Sunday, January 31, 2010

அகதியின் புலம்பல்




ஐயோ...
நான் மூச்சுத் திணறிச்
சாகப் போறன்...
இந்த கௌரவங்கள்
என்ற சாவைத் தடுக்குமே?

வெளியால எவ்வளவு
காத்து வீசுது!
தவழ்ந்து...தடவி...
மெல்ல அணைத்து
சீறிச்சுழன்று பூட்டி வைத்து
புளித்து நாறும்
இந்த அறையில்
கிடந்து புழங்கிச் சாக
என்னால் ஏலாது!

இந்த நாலு சுவரையும்
கிடுகு வேலியையும் தாண்டி
நான் வாழப்போறன்
காத்தோட கைகோத்து
சுதந்திரமா உலாவி
நான் வாழவேணும்!

Friday, January 22, 2010

கருவறைக் கண்ணீர்

முகம் தெரியா தாயே...
உன் கருவறையிலிருக்கும்
கடைசி மகள் எழுதும்
கண்ணீர்க் கடிதம்!

உன் வயிற்றுச் சுவர்களில்
என் சுட்டுவிரல் தீட்டும்
ஓவியம் புரிகிறதா?

நீ பிரசவித்த என்
முன்னவர்களைக் காணோமென்று
நீ கதறும் ஒலி என்
காதுகளுக்குக் கேட்கிறது!

காணாமல் போன சகோதரம்
காலில்லா அப்பா
பூப்பெய்திய அக்கா
ஓட்டை வீட்டில்
கிளிந்த துணியுடன் நீ
இதற்கிடையில் நான் ஏனம்மா?

(நன்றி சுசி)

Thursday, January 7, 2010

தொடர் விழுங்கல்

மேய்ந்துகொண்டிருந்த எறும்பைப் பூச்சியொன்று விழுங்கியது. அந்தப் பூச்சியைத் தாவிப் பிடித்து விழுங்கியது அருகிலிருந்த பாச்சை ஒன்று. தாவி விழுங்கிய பாச்சையைப் பல்லி ஒன்று வாலை முறுக்கியபடி விழுங்கியது. பல்லியின் தலையைத் தாவிக் கவ்வியது தவளை, பல்லியோடு மல்லுக் கட்டிக் கொன்று தின்ற தவளையைக் குறி வைத்துப் பாய்ந்தது பாம்பு. விழுங்கிய தவளையை உருண்டு பிரண்டு செரிக்க வைத்துக்கொண்டிருந்த அந்தப் பாம்பு ஒரு பாம்பாட்டியிடம் வசமாக மாட்டிக் கொண்டது.

'இதோ... பாம்பை விழுங்கப் போகிறேன்... விழுங்கப் போகிறேன்” என்று ஒலி பெருக்கி ஒலிக்க, தாரை தப்பட்டை முழங்க, பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, தன் கையிலிருந்த பாம்பைச் சுருட்டி, மடக்கி வாயில் போட்டு விழுங்கினான் அந்தப் பாம்பாட்டி. உயிரோடு தொண்டைக் குளிக்குள் போனது அந்தப் பாம்பு.

இந்தத் தொடர் விழுங்கலைப் பார்த்து அதிர்ந்துபோன பாமரன் ஒருவன் கடவுளைக் கூப்பிட்டான். பக்தனின் குரலுக்கு செவிசாய்த்த பகவான் அவன் முன் தோன்றினார். பகவானிடம் பக்தன் பயத்துடன் கேட்டான், 'அடுத்து மனிதனை விழுங்கக் காத்திருக்கும் படைப்பு எது?” பகவான் சொன்னார், 'வேறு எது? இன்னொரு மனிதன் தான்!”

விழுங்கி வாழும் கூட்டத்தில் விழுங்கத் தெரியாமல் வாழ்பவன் பைத்தியக்காரனா? அடுத்தவற்றை அடித்துச் சாப்பிட்டே பழகிவிட்டன உலகப் படைப்புக்கள் அனைத்தும்!

Monday, January 4, 2010

எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்...

தேநீர் குடித்த கோப்பை, பால், காய்கறிகள் வாங்கிய பைகள், குழந்தையின் உணவுக் குவளைகள், நாகரிக நாற்காலிகள், விலையுயர்ந்த வீட்டுத் தளபாடங்கள் அப்பப்பா.... எங்கெங்கு காணினும் அத்தனையும் பிளாஸ்டிக்.

வீடுதோறும் வந்து குவிந்து, மண்ணுக்குள் மக்காமல் சிக்கி, மழைநீர் கசிவை மறித்து, பாதாள சாக்கடையில் பதுங்கி, குப்பையோடு எரிந்து விஷக்காற்றாய் மாறி!... சில நேரங்களில் மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டு மறுபடியும் வீட்டுக்கே வருகிறது. இதை உருவாக்கிய மனிதனுக்கு உருக்குலைக்கத் தெரியவில்லை. பொலித்தீன் ஆக்கிரமிப்பில் தொடங்கி அழகாய் விரிந்துவிட்டது பிளாஸ்டிக் உலகம்.

மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில்
தென்மேற்குப் பருவக்காற்று வீசக்கூடும்,
மன்னிக்கவும் இது தென்மேற்கு பிளாஸ்டிக் காற்று!


தன்னையே முழுமையாக அழிக்கும் வல்லமை உடையவைகள் என்பதை உணராமல் மனிதன் கண்டுபிடித்தவற்றுள் ஒன்றுதான் பிளாஸ்டிக் (PVC – Poly Vinyl Chloride). மண்ணில் மக்குவதற்கு இவை பல இலட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும்போதும் அவற்றை எரிக்கும்போதும் டயாக்சின் (Dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை உட்கொள்ளும் மனிதருக்கு சில புற்றுநோய்களும் சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் சார்ந்த நோய்களும் உண்டாகிறது. ஓரு மனிதன் 4PG/KG உடல் எடைக்குமேல் இவ்வாயுவை நுகர்ந்தால் பேராபத்து விளையும். ((PG என்பது Piccogram, 1 Piccogram = 1/10, 12 Gram. 50 கிலோ எடையுள்ள ஒருவர் 20 Piccogram டயாச்சினை சுவாசித்தால் மரணம் நிச்சயம்) இதனைத் தடுக்க பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களையும் பொலித்தீன் பைகளையும் சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்பலாம்.

பூமி தன்னை ஒரு பூஞ்சோலையாக நம்மிடம் ஒப்படைத்தது. நாம் தான் அதை பாலைவனமாக மாற்றி வருகிறோம். 460 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த நம் பூமியை ஒரே நிமிடத்தில் அழித்துவிடும் வல்லமை படைத்த அணு ஆயதங்களைப் போட்டிபோட்டுத் தயாரித்து வருகின்றோம். நம்மை வாழ வைக்கின்ற நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்திவிட்டு நாம் எங்கு போவது?

நம்முடைய ஒவ்வொரு செயலும் செயற்கை சாதனங்களும் பூமியின் தட்பவெப்ப நிலையை மாற்றி வருகிறது. துருவப் பிரதேச பனிக்கட்டிகள் தட்பவெப்பநிலை மாற்றத்தால் உருகி கடலுடன் கலக்கிறது. இதனால் கடற்பரப்பு அதிகரித்து கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் இன்று விசனம் தெரிவிக்கின்றனர். 2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.5 மீட்டருக்கும் அதிகமாக உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பாதிக்குமேல் கடற்கரையை ஒட்டி வாழ்கிறார்கள். இவர்கள் நிலை 2050இல் என்னவாகும்?