Thursday, December 10, 2009

மெல்லச் சாகுமோ?

பூக்களைப் பாடும் காலம்
போனது நேற்றின் முன்னம்
இன்று நான் எதனைப்
பாடக் கூடும்?

இது ஒரு கவிஞனின் புலம்பல், பூக்களைக் காணாக் கவிஞனுக்கு இத்தகைய சோகம் நியாயமானதுதானே! நம்மை வாழவைக்கின்ற இயற்கை சிதைந்து வருகின்றது, நமக்கோ நமது ஆடம்பர வாழ்க்கைக்குள்தான் அக்கறை நிற்கிறது.

வானகமே...இளவெயிலே...மரச்செறிவே....

என்று பாடினார் பாரதி. இயற்கையின் எழிலைக் கண்ணுறாத காரணத்தினாலோ என்னவோ இன்றைய நகரத்துக் கவிஞர்களுக்கு எதைப் பாடுவதென்று தொpயவில்லை போலும்! இருபத்தொராம் நூற்றாண்டு எத்தகைய வழித்தடங்களை விட்டுச் செல்கின்றது பார்த்தீர்களா? இயற்கை அழிவுகள் மட்டும்தானே இமயமாய் நிற்கின்றது!

மனிதன் நிர்வாணமாய் இருந்தான்
இயற்கை மானமுடன் இருந்தது!
மனிதன் நாகரிகம் அடைந்தான்
இயற்கை நிர்வாணம் ஆனது!
– சிவதாசன்

நாகரிக உலகில் ஒரு புறம் குப்பைகள், பொலித்தீன்கள், இரசாயண உரங்கள் என்று நிலம் மாசடைந்து வர மறுபுறம் காடுகள் அழிப்பு, குடிநீர் பற்றாக்குறை நடைபோட, வாகன வரவுகளால் தன் வாழ்நாளைக் குறைத்து விஷமாகிக்கொண்டிருக்கும் காற்றும் ஓசோன் படல ஓட்டையும் பயமுறுத்திக்கொண்டிருக்க, நாமும் நம்முடைய பாதையில் பயணிக்கிறோம், வரவிருக்கும் விளைவுகளை அறியாமல்!

காற்று வெளியினிலே...

வானத்தையே நீ கிழித்துவிட்டாய்
இலை கிழிந்தால் நீ வேறிலை பெறுவாய்
தலை கிழிந்தால் தையல் இடுவாய்
உடை கிழிந்தால் ஒட்டுப் போடுவாய்
ஓசோன் கிழிந்ததே என்ன செய்குவாய்?

இது கவிஞர் வைரமுத்துவிற்கு வந்த சந்தேகம். ஓட்டுப்போட ஒன்றும் இல்லாததால்தானே திண்டாடுகிறோம்!

மூன்று ஒக்சிஜன் அணுக்களின் தொகுப்பே ஓசோன் மூலக்கூறு(O3). தாவரங்கள் உணவைத் தயாரிக்கும்போது வெளிவரும் ஒக்சிஜன் அணுவோடு வினைபுரிந்து ஓசோன் மூலக்கூறாக மாறுகிறது. பல ஓசோன் வாயுக்கள் இணைந்து ஒரு படலமாக அமைந்துள்ளது. இதுவே ஓசோன் படலம் எனப்படுகிறது. சூரிய ஒளி நம்மை வந்தடையுமுன் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டும் மகத்தான பணியை ஓசொன் படலம் செய்து வருகிறது. இப்படலத்தில்தான் குளோரோ புளோரோ கார்பனால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டையைப் பயன்படுத்தி புறஊதாக் கதிர்கள் நம்மை நேரடியாக வந்தடைகின்றன. இக்கதிர்கள்தான் பல தோல் வியாதி, புற்றுநோய்களை உருவாக்குகிறது.

யோசி மானிடனே!
ஓசோன் படல ஓட்டை தைக்க
ஊசி ஒன்று கண்டுபிடி!

