Thursday, August 26, 2010

என் அம்மாவுக்கு…
























கரு ஏற்று உருத் தந்த உத்தமியே…
உன் கருவறை எனக்கு சிறையல்ல
நான் கைதியாகவே காலமெல்லாம்
உன்னுள் சிறைப்பட்டிருக்க விரும்புகிறேன்.

அம்மா என் ஆன்மாவே - நீ
ஆயிரம் ஆண்டவனுக்கும் ஈடில்லை!
என் உயிரெழுத்தின் உண்மைப் பொருள் நீயம்மா!

உலக மொழிகளை எல்லாம்
அணிதிரட்டிச் சொன்னாலும் - அங்கு
முற்றுப் பெறாமல் நிற்கும் உன் அன்பு!

எனக்கு பிறப்பொன்றைக் கொடுத்த
உன் பிறப்பிற்காய் இன்று
இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்..!

(27.08 - என் அன்பு அம்மாவின் பிறந்த நாள்!)

Monday, August 23, 2010

எந்த இடத்தில் விழுந்திருக்கிறோம்?

இளைஞர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு வேட்டையாடுவது என்றால் அவ்வளவு விருப்பம். எனவே, அவர்கள் இருவரும் அடிக்கடி காட்டுக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டனர்.

இரண்டு காட்டு எருமைகளையும் விமானத்தில் ஏற்ற முடியாது, எடை அதிகம் என முரண்டு பிடித்தார் விமான ஓட்டுனர். உடனே இளைஞர்கள் இருவரும், “கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே!” என்றனர்.

வேறு வழியின்றி இரண்டு எருமைகளையும் ஏற்ற சம்மதித்தார் ஓட்டுனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறி வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்த இளைஞர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் மெல்ல வெளியே வந்தனர்.

ஒருவன் கேட்டான் 'இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?”

அடுத்தவன் பதில் சொன்னான் : 'போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்!”

இது வேடிக்கை கதை தான்! ஆனால், விளக்குகின்ற உண்மை மிகப் பெரியது. அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் அடிக்கடி விழவேண்டி இருக்கும். தவறு செய்யாதவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்கள் மகான்கள்! ஆனால், செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது மகா தவறு!

அதே தவறைத்தான் திரும்பவும் செய்கிறோம் என்பதை செய்து முடித்து வினையை அனுபவிக்கும்போது தான் மெல்ல விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், விழுந்த இடத்திலேயே திரும்ப விழும்போதுதான் அட ஏற்கனவே இங்கே தானே ஒரு முறை விழுந்தோம் என்ற ஞாபகம் வருகிறது.

முதல் முறை செய்வது தான் தவறு, திரும்பவும் செய்தால் அது தப்பு! “தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும், தப்பு செய்தவன் வருந்தியாகனும்!” (என்னைப் போல!)

Thursday, August 19, 2010

ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….

1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)

பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!

2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)

இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்ததேதிதான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்ததேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?! அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.

3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)

உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம். இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!

4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption)

உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!

5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home)

அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!

6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)

பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)

7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised)

இதுவரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்! அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதிமுறைப்படுத்தியிருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!

நன்றி
padmahari.wordpress.com

Wednesday, August 18, 2010

அனுபவம் புதுமை….அவனிடம் கண்டேன்!

அலுவலகம் முடிந்து அவசர அவசரமாக கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணிக்கும்  பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

 சற்று நேரத்திலேயே பஸ் கிளம்பிவிட்டது. டிக்கட் வாங்குவதற்காக பேர்ஸில் பணத்தைத் தேடினேன். எனக்கு நேரம் சரியில்லையோ என்னவோ சில்லறை குறைவாக இருந்தது. பேர்ஸை அலசிப் பார்த்ததில் 13 ரூபாய் மட்டுமே இருந்து.

புறக்கோட்டையிலிருந்து தெஹிவளை ஜங்ஷனுக்கு போவதற்கோ 18 ரூபாய் வேண்டும். அந்த 13 ரூபாய் தவிர எனது பேர்ஸில் வேறு ஆயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. என்ன செய்வது?

இலேசாக தலையைத் தூக்கி கன்டக்டர் வாலிபனா? வயோதிபனா? எனப் பார்த்தேன். அப்பாடா வாலிபன், திட்டமாட்டான் என்று மனசை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தேன்.

பொதுவாகவே சில்லறை கொடுக்காவிட்டால் திட்டுவது கொஞ்சம் வயசான கன்டக்டர்கள் தான். வாலிபன் தந்த நம்பிக்கையில் பஸ்ஸின் வேகத்திற்கேற்ப என் மனதின் வேகமும் அண்மைக்காலமாக நடந்த சில சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தது. ஏதோ ஒரு இழப்பும் வெறுமையும் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க கண்கள் வெளியில் தெரிந்த விளம்பரப் பலகைகளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

அருகில் வந்த கன்டக்டர் மிஸ் என்றதும் கையில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த 1000 ரூபாய் தாளை அவனிடம் நீட்டினேன். அவ்வளவுதான், அவன் பாட்டுக்கு திட்ட ஆரம்பித்துவிட்டான். ஏதேதோ பேசினான், ஒன்றுமே புரியவில்லை,நல்லவேளை எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது! இருந்தாலும் அக்கம் பக்கத்து சீட்களில் இருந்தவர்கள் என்னை ஏதோ மாதிரியாகப் பார்க்க இவன் வில்லங்கமாக ஏதோ திட்டுகிறான் என்று விளங்கிக்கொண்டேன். ரொம்பவே வெட்கமாகவும் இருந்தது. ஒன்றும் பேசாமல் அவனையும் பார்க்காமல் ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன். டிக்கட்டின் பின்னால் எழுதிக் கொடுத்துவிட்டு மீதிப் பணம் தராமல் முன்புறமாக சென்றுவிட்டான்.

