Sunday, February 12, 2012

ஏன் என்னைக் காதலிக்கிறாய்?


ஏன் என்னைக் காதலிக்கிறாய்?

கனங்களால் கணங்கள் நிறைந்து, காத்திருந்து காதல் வளர்த்து, காலம் பார்த்து அதைச் சொன்னதும் கண்டிப்பாய் இந்தக் கேள்வி மறுமுனையில் தொக்கி நிற்கும்!

காதலுக்குக் காரணம் தேடி காலங்காலமாய் ஓடிக் களைத்தவர்கள் பட்டியலில் நாமும் சேர்ந்து கொண்டு காரணம் கண்டுபிடிக்க விரைகிறோம்!

என்னைக் கேட்டால், காரணத்தோடு வரும் காதலை நான் அந்தப் பெயரில் அழைப்பதில்லை.

ஒரு முறை தான் காதல் வரும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், முதற்காதல் மூச்சு நிற்கும் வரை மனதின் எங்கோ ஓர் மூலையில் மரணிக்காமல் பதுங்கிக் கிடந்து, சமயம் பார்த்து சற்றுத் தலைதோக்கி, விழியோரமாய் நீரை வரவழைக்கும்.

மணித்துளிகள் விரைந்தோடி நாட்களும் மாதங்களும் வருடங்களாகிக் கடக்கும் போது உங்கள் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பாருங்களேன், சொல்லியதும் சொல்லாததுமாய் எத்தனை காதல்கள் கண்களுக்குள் கருக்கொள்ளும்!??

தனித்திருக்கும் பொழுதுகளில் காதலுக்காய் தவித்த தருணங்கள் உங்கள் நினைவுகளில் நிழலாடியதுண்டா? கண்களை மூடி கண்ணீர்த்துளிகளால் அந்த நினைவுகளுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியதுண்டா? மற்றவர்களிடம் சொல்லி மனதையாற்றிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து புளுங்கிப்போனதுண்டா?

அப்படியானால், இந்தக் காதலர் தினத்தை நீங்கள் நினைவு தினமாக அனுஷ்டிக்கலாம் அல்லவா? இது தவிரவும், காதலர் தினத்தில் எப்படியாவது காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று கிளம்பும் போது, கண்டிப்பாய் இந்தக் கேள்வி உங்களை நோக்கி தொடுக்கப்படும்.

“ஏன் என்னைக் காதலிக்கிறாய்?”

உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போவீர்கள்!!!

ஆனால், தைரியமாகச் சொல்லுங்கள், காரணம் பார்த்துக் காதல் வருவதில்லை, காரணத்தோடு வருமென்றால் அது காதலில்லை.


இனி காரணம் தேடி அலையாதீர்கள்!

Monday, October 17, 2011

சூனியப் பிரபஞ்சம்


























பிறந்த பொழுதிருந்தே
திறந்த மேனியாய் இருக்கும்
இந்தப் பிரபஞ்சம்
எதைச் சொல்ல எத்தனிக்கிறது?

ஏதுமற்ற ஏதிலியாய்
என்றோ ஓர் நாள் சூனியப் பிரதேசத்தில்
ஓசையின்றி ஓய்ந்துபோகும்
உயிர்கள் என்றா?

பிரசவித்தவை எல்லாம்
பிணங்களாய்ப் போனபின்னும்
சாவுச் சங்கிலி மட்டும்
சரித்திரமாய்த் தொடர்வதேனோ?

பாதைகளை விழுங்கி
பயணங்களைப் பறித்துக்கொண்டு
நிர்க்கதியாய் விடப்பட்டாலும்
உடைந்த சிறகுகள் படபடக்கிறது…

மாற்றங்காண மனது
மடியும் வரை துடிக்கிறது
முடியும் வரை முயன்றும்
பயனின்றிச் சரிகிறது…

சுவாசத்தைத் துறந்து
சாயும் பொழுது தான்
சங்கதி புரிகிறது
சகலமும் சூனியமென!!!

