Sunday, July 19, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே..!


பிரச்சினைகள் இல்லாத மனிதன் யார்? வாழ்க்கை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வாழ்வில் பிரச்சினைகளும்.

வாய்த்தவர்களுக்குத்தான் வாழ்க்கை என பலர் வறட்டுக் கௌரவம் பேசுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, நம்முடைய மனம்தான் பிரச்சினைகளின் பிள்ளையார் சுழி, அது தான் ஆணிவேர், பிரச்சினைகள் விருட்சமான பின் ஆணிவேரைத் தேடுவதில் அர்த்தமில்லை.

வாழ்க்கையின் தாத்பரியமே நல்லெண்ணங்கள் தான். நல்லெண்ணம் இல்லாமல் ஆரம்பிக்கும் எந்தவொரு செயற்பாடுமே இறுதியில் பிரச்சினை என்ற வட்டத்திற்குள்தான் சிக்குண்டு போகும். பின்னர் அந்த சிக்கல்களை சமாளிப்பதிலேயே காலமும் காணாமல் போய்விடும்.


காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை. பயம், கவலை, வெறுப்பு, காமம் போன்ற குப்பைகளை எம் மன வீட்டிலிருந்து எறியாவிட்டால் வாழ்க்கை சுபீட்சம் பெறாது. பிரச்சினைகள் ஆரம்பமான மனதை விடுத்து பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் தெருவில் தேடுகின்றோம்.

முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்துவிட்டுத் தரையில் தேடிக்கொண்டிருந்தார். எதைத் தொலைத்துவிட்டீர்கள் முல்லா? என்று வழியில் போனவர் கேட்டார். “எனது சாவியை” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து தேடினார் முல்லா. மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், “எங்கே சாவியைத் தொலைத்தீர்கள்?” என்று, முல்லா, “என் வீட்டில் தான் தொலைத்தேன்,” என்றார். வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, “வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்?” என்று கடுகடுத்தார்.

முல்லா அமைதியாக சொன்னார், “இங்கே தான் வெளிச்சம் இருக்கிறது” என்று!

இப்படித்தான் நாமும் பிரச்சினைகளுக்கான தீர்வை எம்மிடமே தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்? எதனால் இப்பிரச்சினை நேர்ந்தது? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை.

சரி, நாம்தான் பிரச்சினைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துவிட்டோம், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதை தைரியமாக எதிர்கொள்கிறோமா? அதுவும் இல்லை!

“இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார்
இருளும் ஒரு பெருமையென எண்ணி வாழ்ந்தேன்”

என்பது போல பிரச்சினைகளுக்குள்ளேயே வியாபித்திருப்பதை சிலர் பெருமையாக எண்ணிக்கொண்டு அதனை, “நான் பார்க்காத பிரச்சினையா? எல்லாம் பழகிப்போச்சு” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.

அதிலிருந்து வெளியேறுவதற்கு சிறிதும் முயற்சிக்க மாட்டார்கள். பிரச்சினைகளுக்குள் வீழ்வது மனித பலவீனம், அதற்குள் வீழ்ந்தே கிடப்பது மதியீனம், வீழ்ந்தும் எழுவதுதான் மனிதம்!

எல்லாம் விதியென்று நோவதை விட, சதியென்று பழிப்பதை விட, மதியென்ற ஒன்றினால் சமாளிப்பதே சாலச் சிறந்தது. அடிப்படையில் வாழ்வு என்பதே எம்முடைய சுய தேவைக்கான போராட்டம் தான், போராடித்தான் பலவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. சோர்ந்துவிட்ட மனிதன் தனக்குத்தானே பகைவன், துணிந்துவிட்ட மனிதன் சாவுக்கும் பகைவன், ஆகவே துணிந்து போராடினால் தீர்வை எளிதில் பெற்றுவிடலாம்.

சிக்கல் இல்லாத வாழ்வுடன்தான் நாம் பிறந்தோம். பிறகு நாமாகவே சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். சரியாகக் கவனித்து சிக்கல்களை அவிழ்த்தால்தான் வாழ்க்கை இனிதாகும்.