மனிதர்கள் உணவின்றி ஐந்து வாரங்களும், நீரின்றி ஐந்து நாட்களும் வாழ முடியும். ஆனால், காற்றின்றி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வாழ முடியும். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் துகள்கள்தான் காற்றைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இன்னும் சில நாட்களில் போத்தல் குடிநீர் போல காற்றுப் பைகளும் எம் நகரத்துக் கடைகளில் கிடைக்கும் என நம்புவோமாக!

வீதிகள் விஷம் குடிக்கையில் - நீ
வீட்டிற்குள் பூக்ளை வளர்த்துப்
புண்ணியமில்லை!

நீரின்றி அமையா உலகு!..

காசைத் தண்ணீரைப்போல் செலவளிக்காதே என்பர் அன்று, தண்ணீருக்கும் காசை செலவளிக்க வேண்டியுள்ளது இன்று! வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்ணீர். பூமியில் 97 சதவீதம் கடல் நீரும் 3 சதவீதம் குடிநீரும் உள்ளது. மூன்றில் ஒரு சதவீதம் நீர் துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டியாகவும் ஒரு சதவீதம் பூமிக்கடியிலும் உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீதம் நீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக குடிநீரும் கழிவு நீராகி மரங்களின் மடிவில் நீரின் சுழற்சியும் நின்றுபோயுள்ளது.

அகன்ற ஆறு
அக்கரைக்குப் போக
ஓடத்திற்கு பதில் செருப்பு!

இது கவிஞர் அறிவுமதியின் அற்புதப் படைப்பு. நீர் வறண்ட ஆற்றின் அவல நிலையின் படப்பிடிப்பு!

இயற்கையின் இதயம்

மரங்களையும் காடுகளையும் இயற்கையின் இதயமென்றால் அதில் தவறில்லை. தன்னையே முழுமையாகக் கொடுக்கும் இயற்கையின் காதலி காடுகள் தான். சுற்றுப்புறக் காற்றை சுத்திகரிக்கும் சுந்தரிகள், மண்ணரிப்பு நோயை குணப்படுத்தும் மருத்துவர்கள், மேகத்தை நிறுத்தி மழையை வசூலிக்கும் அதிகாரிகள், ஓசொன் படலத்திற்கு வலு சேர்க்கும் வைட்டமின்கள் காடுகள். காடுகளைக் காப்பதால் மட்டுமே எம் நாடு இயற்கை சீற்றங்களான சூறாவளி, சுனாமி போன்றவற்றிலிருந்து காக்கப்படும்.

மரம் வெட்டி சீரழிக்கும்
கோணல் புத்தி மனிதனுக்கு
தலைவெட்டி தண்டணை
தந்தால்தான் வளர்ப்பானா?

Sunday, December 6, 2009

எயிட்சை நிறுத்து, சத்தியத்தைக் காப்பாற்று

எயிட்ஸ் தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதலாம் திகதி சர்வதேச அளவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு 'எயிட்சை நிறுத்து, சத்தியத்தைக் காப்பாற்று” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்நோயின் தாக்கம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் எயிட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டு நிகழ்ச்சிப் பிரிவின் (UNAIDS) இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேவிட் பிரிட்ஜர் அவர்களை நேர்கண்டோம்;.

உலகளவில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.4 மில்லியனாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வாறுள்ளது?
அதிகளவிலானோர் இந்நோய்த்தொற்றுடன் வாழ்கின்றபோதிலும் புதிதாக இந்நோய் தொற்றுவது குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. உலகளவில் அதிகரித்துக் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்நோய்த்தாக்கம் குறைவடைந்தே காணப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதும் மிகக் குறைந்தளவிலேயே இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுடையோர் குறித்த கடந்த ஆண்டிற்கான தரவுகள் உங்களிடம் இருக்கின்றதா?
அரசு, எச்.ஐ.வி / எயிட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டு நிகழ்ச்சிப் பிரிவு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கணக்கெடுப்பின்படி 3800 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கின்றனர். இலங்கையின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக அதாவது 0.1 சதவீதமாகவே இருக்கின்றது. இது உண்மையில் மிகவும் நல்லதொரு விடயம்.