Monday, August 29, 2011

இந்திய (நீதிச்)சட்டம் தூக்கு மேடையில்


முருகன் சாந்தன் அறிவு மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என தொண்டை கிழியக் கத்தும் காங்கிரஸைச் சேர்ந்த தங்கபாலுவிற்கு சோனியா காந்தியின் விதவைக் கோலமும் ராகுல் மற்றும் பிரியங்காவின் துயரமும் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகிறது? ஈழத்தில் அமைதிப்படை என்ற போரில் அராஜகங்கள் இடம்பெற்ற போது இந்த மனுசன் எந்த தேசத்தில் இருந்தாராம்? (ஐயா தங்கபாலு ஏதோ தங்க பால் (பந்து) ஒன்னு தரையில அடிபட்டு அங்க இங்க ஆடுற மாதிரி உன் பொழப்பும் ஆடப்போகுது பார்த்துக்கொள்ளும்!)

பேட்டரி வாங்கிக்கொடுத்தார்கள் என்ற குற்றம் கூட ஒழுங்காக நிரூபிக்கப்படாத நிலையில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை என்பது அநீதியான செயல். அந்த பேட்டரிகள் தான் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எவரும் இதுவரை நிரூபிக்கவில்லை. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நிரபராதிகள் மூவரும். ஒரு ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான். ஆனால் இவர்கள் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனையையும் எதிர்கொண்டிருப்பது இந்தியச்சட்டத்தில் எந்தப் பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்தவர்கள் தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்.

அம்மா நினைத்தால் முடியும் என்றார்கள். ஈழத்தாய் என திடீரென அவதாரம் எடுத்த அம்மா தற்போது தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார். நைஸாக நழுவிக்கொள்ளும் வித்தையெல்லாம் இவர்கள் அரசியலுக்கு வருமுன்னே கற்றுக்கொண்டு விட்டார்கள். இவர்களை நம்பிப் புண்ணியமில்லை.

ராஜிவ் கொலை பற்றி நியாய அநியாயங்கள் பலருக்கும் தெரிந்த விடயமே. ஈழத்திற்கு இந்தியா இழைத்த அநியாயங்களுக்கு அடையாளங்களாகவே இந்த மூவரையும் என்னால் காண முடிகிறது. இவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்திருப்பதன் மூலம் இந்திய நீதிச்சட்டத்தை இவர்கள் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை!

Wednesday, August 24, 2011

அகதியாக நான்…

காலம் தந்த காயங்களை காலம் தான் ஆற்றும் என்பார்கள். ஆனால், அந்தக் காலத்தாலும் ஆற்ற முடியாத காயங்களும் உண்டு என்பதை எனக்கு அகதி முகாம் வாழ்க்கை தந்த அழியாத காயங்கள் நினைவூட்டுகின்றன. குழந்தையாக இருந்த பொழுதே அகதி அந்தஸ்த்துப் பெற்று அண்டை நாடான இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தவள் நான். கடற்சீற்றங்களுக்கு மத்தியில் நீண்டு விடிந்த இரவுப் பயணத்தின் பின் மண்டபம் முகாமை அடைந்து அங்கிருந்த அதிகாரிகள் எம்மை பதிவு செய்து முகாம்களுக்குள் அனுப்பிய போது சீரழிவுகள் தெரியாத சிறுபிள்ளையாக இருந்தாலும் வீட்டை விட்டு வந்த துயரத்தின் சிணுங்கலுடன் முகவரியறியா முகாம்களுக்குள் நாங்கள் ஐக்கியமானது அடி மனதில் இன்றும் நிழலாடுகிறது.