வாழ்க்கையை வாழப்பார் அல்லது வாழ்க்கைக்கேற்ப உன்னை வார்க்கப்பார் என்றார் வைரமுத்து, உண்மைதான் வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுதுவடிப்பதற்கல்ல, அத்தகைய வாழ்க்கையை பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் எமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் நடக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்.”

Sunday, July 12, 2009

இலங்கை நாடு



இலங்கை – பூகோள அமைவு

உலகின் பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றான இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ளபோதும் கூட இதன் அமைவு இந்தியப் பாறைத்தட்டிலேயே உள்ளது. இலங்கை இந்தியத் தலைநிலத்துடனேயே மத்திய காலம் வரை அமைந்திருந்தது. இருப்பினும் 1480ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஊடறுக்கப்பட்டு தற்போது சுண்ணாம்புக் கற்பாறை, தீவுத் தொடர்களைக்கொண்ட ஆழம் குன்றிய நிலப்பரப்பைக்கொண்டு காணப்படுகிறது. சுனாமி, கடற்கோள் சந்தர்ப்பங்கள் இருப்பினும்கூட பூகோள ரீதியாக எரிமலை, நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் பெருமளவவில் பாதிப்பதில்லை.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?”
என்ற பாடல் வரிகளுக்கேற்ப பூகோள ரீதியாக அனைத்து வளங்களையும் பெற்றதோர் சிறந்த நாடு எம் தாய்த்திருநாடு!

எழிலுரு இலங்கை

இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோண்டு, சேலான், தப்ரபேன், செரண்டிப் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்ட எம் இலங்கை நாடு எழில் கொஞ்சும் ஓர் அழகிய தீவு!
தாழ்நில மழைக்காடுகளையும், வானுயர் பீதுறுதாலகால, சிவனொளிபாத மலையையும் பம்பரகந்த போன்ற அழகிய பல நீர் வீழ்ச்சிகளையும் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் பசுமை நிறைந்த எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களையும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பையும் கொண்டு காண்போரைக் கவர்ந்து நிற்கின்றது. இதன் வனப்பையும் வளத்தையும் அறிந்ததாலோ என்னவோ கவி பாரதி தன் பாடல் வரிகளில்
“சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம் உயர்
சேதுவை மேடிருத்தி வீதி சமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணளவாக 443 வகையான பறவையினங்களையும் ஆயிரக்கணக்கான விலங்கினங்களையும் கொண்டிருப்பதால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட எம் நாட்டில் பறவையினங்கள் அதிகமாகவே காணப்படுகிறது. வனப்புப் பெற்ற இந்நாட்டின் சிறப்பை உணர்ந்தே அதன் அழகைப் பருக அயல் நாட்டவர் படையெடுத்து வருகின்றனர். ஆகவே சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டு அதனூடாக நாட்டின் வருமானமும் உயர வழி கிட்டியுள்ளது.


வளமும் பொருளாதாரமும்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று பிரிட்டன் அரசாங்கத்தின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ஆம் ஆண்டு குடியரசாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. அக்காலந்தொட்டே பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட நாடாகத் தன்னை உயர்த்திக்கொள்ள எத்தனித்து வருகின்றது.
வெப்பமண்டல நாடாக கருதப்படும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, தைக்கப்பட்ட ஆடை ஆகியன திகழ்கின்றன. புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துக்கள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை கறுவா, இரப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கும் பெயர்பெற்று விளங்கியது. இடைக்கால பகுதியில் உலகப் பொருளாதார மந்த நிலை, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, நீண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக பொருளாதார ஒடுக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டது. இருப்பினும் தற்போது தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை கருதப்படுகிறது. இதன் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்நாட்டின் பொருளாதாரம் சாதாகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.