இலங்கையில் எச்.ஐ.வியின் பாதிப்பு அதிகமாக உள்ள பிரதேசங்கள் எவை?
இதுதொடர்பில் இலங்கை பற்றிய போதுமான தகவல்கள் எம்மிடம் இல்லை. அண்ணளவாக 3800 முதல் 4000 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கின்றார்கள் என நினைக்கின்றோம். இதில் 1100 முதல் 1200 வரையிலான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் தொற்றுடன் இருந்தபோதும் தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என நாம் நினைக்கின்றோம்.

எச்.ஐ.வி எவ்வாறு தொற்றுகின்றது என்பது பற்றித் தெரிவிக்க முடியுமா?
எச்.ஐ.வி தொற்றுடையவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாலோ அல்லது அவர் பயன்படுத்திய ஊசியினைப் பயன்படுத்தினாலோ இந்நோய்த்தொற்று ஏற்படும். அத்துடன் மிகக் குறைந்தளவில் இரத்த மாற்றம் முறையிலும் இத்தொற்று ஏற்படுகின்றது.

அதிகளவில் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் யார்?
யார் இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில் உள்ளாகின்றனர் என்பது பற்றி தற்போதும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இதில் அதிகளவில் பாதிக்கப்படுவோர் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வோரும் பாலியல் தொழில் புரிவோரும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும் போதை ஊசிகளைப் பயன்படுத்துவோருமே. ஆனால் இத்தகையோர் தனிமைப்படுத்தப்படவில்லை. உதாரணமாக போதை ஊசியினைப் பயன்படுத்தும் எச்.ஐ.வி தொற்றுடைய நபருக்கு காதலியோ அல்லது மனைவியோ இருந்து அவர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம்.

இந்நோய்க்கு எவ்வகையான மருத்துவ வசதிகள் இலங்கையில் காணப்படுகின்றன?
மருத்துவப் பாpசோதனைக்கு உட்படும் தொற்றுடைய நபர்களுக்கு 2005ஆம் ஆண்டிலிருந்து இலங்கை antiretroviral (ART) எனப்படும் மருந்தை இலவசமாக வழங்கி வருகின்றது. இலங்கை அரசாங்கம் இந்த மருத்துவ சிகிச்சையினை எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவிற்கான சர்வதேச நிதியத்தின் உதவியுடன் வழங்கி வருகின்றது.

எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் எவை?
உங்களுக்கு இந்நோய் குறித்து சந்தேகம் ஏற்படுமிடத்து கண்டிப்பாக இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். காரணம் இந்நோய் தெளிவானதொரு அறிகுறியினை வெளிப்படுத்துவதில்லை. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு நீண்ட காலத்தின் பின்னர் கூட அதற்கான அறிகுறிகள் தென்படலாம். அதனால் நீங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஊசியினைப் பயன்படுத்தியிருந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருந்தாலோ கண்டிப்பாக மருத்துவ பாpசோதனைக்கு உங்களை உட்படுத்த வேண்டும்.

இலங்கையில் எங்கு எச்.ஐ.விக்கான பரிசோதனை நிலையங்கள் அமைந்துள்ளன?
கொழும்பில் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 நிலையங்களில் எச்.ஐ.விக்கான பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வேறு சில சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த பரிசோதனை நிலையங்கள் குறித்த தகவல்களை மக்கள் தேசிய எயிட்ஸ் திட்டம் (National AIDS program) எனும் இணையத்தளத்தின் மூலம் தொpந்துகொள்ள முடியும்.

