
மனிதரின் உள்ளங்கள் தம் உள்ளகத்தே கொண்டுள்ள எண்ணங்கள் ஆயிரம்! எம்முடைய மனம் தான் இந்த எண்ணங்களை உற்பத்தி செய்கின்றன. கடலிலிருந்து அலைகள் எழுவதைப்போலவே எப்போதும் எம் மனங்களிலிருந்து எண்ண அலைகள் எழுகின்றன. இந்த அலைகளை அணைகட்டித் தடுக்கவியலாது, எனினும் நெறிப்படுத்தலாம்!
“எண்ணங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்கின்றன, குறிக்கோள்கள் செயலை நோக்கிச் செல்கின்றன, செயல்கள் பழக்கங்களை உருவாக்குகின்றன, பழக்கங்கள் குணங்களைத் தீர்மானிக்கின்றன, குணம் நம்முடைய விதியை நிச்சயிக்கின்றது,” என்றார் டிரையன் எட்வர்ட்ஸ். அவரது கூற்றுப்படி எம்முடைய எண்ணங்கள்தான் விதியைத் தீர்மானிக்கின்றன.

இது இவ்வாறிருக்க நாம் மனிதர்களுக்கு மதிப்பளிப்பதைவிட அவர்களது எண்ணங்களுக்கு அதீத மதிப்பளிக்கிறோம். “அவர் எம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ?” என்ற எண்ணம் எம்மில் பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் தோன்றியிருக்கக் கூடும். பலரது எண்ணங்களுக்கும் பயந்தே பல விடயங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். சில நேரங்களில் முன்னின்று காரியங்களை நிகழ்த்தி நல்லெண்ணங்களை சம்பாதித்துக்கொள்ள எத்தனிக்கின்றோம். ஆனால் இவை இரண்டுமே பிரச்சினைக்குரியவைகளாகிவிடுவதுண்டு! காரணம் எதிலும் முந்திக்கொள்ளவும் கூடாது, ஒதுங்கி நிற்கவும் கூடாது. முந்திக்கொள்ளும்போது ஒதுக்கப்படலாம், ஒதுங்கி நிற்கும்போது மறக்கப்படலாம். இவற்றிற்கிடைப்பட்ட நிலையில் நின்றுகொள்ளும்போது பிரச்சினைகள் குறைகின்றன.
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றார் வள்ளுவர். உயர்வான எண்ணங்கள் தான் எம்மைச் செதுக்கும் சிற்பிகள். எண்ணச் சிற்பிகள் செதுக்கும் சிற்பங்கள் நல்லனவாகவோ தீயனவாகவோ அமைவது எண்ணங்களின் தன்மையைப் பொறுத்தது. எண்ணங்கள் எத்தகையதாகவிருப்பினும் அவற்றிற்கு வலிமை இருப்பதாகவே விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூறுகின்றது.
திருடன் ஒருவன் காட்டில் நடந்து செல்லும்போது களைப்பின் காரணமாக மரமொன்றின் அடியில் சாய்ந்துகொண்டான். ஓரு பஞ்சு மெத்தை ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிணான். பஞ்சு மெத்தை வந்தது, ஆச்சரியப்பட்டான். தலையணை இருந்தால் நல்லது என நினைத்தான், தலையணை வந்தது. இதமான காற்று வீசினால் உறக்கம் வரும் என நினைத்தான். காற்று வீசி கண்ணயரும் நேரத்தில், ஐயோ! புலி ஏதேனும் வந்து கொன்றுவிடுமோ என பயந்தான், அவ்வளவுதான் புலி வந்து அவனைக் கொன்றுவிட்டது. இது நிஜக்கதையல்ல, நீதிக் கதையாக சிறுவர்களுக்கு சொல்லப்படுவதுதான். இருந்தாலும் எண்ணங்களை உயர்வாக எண்ணும்படி எடுத்தியம்புகிறது. எனவே ஏற்றந்தரும் வாழ்வை எதிர்பார்க்கும் எவரும் தம் எண்ணங்களில் ஏற்றங்காண வேண்டும்.