இன மதங்களும் கல்வி வளர்ச்சியும்

பௌத்தர்கள் 70 வீதமாகவும் இந்துக்கள் 15 வீதமாகவும் கிறிஸ்தவர்கள் 8 வீதமாகவும் இஸ்லாமியர்கள் 7 வீதமாகவும் உள்ள எம் நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் உத்தியோகப்பூர்வ மொழியாக இருந்து வருகின்றது. இருப்பினும் 10 வீதமானோர் கல்வி, விஞ்ஞானம் மற்றும் வர்த்தக தேவைகளுக்காக ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சிங்களவர் (73.8%), தமிழர் (13.9%), முஸ்லிம்கள் (7.2%), இந்திய வம்சாவளித் தமிழர் (4.6%) ஆகிய இன மக்கள் வாழ்ந்து வருவதுடன் ஏனைய இனத்தோரான பரங்கியர், சோனகர், கஃபீர் இன மக்களும் மிகக்குறைந்த (0.5%) அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
வளர்ச்சியுற்ற நாடுகளைக் கண்ணுற்றோமாயின் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வியே மூலாதாரமாக அமைந்திருக்கிறது. இலங்கையில் 1945ஆம் ஆண்டு முன்னாள் கல்வி அமைச்சரான கலாநிதி சி.டபிள்யூ.கன்னங்கர அவர்களால் இலவவச கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை மக்களின் கல்வியறிவு வீதத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்று அது 93 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றங்கண்டு நிற்பதையிட்டு இலங்கையரான நாம் பெருமையடைய வேண்டும்.

கலாசார பண்பாட்டு விழுமியங்கள்

பண்பாடு என்பது அறிவு வளர்ச்சிக்கும் மனித நாகரிகத்திற்கும் எவ்வளவு தூரம் தேவையாய் உள்ளது என்பதைப் பொருத்தே மதிக்கப்படும். தமிழர் தம் பண்பாடும் கலாசாரமும் சில சடங்கு முறைகளாடு ஒட்டி அமைந்தவை. சங்க காலத்துப் புலவர் அவாவிய
“யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்பதைத் தமிழர் பண்பாட்டின் உச்சமாகக் கருதலாம். அந்த வகையில் வந்தாரை வாழவைக்கும் தமிழர் பண்பாடு தலைசிறந்த கலாசார விழுமியங்களைக் கொண்டது.
தமிழர் இறை நம்பிக்கை சார்ந்த தமது பண்பாட்டு முறைகளை கோயில் திருவிழாக்களோடு இணைத்து சிறப்பிக்கின்றனர். தைத்திருநாள், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி, சிவராத்திரி – நவராத்திரி பூஜைகள், கந்தசஷ்டி – கெளரி விரதம் இன்ன பல விழாக்களை தமிழர் தம் பண்பாடு கலாசார முறைகளுக்கு உதாரணங்காட்ட முடியும்.

போதிமர புத்தன் வழி வந்த பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் சிங்களப் புத்தாண்டு, பூரணை தினங்களை சிறப்பாகக் கொண்டாடுவதோடு ஈசல பெரகர விழாவின் போது பாரம்பரிய உடையணிந்து, யானைகளை அழகுபடுத்தி, ஊர்வலம் நிகழ்த்தி, கண்டிய நடனம் எனப்படுகின்ற தமக்கே உரித்தான நடனத்தையும் ஆடி மகிழ்கின்றனர். மேலும் “தன்சல்” எனும் பெயரில் கூடாரங்களை அமைத்து உணவுப் பொருட்களை வறியாருக்கு வழங்கி எம் நாட்டின் இறையாண்மையைக் காத்து நிற்கின்றனர்.
ஏனைய மதத்தவரான கிறிஸ்தவவர்கள் இயேசு பிறப்பு, ஈஸ்டர் திருநாள் போன்றவற்றை மத அனுஷ்டானங்களின் பிரதிபலிப்பாக அனுசரித்து நிற்கின்றனர். இஸ்லாம் மதத்தவர்கள் ஈத் முபாரக், ரமழான் போன்ற பண்டிகைகளின் மூலமாக தமது பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றி நிற்கின்றனர்.

புகழ்பெற்ற போக்குவரத்து சேவை

இலங்கையின் நகரங்கள் பலவும் இரயில் போக்குவவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் கிராமங்கள் அனைத்தும் பேருந்து போக்குவரத்து சேவையினைப் பெருமுகமாக பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது இரயில் போக்குவரத்து சேவை 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேறு பல இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து சேவையும் கடல்வவழி கப்பல் போக்குவரத்தும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகம் பல நாடுகளினதும் கவனத்தை ஈர்த்து நிற்பதை அரசியல் அவதானிகள் அறிந்திருக்கக்கூடும். மேலும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