உப்புமா தான் இந்தியாவின் தேசிய உணவு என்பதை உணர வைத்தது அங்கு அன்றாடம் வழங்கப்பட்ட உணவு வகையறாக்கள். அந்த நேரத்தில் இலவசமாக கிடைக்கப் பெற்ற உணவு என்பதால் அது தான் அமிர்தமாகத் தோன்றியது எம்மில் பலருக்கு. அங்கிருந்து வேறு முகாம்களுக்கு அடிக்கடி மாற்றப்பட்ட பொழுதுகளில் எல்லாம் எமது இருப்புகள் கேள்விக்குறியானதோடு படிப்பிலும் இடி விழுந்தாற் போல் ஆனது. அடிக்கடி பாடசாலை மாற்றம் வேறு…

தமிழகப் பாடசாலைகளில் எமக்கு பெரிதாக கட்டண சலுகைகள் எவையும் இருக்கவில்லை. ஒரு சில பாடசாலைகள் மாத்திரம் குறைந்த சலுகைகளை வழங்கியதோடு சில கிறிஸ்தவ சபைகளுடாக பாடநூல்களும் ஏடுகளும் கிடைக்கப்பெற்றன. முகாம்களுக்கு அருகில் மட்டுமே தொழில் செய்ய எமது குடும்பத் தலைவர்களுக்கு அனுமதி கிடைத்ததன் பயனாக அன்றாட செலவுகளை சமாளிக்க மட்டுமே போதுமான வருமானம் கிடைத்தது. பாடசாலைக் கட்டணங்களுக்கோ இதர செலவுகளுக்கோ இங்கிருந்து கொண்டு சென்றிருந்த அம்மாவின் நகைகளை விற்க வேண்டி இருந்தது. பல நேரங்களில் பாடசாலைக் கட்டணங்கள் கட்டாதவர்கள் வரிசையில் எமது அகதி மாணவர்கள் சகிதம் நானும் நின்றதும் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு திருப்பியனுப்பப் பட்டதும் நினைவிலிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல்கால பிரசாரங்களின் போதும் ஏனைய நிகழ்வுகளுக்கான வருகைகளின் போதும் ராஜீவ்காந்தியை உதாரணம் காட்டி எமது இளசுகளும் குடும்பத் தலைவர்களும் வெளியில் செல்ல முடியாதவாறு முகாம்களுக்குள் முடக்கப்பட்டபோதெல்லாம் எமக்காகக் குரல் கொடுக்க எந்த செழியர்களும் கோமான்களும் இருக்கவில்லை. அத்தோடு அன்றாட தொழில்வாய்ப்புகளும் கேள்விக்குறியாக்கப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்பட்ட சலுகைகள் யானைப் பசிக்கு சோளப்பொறி கதையாகத் தான் இருந்தது. அரச கோடவுண்களில் (களஞ்சியசாலைகளில்) வைக்கப்பட்டு எலிகளுக்கு மிஞ்சிய அரிசி கிடைக்கப்பெற்றதுவே எமக்குக் கிடைத்த பெரிய வரம்!!!

10 அடி வீட்டிற்குள் தான் பகலிரவுக் காட்சிகள் என்ற பரிதாப நிலையில் பாழ்பட்டுப் போனது சில இளசுகளின் மனசுகள். ஆம்! அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த அந்த வீடுகளுக்குள் தான் அனைத்தும் என்ற நிலையில் சீரழிவுகள் எவ்வாறு சீர்தூக்கியிருக்கும் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. இதன் விளைவாக இளவயது திருமணங்களும் கர்ப்பங்களும் நிகழாமல் இருக்கவில்லை.