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்....
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!”
எனப் பாடினார் பாரதி. எண்ணங்கள் முடமாகிக் கிடந்தால் வெற்றியின் முகவரி தென்படாது. உங்களது எண்ணச் சிறகுகளை எந்தளவிற்கு விரித்து விசாலப்படுத்துகின்றீர்களோ அந்தளவிற்கு வெற்றிக்கான பாதையும் விசாலப்படுகிறது. தடைகளையும் விடைகளாக்கும் வலிமை எண்ணங்களுக்கு உண்டு. உலகில் பயனற்றவை எது என்றால் அது நம் வீண் எண்ணங்கள் தான்! அவற்றை விடுத்து நல்லதே எண்ணுங்கள். வாழ்க்கைப் பரிணாமத்தில் எண்ணங்கள் தான் ஏணிப்படிகள். எண்ணங்கள் உயர்கையில் எம் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
தூய்மையான இதயம் இல்லாத எவரும் இறைவன் சந்நிதியை நெருங்க முடியாது என்றார் காந்தியடிகள். கதையொன்று நினைவில் வருகின்றது.
அடர்ந்த காட்டின் நடுவே மூன்று மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவை மிகவும் பருமனாகவும் அழகாகவும் இருந்தன. மூன்று மரங்களுக்குமே ஒவ்வொரு கனவு இருந்தது. முதல் மரம், உலகில் விலை மதிப்பற்ற பொக்கிஷம் தன்னுள் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணியது. இரண்டாவது மரம், உலகில் யாருக்கும் கிடைக்காத புகழும் பெருமையும் தனக்கு வேண்டும் என நினைத்தது. மூன்றாவது மரம், உலக மனிதர்கள் மத்தியில் மதிப்பும் மேன்மையும் பெறவேண்டும் என விரும்பியது.

காலப்போக்கில் மரங்களின் நிலை பரிதாபமாக முடிந்தது. காட்டிற்குள் வந்த மனிதர்கள் அந்த மரங்களை வெட்டிச் சாய்த்தனர். மரங்கள் தம் நிலையை எண்ணி வேதனைப்பட்டன. இந்த மரங்களை மனிதர்கள் பலகைகளாக்கினர். முதலாவது மரத்தின் பலகைகளைக் கொண்டு மாட்டுத் தீவனத் தொட்டி ஒன்று செய்து வைத்தனர். இந்தத் தொட்டியில்தான் உலக இரட்சகர் இயேசு பாலன் கிடத்தப்பட்டார் என்றும் இரண்டாவது மரத்தின் பலகை கொண்டு செய்யப்பட்ட படகில் தான் இயேசு தன் சீடர்களுடன் கடலில் பயணித்து புயலை அடக்கினார் என்றும் மூன்றாவது மரத்தால் செய்யப்பட்ட சிலுவையில் தான் உலக மீட்பர் உயிர் நீத்தார் என்றும் அதன் மூலம் அந்த மரம் மக்கள் வணங்கும் சிலவை மரமாக உயர்ந்தது என்றும் கிறிஸ்த்தவக் கதை ஒன்று கூறுகின்றது. மூன்று மரங்களுக்குமே தமது உயர்ந்த எண்ணம் ஈடேறியது.

போர்க்களங்களில் நடக்கின்ற யுத்தங்களைக் காட்டிலும் எம் உள்ளங்களில் இருவேறு எண்ணங்களுக்குள் இடம்பெறுகின்ற யுத்தங்கள் உக்கிரமானவை. மோதலின் முடிவில் மேலோங்கி நிற்கும் எண்ணத்தின் விளைவே எம் செயற்பாடுகள். இச்செயற்பாடுகள்தான் எண்ணங்களின் வெளிப்பாடுகள். ஒரு கட்டிடத்தின் உயரமும் ஸ்திரதன்மையும் அதிகரிக்க வேண்டுமானால் அதன் அத்திவாரத்தின் ஆழம் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறே உயர்வை எதிர்பார்க்கும் எம் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் உயர்வான எண்ணங்களை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.
வெற்றி தரும் பரிசுகளை விட தோல்வி தரும் பாடங்கள் உயர்ந்தவை என எண்ணுங்கள். முடியும் என்ற எண்ணம்தான் எதையும் முடித்துக்காட்டும் என திடமாக நம்புங்கள். நல்லெண்ணங்களை விதைத்து நல்லதை அறுவடை செய்யுங்கள். தீய எண்ணங்களை அப்புறப்படுத்துங்கள்!
“பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே!”
No comments:
Post a Comment