செய்யும் முறையில்தான் ஏதோ தவறு நேர்ந்து விடுகிறது.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

ஆடை இழந்தவனுடைய கைகள் அவன் மானம் காக்க விரைந்து செயற்படுவதைப் போன்றே உண்மை நட்பு யோசிக்காமலும் தாமதியாமலும் உதவ முன்வரும். எமது தவறான செயற்பாடுகளை இடித்துரைத்து இன்னது செய் என கட்டளையிடும். தீய நட்பானது நிழலுக்கு ஒப்பானது. வெளிச்சத்தில் தொடர்ந்து வந்து இருட்டில் மறைந்து போகும்.


ஆல்பர்ட் டூரர், பிரான்ஸ் கிங்டெய்ன் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரிடமும் ஓவியம் வரையும் திறமையும் ஆவலும் இருந்தது. ஆனால் பயிற்சி பெற பணம் இருக்கவில்லை. இருவரும் இணைந்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அது, இருவரில் ஒருவர் முதலில் படிப்பது, மற்றவர் உழைத்து அவரது படிப்பிற்காகும் செலவைக் கவனிப்பது. பின்னர் மற்றவர் உழைத்து முதலாமவரின் படிப்பிற்கு செலவு செய்வது.

அதன்படி டூரர் முதலில் படிக்கச் சென்றார். கிங்ஸ்டெய்ன் உழைத்து அவரைப் படிப்பித்தார். டூரர் பயிற்சி பெற்றுத் தேறியதும் கிங்ஸ்டெய்னை பயிற்சிபெற அனுப்புவதற்கு முன் வந்தார். ஆனால் டூரரின் படிப்பிற்காக கிங்ஸ்டெய்ன் கல்லுடைக்கச் சென்றதால் கைகள் கரடு முரடாக மாறி ஓவியம் வரையும் தன்மையை இழந்திருந்தது. டூரர் தனக்காக தன் ஆசையைத் துறந்துவிட்ட தன் நண்பனின் கைகளை தொழுகை செய்கின்ற கைகளாக வரைந்தார். நட்பின் சிறப்பையும் நன்றி மனப்பான்மையையும் எடுத்துக்கூறும் அந்த ஓவியம் பலரையும் கவர்ந்து பிரசித்தி பெற்றது. நட்பின் இலக்கணத்தை எடுத்துரைத்தது.

நண்பர்கள் தியாகிகளாக இருப்பது நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு! தியாகிகளாக இருக்காவிடினும் துரோகிகளாக மாறாதிருக்கலாமே?

Tuesday, June 16, 2009

மறக்க முடியுமா...?





உலக மேடையில்
மனித ஜாதியின்
உறவு நாடகங்கள்

நடந்த பிறகும் நம்
நினைவில் தங்கிடும்
இதய ஞாபகங்கள்

இனிமையானவை என்ற போதும்
கொடுமையானவை என்ற போதும்
மறக்க முடியுமா...?



ஒரே நாளில் காதல் பூத்துவிடும்
உற்றார் பெற்றார் பாசம் தோற்றுவிடும்
உயிரை விடவும் காதல் பெரிதாய் தோன்றலாம்

அதே காதல் வண்ணம் மாறிவிடும்
பகல் காற்றாய் வாழ்க்கை ஆகிவிடும்
உயிரை விடவும் காதல் புரிந்தோர் துணியலாம்...

ஜெயித்த காதல்கள் ஆன போதும்
மறைத்த காதல்கள் ஆன போதும்
மறக்க முடியுமா...?




சீதா ராமன் காதல் சாவதில்லை
ஆனால் யாரும் ராமன் ஆவதில்லை
சீதையாக பெண்கள்
மட்டும் வாழ்வதேன்?

உயிர் பூவை காதல் கொய்கிறதே...
கொலைத் தொழிலை காதல் செய்கிறதே...
சாவில்லாமல் காதல் மட்டும் வாழ்வதேன்?

இந்த கேள்விகள் எழுந்த பின்பும்
இடறி காதலில் விழுந்த பின்பும்
மறக்க முடியுமா..?