விளையாட்டுத் துறையில் வீறுநடை


இலங்கையின் தேசிய விளையாட்டாகக் கைப்பந்தாட்டம் கருதப்படுகிறது. இருப்பினும் உலகிற்கு எம்மை அடையாளங்காட்டிய விளையாட்டாக மட்டைப் பந்தாட்டமே திகழ்கிறது. உலகப் புகழ்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களையம் உலகத் தரப்படுத்தல் வரிசையில் முன்னணியில் இருக்கும் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனையும் கொண்ட பலம் பொருந்திய அணியான இலங்கையின் மட்டைப் பந்தாட்ட அணி உலகின் பிற அணிகளுக்கு சவாலாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. 1996ஆம் ஆண்டு எமது நாட்டு அணி உலகக் கிண்ணத்தை சுவீகாpத்ததோடு அல்லாமல் 2007ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி, உலகின் மற்றுமொரு பலம்பொருந்திய அணியான அவுஸ்திரேலிய அணிக்கு சவாலாக அமைந்தது.
ஓலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்ற எம் நாட்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஏனைய விளையாட்டுகளிலும் தாம் சளைத்தவர் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர். குறுந்துதூர ஓட்ட வீராங்கனையான சுசாந்திகா எம் நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டித் தந்தமையை எம்மில் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு ஆறாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் திட்டங்களை வகுத்துள்ள இலங்கை 1960ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களைப் பிரதமராகத் தெரிவு செய்ததன் பொருட்டு உலகிற்கு முதல் பெண் பிரதமரை வழங்கிய பெருமையைப் பெற்றுக் கொண்டது.
நீண்டகாலம் நிலவிய இனக் கலவரங்களும் வன்முறைகளும் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எம் நாட்டின் பலம்பொருந்திய விமானப் படை, தரைப்படை, கடற்படை என்பனவே காரணம் என்பதை எம் நாட்டின் ஜனாதிபதியான பௌத்த மதத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கௌரவ மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் விளக்கியுள்ளார். அவர் நீண்ட கால யுத்தத்தை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன் மோதல்களினால் சேதமுற்ற தமிழர் செறிந்து வாழ்ந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்திருப்பதை பல உலக நாட்டுத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

ஊடகத்துறையும் திரைப்பட வளர்ச்சியும்

தழிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழியிலான பல ஊடகங்கள் இலங்கையின் தலைநகரான கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. எட்டிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்களையும் பனிரெண்டிற்கும் அதிகமான வானொலி நிலையங்களையும் கொண்டு இலத்திரனியல் ஊடகத்துறையில் முத்திரை பதித்து நிற்கிறது. எமது நாட்டின் அறிவிப்பு முறை பிறநாட்டு மக்களால் குறிப்பாக இந்திய நாட்டு மக்களால் பெரிதும் கவரப்பட்ட ஒன்று. தமிழ் அறிவிப்பாளரான அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்புத் திறனும், குரல் வளமும் தொடர்ந்து பேசும் ஆற்றலும் பிற நாட்டு அறிவிப்பாளர்களுக்கு அவரை அறிவிப்புத்துறையில் ஒரு முன்னோடியாக அடையாளப்படுத்தியிருக்கின்றது. அத்தோடு வீரகேசரி, சுடர் ஒளி, தினகரன், தினக்குரல், போன்ற தமிழ் நாளேடுகளும் லங்காதீப, லக்பிம, திவையின, தினமின, இருதிம, ரிவிர போன்ற சகோதர மொழிப் பத்திரிக்கைகளும் டெய்லி மிரர், டெய்லி நியூஸ், சண்டே ஒப்சவர், தி ஐலண்ட் போன்ற ஆங்கில செய்தித்தாள்களும் அச்சு ஊடகத்துறையில் தமது பணியை மேற்கொண்டு வருகின்றன.

எம் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பெரும்பாலான திரைப்படங்கள் சிங்கள மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இந்தியத் திரைப்படங்களில் சாயல் அமைந்து காணப்படுகிறது. 1947ஆம் ஆண்டு முதல் முதலாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட “கடவுனு பொறந்துவ” என்னும் சிங்கள மொழித் திரைப்படம் தான் இலங்கையின் திரைப்படத்துறைக்கு திருப்பு முனையாக அமைந்தது. அது கருப்பு வெள்ளைத் திரைப்படமே. இலங்கையின் முதல் வண்ணத் திரைப்படம் “ரன்முது துவ”, அதன் பின்னர் இன்றுவரை ஏராளமான சிங்களத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. தமிழ் மொழியில் திரைப்படங்கள் தயாரிப்பது மிக அரிதே. அதற்குக் காரணம் தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கமே. இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட “மண்” தமிழ் மொழி திரைப்படம் பலரது பாராட்டையும் பெற்றது.