சமூகம் தன்னைத் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கும் என்ற அச்சநிலை எயிட்ஸ் நோய் பற்றி வெளியில் தெரிவிப்பதற்குத் தடையாக இருக்கின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இந்த சமூகம் குறித்த அச்சம் காரணமாகத்தான் எச்.ஐ.வி தொற்றுடையவர்கள்கூட தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தவோ சிகிச்சையினைப் பெறவோ முன்வருவதில்லை. இவ்வாறு பயப்படத்தேவையில்லை, காரணம் தற்போது எயிட்ஸ் நோய் சிகிச்சையளிக்கக்கூடியதொன்றாக மாற்றங்கண்டு வருகிறது. இலங்கையில் இந்நோய்க்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

எச்.ஐ.வி குறித்த தவறான புரிந்துணர்வுகள் எவை?
எச்.ஐ.வி நோய் தொடுவதாலோ, ஒன்றாக வாழ்வதாலோ, சேர்ந்து பணியாற்றுவதாலோ பரவும் என்பது மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் தவறான புரிந்துணர்வாகும். இவ்வாறு நடப்பதற்கு சாத்தியமில்லை. இதனால் எமது அன்றாட வாழ்வில் எவ்வித ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.

எச்.ஐ.வி சவரக் கத்திகளால் (Shaving Blade) பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா?
இல்லை, வேறு சில பாலியல் தொற்றுநோய்கள் சவரக்கத்திகளால் பரவக்கூடியதாக இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக எச்.ஐ.வி அவ்வாறு பரவுவதில்லை.

Thursday, December 3, 2009

உயர்ந்த மனிதர்

புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐசக் நியூட்டனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் இருபது வருடங்களாகத் தொடர்ந்து உழைத்துத் தனது ஆராய்ச்சி முடிவுகளைக் கண்டறிந்தார். அதைப் பல காகிதங்களில் எழுதி வைத்திருந்தார். ஓரு நாள் ஆராய்ச்சி முடிவுகள் எழுதப்பட்ட காகிதங்களை மேசை மீது வைத்துவிட்டு வெளியில் உலாவச் சென்றார். மேசைமீது மெழுகுவர்த்தி ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த அறையில் அவரது செல்ல நாயான டைமண்ட் படுத்திருந்தது.
அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு நாய் அங்கும் இங்குமாகத் தாவிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. குதித்துக் குதித்து மேசை மீது பாய்ந்தது. ஓரு முறை அந்த மெழுகுவர்த்தியின் மீதே குதித்துவிட்டது. மெழுகுவர்த்தி சாய்ந்து அந்தக் காகிதங்களின் மேல் விழுந்தது. என்ன நடக்கும்? ஐசக் நியூட்டனின் இருபது வருட உழைப்பின் பலனான அந்தக் காகிதங்கள் கண நேரத்தில் எரிந்து சாம்பலாயின.
உலவச் சென்றிருந்த அவர் திரும்பி வந்தார். எரிந்துபோன காகிதங்களைக் கண்டு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேதும் இருக்க முடியுமா? எத்தனை வருட உழைப்பு அன்று வீணாயிற்று. யாராக இருந்தாலும் அந்த இடத்திலேயே அந்த நாயைக் கொன்றிருப்பார்கள். ஆனால் நியூட்டன் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை.
அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் நிலைகுலையவில்லை. பொறுமை அவரை ஆட்கொண்டது. மிகவும் பரிவுடன் அந்த நாயின் தலையை வருடினார். அன்புடன் சொன்னார், 'ஓ டைமண்ட், நீ என்ன காரியம் செய்துவிட்டாய்! இதன் மதிப்பு உனக்குத் தெரியுமா? என்று அமைதியாகக் கேட்டார். மீண்டும் எழுதத் தொடங்கினார். அதை முடிக்க மேலும் பல வருடங்களாயின. அந்த நாயிடம்தான் அவருக்கு எத்தனை கனிவு! வாய்பேசாதா அந்தப் பிராணி செய்த பிழையைப் பொறுத்ததன் மூலம் அவர்தாம் எவ்வளவு உயர்ந்துவிட்டார். அறிவில் மட்டுமல்ல பொறுமையிலும் அவர் உயர்ந்தவரே.
உயர்ந்தவர் குணத்தாலும் மனத்தாலும் பொறுமையாலும் உயர்ந்திருக்க வேண்டுமேயல்லாது, பணத்தாலன்று என்பதை நான் கற்றுக்கொண்டதும்கூட இந்தக் கதையைப் படித்ததன் பின்னர்தான்.

துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு) இணையாக வேறுமருந் தில்லை


எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் வைரசால் தாக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ் எனும் ஏமக்குறைவு நோய். இவ்வைரஸ் மனித உடலின் நோய் எதிர்ப்புக் கலன்களைத் தாக்கி எதிர்ப்பு சக்தியை இல்லாதொழிக்கும். மனிதரின் நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும். எச்.ஐ.வி தொற்றுடையவரை எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனாலும் எச்.ஐ.வி தொற்றுடைய அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாகி இறப்பைச் சந்திக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத இரத்தம், பயன்படுத்திய ஊசிகளைச் சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்தல் மற்றும் நோய்த்தொற்றுடைய தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்குத் தொற்றுதல் எனும் முறைகளில்தான் பெரும்பாலும் இந்நோய் பரவுகின்றது. எச்.ஐ.வி வைரசால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிருந்து 10 ஆண்டுகள் வரை இந்நோய்க்கான அறிகுறிகள் தெரியாமலேயே வாழ்வர். எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்திலதான்; இவ் ஆட்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை உணர முடியும்.

பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகத்தான் இந்நோய் 80 வீதமான அளவில் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதுதான் கவலைக்குரிய விடயமாகும். உலகளவில் 33.4 மில்லியின் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் UNAIDS இன் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்தகவலின்படி கடந்த 2008ஆம் ஆண்டில் உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாகவும் 430,000 சிறுவர்கள் பிறக்கும்போது எச்.ஐ.வி தொற்றுடனேயே பிறந்ததாகவும் ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 4.7 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆசியாவில் மாத்திரம் 330,000 பேர்வரை இந்நோய் காரணமாக மரணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் 1081 பேர் வரையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 197 பேர் வரை உயரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நோயாளிகளில் பெரும்பாலானோர் தலைநகரான கொழும்பில் வாழ்பவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச அளவில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் கடந்த 8 வருடங்களில் 17 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

சமூகப் பழக்கவழக்கங்கள் மூலம் இந்நோய் பரவாது என்பதால் இந்நோயாளியை சமூகத்திலிருந்து விலக்கிவைக்கவேண்டிய தேவை இல்லை. கை குலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடல், முகாம்களில் ஒன்றாக வாழ்தல், பொதுக்கழிப்பறைகள், நீச்சல்குளம், இருமல், தும்மல், கொசுக்கடி என்பவற்றின் மூலம் இந்நோய் பரவுவதில்லை. இதுவரை இந்நோயைக் குணப்படுத்த மருந்துகள் எவையும் கண்டறியப்படாத காரணத்தால் எம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

திருமணத்திற்கு முன்னர் தகாத உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல், தெரியாத ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது ஆணுறையைப் பாவித்தல், விபத்துக்களின் காரணமாக இரத்தம் ஏற்றும்போது அது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் பெருமளவில் இந்நோய்த் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அத்தோடு ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்துவதானால் அதனை கிருமிநீக்கி (sterilize) பயன்படுத்துவது சிறந்ததொரு வழிமுறையாகும், பயன்படுத்தாமல் இருப்பது அதைவிட சிறந்தது.

இந்நோய் தொற்றுடையவருக்கு ஆரம்பகாலத்தில் எந்தவொரு அறிகுறிகளும் தென்படாது என்பதால் இரத்தப் பரிசோதனைகள் மூலமாக மட்டும்தான் இந்நோய்த்தொற்று குறித்து அறிந்துகொள்ள முடியும்.

எச்.ஐ.வியால் தாக்கப்பட்ட அனைவருக்கும் சாதாரண மனிதரைப் போன்றே சகலவிதமான உரிமைகளும் உண்டு. கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வதுடன் ஒருவனுக்கு ஒருத்தி எனும் எமது பண்பாட்டு நெறிமுறைகளை வாழ்வியல் நெறிமுறைகளாகக் கொண்டு வாழ்ந்து இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்!.

துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!

- கவிஞர் வைரமுத்து