Monday, June 15, 2009

வெற்றிப் படிக்கட்டுகள்



கனவுகளுக்கும் குறிக்கோளுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். கனவுகள் குறிக்கோளை இனங்கண்டு அதனை நெறிப்படுத்தவும் கூடும், அவையே சில பொழுதுகளில் குறிக்கோளை சிதைக்கவும் கூடும்!

வளையற்காரனின் கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது!
அல்நாசர் என்னும் ஒருவன் வளையல் வாணிபம் செய்ய முடிவெடுத்து வளையல்களை வாங்கி கூடையில் அடுக்கிக்கொண்டு அவற்றை விற்கச் செல்வதற்கு முன் ஒரு கல்லில் அமர்ந்து பகற்கனவு காண ஆரம்பித்தான். கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டான், அவை திக்குத் தெரியாமல் ஓடின, அவன் நினைத்தான், “நான் இந்த வளையல்களை விற்றுக் கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு துணி வாணிபம் தொடங்குவேன், அதன் மூலம் இந்த நாட்டிலேயே எனக்கு நிகரான வணிகனோ, பணக்காரனோ இல்லை எனும்படி கோடி கோடியாய் சம்பாதிப்பேன், என்னுடைய வளர்ச்சியைக் கண்டு அரசன் தன் மகளை எனக்கு மணம் முடித்துவைக்க விரும்புவான், முதலில் நான் அவனிடம் முடியாது என்று பிகு பண்ணுவேன், பிறகு அவன் தொல்லை தாங்காமல் அவனது மகளை மணம் முடிப்பேன், அவள் மன்னன் மகள் என்னும் பெருமையுடன் என் பேச்சைக் கேட்காது நடந்துகொள்வாளாயின் இப்படித்தான், “ஒரே மிதியதாக மிதித்து அவளை சாகடிப்பேன்” என்று தன் காலைத் தூக்கி தரையில் ஓங்கி மிதித்தான், அது பக்கத்திலிருந்த வளையல் கூடையில் பட்டு வளையல் எல்லாம் சுக்குநூறாகிப் போனது!

இது போன்ற முதலுக்கே மோசம் செய்கின்ற கனவுகளும் எம்மவர் சிலருக்கு வருவதுண்டு. அதை விடுத்து குறிக்கோளை அடைய என்ன வழி என்று சிந்திப்பதே சிறந்தது! எனினும் சிந்தனை செயல் வடிவம் பெறாவிடின் பயனில்லை. அல்லது அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்று காத்திருந்து காலங்கடத்துவதிலும் பயனில்லை!

“எதிர்பாரா ஆச்சரியங்கள்
பூச்சொரியும் என்றுதான்
வாழ்க்கைச் சுவடுகள்
வாசலைத் தாண்டுகின்றன!”

பெயர் மறந்த புத்தகத்தில் என்றோ படித்தேன். மனதில் பதிந்துவிட்டது. எதிர்பார்ப்போடுதான் காலம் நகர்கின்றது, இருந்தாலும் இந்த வரிகளை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு நெருடல் என்னுள் எட்டிப் பார்க்கிறது. வெறுமனே அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து எம்முடைய செயற்பாடுகளைத் தொடங்க முடியாது. முயற்சியும் தன்னம்பிக்கையும் இலக்கு குறித்த தெளிவும் இருந்தாலேயன்றி வெற்றி கிட்டுவதில்லை. “இருப்பது பொய், போவது மெய்” என்று இலக்குகள் இன்றி இருப்பதிலோ, அதை அடைவதற்கான முயற்சிகளைத் தள்ளிப்போடுவதிலோ அர்த்தமில்லை.

“நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்,
சூரியனின் கீழே குளிர் காய்ந்திருந்தான்,
செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான்,
எதுவும் செய்யாமலேயே மாய்ந்துவிட்டான்.”

ஜேம்ஸ் அல்பெரியின் வரிகள் இவை. இன்று செய்வோம் நாளை செய்வோம் என ஆண்டுகளைக் கடத்துவதிலேயே மாண்டு போகின்றோம். ஆயிரம் அம்புவிடு, ஒன்றேனும் உன் இலக்கு தொடும்! முயற்சி பலனின்றி போனதால் முடங்கிவிடக்கூடாது. ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு பலனில்லை என எடுத்த காரியத்தை கைவிட்டு அடுத்த காரியத்திற்கு தாவுபவர்களால் இறுதியில் எதையுமே சாதிக்க முடியாது.