இனியொரு புது யுகம்

இனக் கலவரங்களும் நீண்டகால யுத்தமும் எம் நாட்டை சீரழிக்காதிருந்திருந்தால் இன்று எம் தாய்த்திருநாடும் வளர்ந்துவரும் நாடாக இல்லாமல் வளர்ச்சி பெற்ற நாடாக இருந்திருக்கும் என்பதற்கு எம் நாட்டில் அமைந்திருக்கும் வளங்களும் மனித வலுவுமே சாட்சியாக அமைந்திருக்கும்.
எங்கெங்கு காணிணும் புதுமையடா எனும்படி புது யுகம் படைக்க இனிவரும் காலம் வழி சமைக்கும்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் தோன்றி
சிறந்ததும் இந்நாடே..!

ஆம்! இது எம் நாடு, இதன் சீரும் சிறப்பும் எம்மைச் சாரும். இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எம் கரங்களிலேயே உள்ளது!

Monday, July 6, 2009

பெண்ணியப் புயல்கள்



எது காட்டப்பட முடியுமோ அது சொல்லப்பட முடியாது, சொல்லப்படக் கூடியவையும் சில செயற்பாட்டுக் கட்டுக்குள் சிக்குண்டு போய்விடும். மனித உணர்வு இயல்பூக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. ஆனால் அவை தனக்கே என வரும்போதுதான் சாத்தியப்படுகிறது, அடுத்தவர் எனும் அடைமொழிக்குள் அடிபட்டு விடுகிறது.

பெண்ணியம் பேசும் ஆண்களும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கங்காட்டுவது முந்தைய என் சொற்களுக்கு வலுக்கூட்டுகிறது. இருக்க, சில பெண்களுங்கூட பெண்ணியக் கருத்துக்களுக்கு முரணானவற்றை முன்வைப்பது வருந்தற்குரியது. இங்கு பெண்ணியம் என்ற வார்த்தைக்கு ஒவ்வாத அர்த்தங்கொண்டு அவர்கள் அங்ஙனம் தம் கருத்துக்களை வெளியிடுவதைக்கூட அவதானிக்க முடிகிறது.
பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கட்டற்ற சுதந்திரத்தை மட்டுப்படுத்த முயல்வோரை பழமைவாதிகளா பண்பாடு பேண்வோரா என்பதை பட்டிமன்ற வாதங்கள் முடிவுக்குக் கொண்டுவரட்டும். பழைய இலக்கியங்கள் எடுத்தியம்பும் கற்பு இன்று அழுத்தப்பட முடியாது, அவ்வாறு நிகழுமாயின் விதவை மறுமணம் கூட ஒழுக்கக்கேடாகிவிடும். ஓரினச் சேர்க்கைக்கு இந்தியா ஒப்புதல் அழித்துள்ளமையினை சில பிரபலங்கள் வரவேற்றுள்ள நிலையில் இவை போன்ற உறவுகள் சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனப் பிறழ்வுகளின் வெளிப்பாடுகள் என்ற வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓய்வுக்கு வராதபோது இது குறித்துக் கருத்து வெளியிடுவது அறிவீனம்.

பெண்ணியம் குறித்து என்னோடு சொற்போர் தொடுத்த சிலருக்கு விளக்கங்கொடுக்குமுகமாகவே இதனை எழுதுகிறேன். அண்மையில் நான் வாசித்த மு.பொன்னம்பலம் அவர்கள் எழுதிய “விசாரம்” நூல் பெண்ணியம் குறித்து விசாலப்படுத்தி நிற்கின்றது.