இதுதவிரவும் பாடசாலையில் அகதி நாய்கள் என்று எவரோ சொன்னார்கள் என்பதற்காக உள்ளுர்காரர்களுக்கும் எமது ஈழத்தமிழர்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்தப் பாடசாலைக்கே திரும்பிப் போக முடியாத சம்பவம் நேர்ந்த பொழுது தான் “ஓ நாம் அகதிகள்இ தாழ்த்தப்பட்டவர்கள்” என்ற எண்ணம் என்னுள் எட்டிப்பார்த்தது. ஆனாலும் படிப்பில் இருந்த ஆர்வம் அப்பொழுது குறைந்துவிடவில்லை. மீண்டும் வேறொரு பாடசாலைக்குச் சென்று படிக்க ஆரம்பித்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தார் சீட்களினால் அமைக்கப்பட்டிருந்த 10 அடி வீடுகள் அனைத்தும் படபடவென வெடித்துத் தீப்பிழம்பாகச் சிதறி முகாம் முழுதும் எரிந்து சாம்பலானது. அன்றாடம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேகரித்து வீட்டில் அம்மா வாங்கி வைத்திருந்த பொருட்கள் அத்தனையும் அரை மணி நேரத்தில் வெறும் சாம்பலாகக் காட்சியளித்தது. அழுது வடித்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு உடுத்திய துணியோடு ஒப்பாரி வைத்து அழுத தாய்மார்களின் கண்ணீரும் அவர்களைத் தேற்றத் தெம்பில்லாமல் தேம்பிக்கொண்டு நின்றிருந்த ஆண்களின் ஆதரவற்ற நிலையும் இன்றும் என் கண்களில் நீரை வார்க்கச் செய்கிறது. எவரோ சமையல் செய்யும் போது தீ பரவி வீடுகள் தீக்கிரையானது அப்போது தான் தெரிய வந்தது.

அருகிலிருந்த அடுத்த முகாமிற்கு மாற்றப்பட்டு சில தொண்டு நிறுவனங்களாலும் தமிழக அரசினாலும் வழங்கப்பட்ட பொருட்களையும் உடைகளையும் வைத்து வாழ்க்கைய ஆரம்பிக்க நினைத்த எமது வாழ்வில் மீண்டும் விதி விளையாடிச் சிரித்தது. அந்த அகதி முகாமும் ஒரே வாரத்தில் எரிந்து சாம்பலானது. மீண்டும் முகாம் மாற்றம்.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து படித்துப் பட்டதாரியானதே எமக்கும் எமது பெற்றோருக்கும் பெரிய சாதனையாகப்பட்டது. திடீரெனத் தோன்றிய சில தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெற்ற நிதியில் அவர்களது செலவுகள் போக எஞ்சியவை எமது முகாம் மாணவர்களை அப்பொழுது தான் வந்தடையத் தொடங்கியது. அவர்களுக்கு எங்கிருந்து எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதையோ அவை எதனடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதையோ எம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு சென்றார்களே தவிர வேறு எதையும் யோசிக்கும் நிலையில் எம்மவர்கள் இருக்கவில்லை.

அவ்வப்போது இலங்கையில் இடம்பெறும் யுத்தங்களால் மாண்டுபோன தமது சொந்தங்களின் எண்ணிக்கையை பொதுக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் பதறிப்போவார்கள். சிறு கூட்டங்களைப் போட்டு சில பெரிசுகள் ஏதோ பெரிதாக ஈழத்துக்கும் முகாமுக்கும் செய்யப் போவதாக அலட்டிக் கொள்வார்கள். எங்கிருந்தோ சில வௌ;ளைக்காரர்கள் வந்து காயப்பட்ட நெஞ்சுக்கு களிமண் பூசுவதாகக் கூறிக்கொண்டு சில விளையாட்டு மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்திச் செல்வார்கள். தொண்டு நிறுவனங்கள் தூக்கிக்கொண்டு வரும் பொருட்களைப் பெற்று சிலர் பூரித்துப் போவார்கள். இது தான் அங்கு அன்றாடக் காட்சி.

காலப்போக்கில் முகாம்களுக்குள் சில மாற்றங்களும் ஏற்படத்தான் செய்தது. பல படித்த இளைஞர் யுவதிகள் உருவானார்கள். அவர்கள் மூலமாக சில நல்ல திட்டங்களும் முகாம்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நான் இருபது வருட இந்திய வாசத்தில் பார்த்த அகதி முகாம்களுக்கும் தற்போதுள்ள முகாம்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. இலங்கை வந்து சில வருடங்களின் பின்னர் நான் வாழ்ந்த முகாமிற்கு ஒரு முறை சென்றிருந்த போது அனைத்துமே மாறிப் போய் காட்சியளித்தது. எமது கலை கலாசாரமெல்லாம் காணாமல் போய்விட்டது என்றும் கூறலாம். இலங்கையரும் இந்தியரைப் போலவே நடை உடையில்; மாறிப்போயுள்ளனர்.