“விட்டுவிடப் போகுதுயிர்
விட்டவுடனே உடலை
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்”
என இருப்பவர்கள் இறப்பதே மேல்! பிறப்பின் பயனறியா இவர்கள் பூமிக்குப் பாரமாய் இருந்தென்ன பயன்?

தடைக் கற்களைப் படிக்கற்களாகப் பார்க்கப் பழகிவிட்டால், தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து நடைபோட்டால், பிரச்சினைகளுக்கு பின்வாங்காமல் துணிந்துவிட்டால் பாதி வெற்றி உறுதி! சிரமங்களுக்குப் பயந்தால் சிகரங்களைத் தொட முடியாது! எதிர்ப்புகள் இன்றேல் ஏற்றங்கள் கிடையாது! துன்பம் நேராத வெற்றி நிலைக்காது!

Monday, June 8, 2009

மாற்றமே பரிணாமம்!


கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்க மனம் ஏனோ மந்தி போல் மாறி மாறி அலைபாய்ந்தபடி இருந்தது. அவ்வப்போது சில மனிதர்களின் நினைவுகள் மனதில் நிழலாடியது.

நினைவுகள் சுகமானவையா? சுமையானவையா?
அது எம் மனங்களில் ஏற்பட்டுள்ள இரணங்களின் ஆழத்தைப் பொறுத்தது. சில வேளைகளில் பிரிவுகள் பிணைப்புகளை ஆழப்படுத்தியிருக்கலாம், சில உறவுகள் வடுக்களை விட்டுச் சென்றிருக்கலாம். உறவிருந்தால் பிரிவிருக்கும் என்ற உண்மை புரியாமலேயே வாழப் பழகிவிடுகிறோம். உன்னதமான உறவுகளைப் பிரிகின்றபோது எம்மில் ஒரு பகுதி இறந்துவிடுகிறது. இறப்பு மட்டுமே இறப்பு அல்ல, இழப்பும் கூட ஒருவித இறப்பாகும்.

நினைவுகள் பெரும்பாலும் நிறைவுகளைத் தராது. நினைவுகள் நிழலாடும் போதெல்லாம் பெருமூச்சு மட்டுமே பெரிதாக வெளிவரும். நம்மை அறியாமலேயே நாம் சிலருக்கு ஏமாற்றங்களையோ எம்மைக் குறித்த நினைவுகளையோ விட்டுச் செல்கிறோம். அதையே சிலர் எமக்குப் பரிசளித்துச் செல்கின்றனர்.

காலத்தின் கட்டாயத்தால் நேர்ந்த பிரிவுகள் சில, சந்தர்ப்ப சூழ்நிலையால் சம்பவித்த பிரிவுகள் சில, நன்மை கருதி நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகள் சில, எது எவ்வாறாயினும் பிரிவுகளும் தற்காலிகமானவையே… சில வேளைகளில் அது நிரந்தரமாகவே நிலைத்துவிடுவதுண்டு.

பல ஆண்டுகள் கழித்து பிரிந்த நபரை சந்திக்க நேர்கையில் அன்றைய பிணைப்பு அவ்வாறே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் தவறான புரிந்துணர்வால் பிரிந்தவர்கள் கால ஓட்டத்தின் பின்னர் சந்திக்க நேர்கையில் கோபம் மறந்து புன்னகையுடன் சுக துக்க விசாரணைகளைத் தொடங்கிவிடுவதுண்டு. காரணம் காலம் காயத்திற்கு மருந்திட்டிருக்கும். கால மாற்றத்தால் கோலமும் சற்று மாறிப்போயிருக்கும். மறதி கொஞ்சம் மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கும்.

காலம், மாற்றம், மறதி இம்மூன்றுமே பல நேரங்களில் எம் மனக் காயங்களுக்கு மருந்தாக அமைந்துவிடுகிறது. கடவுள் மீது நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ எனக்கு காலத்தின் மீது நம்பிக்கை அதிகம்! ஆகவே இறந்த காலத்திற்குள்ளேயே இறந்துவிடாமல் நிகழ்காலத்தில் புதிதாய்ப் பிறப்போம்! மாற்றம் ஒன்றே மாறாமலிருப்பது, எனவே மாற்றமே பரிணாமம்! மறதியே மனதின் அமைதி!