உலக வளர்ச்சிக்கான உழைப்பில் அரைவாசிக்கும் மேலாகப் பங்களிப்பு நல்கும் பெண்கள் இன்றுள்ள ஆணாதிக்க முனைப்புக்கொண்ட அரசியல், சமூக, பொருளாதார நோக்கால் பின்தள்ளப்படும்போது அதற்கெதிராகத் திரள்வதில் தவறேதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. இருப்பினும் ஆண்களின் போராட்ட ஆற்றலினை பெண்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற ஐயப்பாடு தோன்றி நிற்க உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மு.பொன்னம்பலம் எடுத்துரைத்த கருத்துக்களை நோக்குவோமாயின் உயிரியல் ரீதியாக ஆண் என்பவன் அடக்கியாளும் வன்முறையுடையவனாகவோ, பெண் என்பவள் அடங்கிப்போகும் மென்தன்மை உடையவளாகவோ பிறப்பதில்லை. இத்தகைய குணங்களை சமூகமே அவர்களிடம் திணிக்கிறது. சமூகச் சூழலின் உருவாக்கமே ஆண்மைக் குணங்களும் பெண்மைக் குணங்களும்.

பெண் என்பவள் ஆண் ஒருவனின் சொத்தாகவே, போகப்பொருளாகவே கொள்ளப்படுகிறாள். அந்த சொத்தென்ற ஒன்றிலிருந்தே “கற்பு” போன்ற பல ஆணாதிக்க கோட்பாடுகள் பெண்கள் மேல் திணிக்கப்படுகின்றன. இவற்றின் மூலமே பெண்ணின் அடிமை சாசனம் எழுதப்பட ஏதுவாகிறது. ஆனால் இரு சாராருக்குமான கட்டற்ற சுதந்திரத்தையே பெண்ணியக் கோட்பாடுகள் வலியுறுத்தி நிற்கின்றன. உலகம் தழுவிய பெண்ணிய ஒழுக்கக் கோட்பாட்டின்படி கட்டற்ற விடுதலையும் அதன் வழி வரும் கட்டற்ற அன்பும் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஒரு சாராருடைய கருத்து. ஆனால் இவர்களின் எதிர்ப்பு காலாகாலமாக வந்த சமய, ஆசார வழிவந்த ஒழுக்கத்தின் அடிப்படையில் வந்தது. இதற்கும் பெண்ணிய விடுதலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றினாலும் இரண்டும் முரணானவையே.
ஆண்-பெண் இருபாலாரையும் ஒருவர் மற்றவரின் சொத்தாக, போகப்பொருளாக நினைக்க வைப்பதும், அதனால் ஏற்படும் நோக்கால் ஒருவர் மற்றவர் விவகாரங்களில் தலையிட வைப்பதும் இக்கட்டற்ற சுதந்திரத்தால் இல்லாமற் போகிறது. எஞ்சியிருப்பது அன்பு மாத்திரமே. கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டற்ற அன்பாக மாறலாம்.

மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் அதே கட்டற்ற சுதந்திரம் நிலவிய காலத்தில் தாய்-தனயன் உடலுறவு, தங்கை-சகோதரன் உடலுறவு என்ற கட்டற்ற போக்கு இருந்தது. இப்போதும் அதன் எச்ச சொச்சங்கள் இருந்து வருகின்றன. ஆனால் இவை மனித நாகரிகம் குழந்தைப் பருவகாலத்தில் ஏற்பட்ட ஒழுக்க முறைகள், இப்போது நாம் யார் என எம்மை நாம் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து வைத்திருக்கும் காலத்தில் பழைய நிலைக்கு திரும்பிப் போதல் ஏற்படாது, ஒரு சில புறநடைகளைத் தவிர!

கோதண்டம் இராமனுக்கு
கோடாரி பரசுராமனுக்கு
சக்கரம் கிருஷ்ணனுக்கு
கதாயுதம் வீமனுக்கு
காண்டீபம் அர்ச்சுனனுக்கு
காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு
ஆண்களை ஆயுதங்களுடனேயே
அவதரிக்கச் செய்தன!

பஞ்சப்புலவர் பாரதியின் காலம்வரை
பழைய சாதமே எங்களுக்கு பரிமாறப்பட்டது
நேற்றுவரை பெண்ணியப் புயல்கள்
அடுப்புக்குள்ளேயே புகையூதிக் கிடந்தன
வேலித் துவாரத்தினூடாகத்தான்
வெளியுலகைப் பார்த்தன! -( புதுவை இரத்தினதுரை)