சிலர் இலங்கைக்குத் திரும்ப எண்ணியுள்ளபோதும் பலர் திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளனர். காரணம் தமது பிள்ளைகள் பலர் இந்தியர்களைத் திருமணம் முடித்துக்கொண்டு அங்கேயே வாழத் தொடங்கிவிட்டது தான்.

இன்று ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இந்தியத் தமிழர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சுவிடத் தோன்றுகிறது. தமிழன் என்ற உணர்வால் உந்தப்பட்டு எமக்கு உதவியளித்த இந்தியத் தமிழர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள் தான் என்பதையும் என் மனது எனக்கு தெளிவுபடுத்தாமல் இல்லை. அங்கு நான் சந்தித்த எமக்கு உதவிய பல நல்ல உள்ளங்களையும்; நான் மறந்துவிடவில்லை. அரசியல் இலாபங்களுக்காக ஈழப்பிரச்சினை பயன்படுத்தப்படுவதை அறியாதவர்கள் தான் அங்குள்ள அப்பாவித் தமிழ் பொது மக்கள்.

ஒவ்வொரு ஈழத்தமிழனின் வாழ்வும் ஷேக்பியரின் துன்பவியல் நாடகங்களை விடக் கொடூரமானது தான். அவையெல்லாம் எழுதப்பட்டால் இன்றைய கவிஞர்களும் திரைப்பட இயக்குனர்களும் அவற்றிற்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள்.

இறுதிக்கட்ட போரின்போது எமது இனம் சந்தித்திடாத இன்னல்கள் இல்லை என்பதை சகலரும் அறிவர். இந்த யுத்தங்கள் தரும் தீர்வுகள் தான் என்ன? உலகில் எங்கெல்லாம் யுத்தங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் என்னைப் போல் பல அகதி உருவாக்கப்படுவதை அறிகிறேன். யுத்தம் என்பதே வேண்டாம் என்று தான் கனவிலும் யாசிக்கிறேன்.

ஐயா அரசியல் கோமாளிகளே, உங்கள் இலாபத்திற்காக எங்களை சீரழிக்காதீர்கள். முடிந்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் இங்குள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கலாம். தமிழக மக்கள் உண்மைகளைப் புரிந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது நீங்கள் எல்லாம் காணாமல் போவீர்கள்இ கவனம்!!!

Wednesday, July 13, 2011

இது ரோபோக்களுக்கு…











ரோபோ ஒன்று
என்னுடன் பேசியது…
என் குறைகளை - அது
பட்டியலிட்டது!


பிடிவாதக்காரி என்பதற்காய்
பிடிக்கவில்லையாம்
பிதற்றியது!
பிழை என்மீதல்ல
பிடிவாதம் - என்
திடகாத்திரம்!


கோபம் அதிகமாம்…
குறைபட்டுக்கொள்ள
நான் தயாரில்லை
உணர்வற்ற ஜடமாய்
பிறக்க நேர்கையில்
குறைத்துக் கொள்கிறேன்!


வாயாடி நான் என
வாதாடியது…
வருத்தமில்லை,
வாயுள்ள பிள்ளை
பிழைத்துக் கொள்ளுமாம்!


நட்பு வட்டாரம்
நல்லதில்லையாம்…
துயரங்களின் போது
தோள்கொடுக்கும் உறவுகளை
தொலைக்கச் சொல்கிறது!


பொய்யுரைத்தேனாம்…
புனைக்கதைகள் சொல்லி
புகழ் சேர்க்க - நான்
புத்தகம் எழுதவில்லை
புரிந்துகொள்ள அதற்கு
புத்தி போதவில்லை!