“நெஞ்சில் காயமிருந்தால்
நினைவுகள் துன்ப வலிகள் தருமே…
உறவு மாறும் உலகில்
உனக்கொரு மறதி கூட வரமே..!”

நிராகரிப்பு

மனதில் ஏதோ கவலை தொற்றிக்கொள்ள கடற்கரை நோக்கி தனியாகச் சென்றேன். அங்குள்ள மனிதர்களை உற்று நோக்கினேன். காலார நடை பயிலும் சிலருக்கு மத்தியில் காதலர்களும் கண்களுக்கு தென்பட்டனர். அது வழக்கமாக அங்கே நடப்பது தானே என்று கண்களைச் சற்று சிறுவர்கள் கட்டி விளையாடிக் கொண்டிருந்த மணல் வீட்டில் பதித்தேன்.
 
ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் மூன்று பேர் சேர்ந்து அந்த மணல் வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

ம்…. இதுவும் கடற்கரையின் அன்றாடக் காட்சி தானே என்று மனம் எங்கோ மாற எத்தனிக்கையில் சட்டென்று வந்த அலை அந்த மணல் வீட்டை சாய்த்துச் சென்றது…. ஐயோ போச்சே… என்ற சிறுமி ஒருத்தியின் குரல் காதில் விழும்போதே மணல் வீடு மனதில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியதாய் உணர்ந்தேன்.

அந்த சிறுவர்கள் மணல் வீடு கட்டியது போலவே நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அது நடக்கும் என்றோ… இது நிலைக்கும் என்றோ… எண்ணிக்கொள்கிறோம். காலமா? காலனா? கடவுளா? கடலை எப்படி உவமைப்படுத்துவதென்று தெரியவில்லை. காற்றடித்த வேகத்தில் கடல் அலை வந்து மணல் வீட்டை அடித்து செல்வது போலவே சில நேரங்களில் எமது மனக்கோட்டையும் மண்ணோடு மண்ணாகிவிடுகிறது.

எத்தனை ஆசைகள் நிராசைகளாகின்றன? எத்தனை கனவுகள் கலைந்து போகின்றன? கடிகார முட்களுக்குள் காலம் ஓடிக்கொண்டிருக்க அதற்குள் எம் கால்களும் எதையோ தேடி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

 நிறைவேறியவற்றை வெற்றிகளாகவும் நிராகரிக்கப்பட்டவற்றை தோல்விகளாகவும் கருதிக்கொள்கிறோம்.

நிராகரிப்பு என்றவுடன் எனக்கு உலகப் புகழ்பெற்ற மோனாலிஷா ஓவியம் நினைவுக்கு வருகின்றது. லியானார்டோ டாவின்சி வரைந்த அமைதி ததும்பும் ஓவியம் மோகனப் புன்னகை பார்ப்போரைக் கவரும் ஆனால் அந்த ஓவியம் கூட நிராகரிப்பின் சின்னம்தான் என்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

டாவின்சிடம் வந்து தன் மனைவியின் ஓவியத்தை வரைந்து தருமாறு வேண்டிக்கொண்டாராம் ஒருவர். அதன்படி டாவின்சி வரைந்த ஓவியத்தை அந்த நபர் அது தன் மனைவிபோன்று இல்லை என்று வாங்க மறுத்துவிட்டாராம். அப்படியே கிடந்த அந்த ஓவியத்தை பல வருடங்களின் பின்னர் பிரெஞ்சு நாட்டு மன்னர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியதாகவும் அதன் பின்னரே அந்த ஓவியம் பலரது மனதையும் கவர்ந்து பிரபல்யமடைந்ததாகவும் என்றோ எங்கோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.

அன்று ஒருவரால் நிராகரிக்கப்பட்ட ஓவியம் இன்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? நிராசைகள் நிதர்சனமாகும் வரையும் நிராகரிப்புகள் அங்கீகரிக்கப்படும் வரையும் காத்திருப்போம்… காலச் சக்கரத்தில் கால்கள் சுழன்றபடியே….