தருவியா? தரமாட்டியா? என்று அவனை ஒரு தடவை பார்த்துவிட்டு சரி இறங்க இன்னும் நேரம் இருக்கு தானே, பார்த்துக்கொள்வோம் என்று இருந்தேன். பஸ்ஸின் முன்புறமும் பின்புறமும் மாறி மாறி போய் வந்த கன்டக்டர் என்னை அவ்வப்போது பார்த்து முறைத்துவிட்டு சென்றான். என்ன கேவலம் டா இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த கன்டக்டரை இரண்டு மூன்று தடவைகள் ஏற்கனவே பஸ்ஸில் பார்த்த ஞாபகமும் வந்தது. இருந்தாலும் மீதிப் பணத்தை தராமல் விட்டுவிடுவானோ என்று பயம் வேறு. கொழும்பு பஸ்களில் சரியான சில்லறையைக் கொடுத்து டிக்கட் எடுக்காமல் அதிகமாகக் கொடுத்தோமா அது காந்தி கணக்கில தான் சேரும்.

தெஹிவளை நெருங்கிவிட்டதால் சரி திட்டினால் வாங்கிக் கொள்வோம் என நினைத்துக்கொண்டு அருகில் வந்த அவனிடம் “சல்லி தென்டகோ” என்று எனக்கு தெரிந்த சிங்களத்தில் கேட்டேன். “சல்லி நே” என்றுவிட்டு பின்னால் சென்றுவிட்டான். ‘இன்டைக்கு மிச்சக் காசை வாங்காமல் இந்த பஸ்ஸில இருந்து இறங்கி போக வேண்டி வந்திடுமோ’ என்று பயந்து மனதுக்குள் அவனைக் கண்டபடி திட்டினேன். இறங்கவேண்டிய இடமும் வந்துவிட்டது. கன்டக்டர் படியில் நின்றுகொண்டிருந்தான். கையை நீட்டினேன். அழகாக காசை மடித்து கையில் வைத்தான். அப்பாடா என்று வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டு அவன்மேல் நம்பிக்கையில்லாமல் பணத்தைப் பார்த்தேன்.

18 ரூபாய் போக 982 ரூபாய் இருந்ததோடு ஒரு டிக்கட்டும் இருந்தது. அதை எடுத்த வீசப் போகும்போது அதில் ஏதோ எழுதியிருப்பது தெரிந்தது. படித்துப்பார்த்தேன். I Love You. I Want to talk with you. This is my mobile Number என்று அவனது போன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. இதுக்குத்தானா என்னை இந்தப்பாடு படுத்தினாய் என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டது, அவன் படியில் நின்று என்னை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். இலேசாக சிரித்துவிட்டு வீட்டிற்கு செல்ல அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தேன்.

Thursday, August 12, 2010

விடைபெறுகிறோம்!

“மீண்டும் வாழ்வோம்’’ என்னும் பத்திரிகையையும் வானொலி நிகழ்ச்சியையும் எம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து தம் சொந்த இடங்களை இழந்து “இடம்பெயர்ந்தவர்கள்” என்ற முத்திரையுடன் முகாம்களில் தஞ்சம் புகுந்த எம் தமிழ் சொந்தங்கள் பலருக்கும் பரிட்சையமான சொல் இந்த “மீண்டும் வாழ்வோம்”

இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் பணியாற்றி வந்த “மீண்டும் வாழ்வோம்” பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் வானொலியில் ஒலிபரப்பான குறிப்பிட்ட சில நிகழ்சிகளின் தயாரிப்பாளராகவும் சில நேரங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு உண்மையில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை தேசிய சேவை, சூரியன் FM பிறை மற்றும் அநூர் FM போன்றவற்றில் ஆரம்பத்தில் எமது “மீண்டும் வாழ்வோம்” ஒலிபரப்புச் சேவை இடம்பெற்றிருந்தாலும் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை தேசிய சேவையில் மாத்திரம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. என்றாலும் 13.08.2010 உடன் தனது ஒலிபரப்பு சேவையை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது “மீண்டும் வாழ்வோம்.”

சூழ்நிலை காரணமாக ஊடகத்துறையை விட்டு அரசியல்துறைக்குள் பிரவேசித்திருந்தாலும் “மீண்டும் வாழ்வோம்” எனக்கு ஊடகத்துறையில் கொடுத்த அனுபவங்களை அளவிட முடியாது. அதை விட எம் இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவுக்கிடைத்த சந்தர்ப்பம் திருப்தியைக் கொடுத்தது.

எவ்வளவோ நேர அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றியிருந்தாலும் சக ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்பு காரணமாக சலிப்பற்று, களைப்பற்று பணிபுரிய முடிந்தது. எஸ். ரமணன் மற்றும் வியாஸா கல்யாணசுந்தரம் போன்ற இலங்கையின் ஊடகத்துறை ஜாம்பவான்களுடன் பணியாற்றியமை புதுத் தெம்பைக் கொடுத்தது. “மீண்டும் வாழ்வோம்” இல் பணியாற்ற வாய்பளித்த எஸ். ரமணன் அவர்களுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

நிகழ்ச்சித்திட்டம் (Project) முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் பிரிந்துவிட்டோம். என்றாலும் எம் ஒவ்வொருவாரின் மனதிலும் “மீண்டும் வாழ்வோம்” என்னும் சொல் நிலைத்து வாழும்.

சின்னச் சின்ன சந்தோசங்களும் சண்டை சச்சரவுகளும் கூடிக் குதூகலித்த நாட்களும் நெஞ்சில் கனத்து கண்ணீர்த் துளியாய் வெளிவர விடைபெறுகிறோம்!