நடத்தையில்
நம்பிக்கை இல்லையென
நாசூக்காய்ச் சொன்னது…
சிலம்புடைத்து
மதுரையை எரித்த
கண்ணகியை மட்டும் தான்
கற்புடையவள் என்றால்
காலம் தான் இதற்கு
பதில் சொல்ல வேண்டும்
என் காதலன் ரோபோவே..!!!

Thursday, July 7, 2011

Wednesday, June 1, 2011

எல்லைகளைத் தாண்டி…

இனம், நிறம், மதங்களைக் கடந்தது காதல் என சரியாக சொல்லிச் சென்றுள்ளார்கள். வயது எல்லைகளற்றது காதல் என்பதையும் இதில் இணைத்திருக்க வேண்டும் என சொல்லத் தோன்றுகிறது.

வயது கூடிய பெண் தன்னை விட வயது குறைந்த நபர் ஒருவரை மணம் முடிப்பதை ஆங்கிலத்தில் cougar என்கின்றனர். இந்த cougar ஜோடிகளை இன்று எம் சமூகத்தில் இனங்காண்பது மிக சாதாரணமாகிவிட்டது. இவ்வாறான திருமண பந்தங்கள் கலாசார சீரழிவுகளைக் காட்டுகிறது என ஒரு சாரார் சாடினாலும் காதல் இந்த எல்லைகளையெல்லாம் கடந்தது என மறுசாரார் வாதிடுகின்றனர்.

இந்த வாதப் பிரதிவாதங்களையெல்லாம் மீறி திருமணம் முடித்துக்கொண்டு பல பிரபலங்கள் இன்று மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரமே விவாகரத்துப் பெற்றுக்கொண்டு விலகியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டில் வெளியான “Wake up sid” என்ற திரைப்படத்தின் மையக் கருத்து இந்த cougar காதல் தான். ரன்பிர் கபூர் தன்னை விட வயது முதிர்ந்த கொன்கோனா சென் ஷர்மாவைக் காதலிப்பதைக் காண்பதற்கு திரையரங்கு முழுதும் ரசிகர் கூட்டம் திரண்டிருந்தது.

அவ்வளவு பெரிய வயது வித்தியாசம் இல்லாவிட்டாலும் 1 வயது வித்தியாசத்திற்காகத் தன்னை மறுத்த த்ரிஷாவைக் காதலித்த சிம்புவின் காதல் வெற்றி பெறாவிட்டாலும் விண்ணைத் தாண்டி வருவாயா படம் அமோக வெற்றிபெற்றது.

ஹோலிவுட் பிரபலங்கள் பலவும் இவ்வாறான திருமண பந்தங்களில் இணைந்துள்ளார்கள் என்பது எம்மில் பலரும் அறிந்த விடயம் தான். அண்மையில் அவ்வாறு இணைந்த ஜோடி தான் டெமி மூர் மற்றும் அஷ்டன் குட்ச்சர் (15 வயது வித்தியாசம்).

சுசான் சரன்டன் மற்றும் டிம் ரொபின்ஸ் (12 வயது வித்தியாசம்)
மரியா கெரி மற்றும் நிக் கென்னோன் (10 வயது வித்தியாசம்)
மெடோனா மற்றும் ரிச்சி (10 வயது வித்தியாசம்)

இப்படி பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில பிரபலங்களும் கூட தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்கள். உதாரணமாக

சயிப் அலிகான் - அம்ரிதா சிங் (12 வயது வித்தியாசம் - பிரிந்துவிட்டார்கள்)
சச்சின் டென்டுல்கர் - அஞ்சலி டென்டுல்கர் (5 வயது வித்தியாசம்)
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் (2 வயது வித்தியாசம்)
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா (2 வயது வித்தியாசம்)
நர்கிஸ் - சுனில் தத் (1 வருட வித்தியாசம்)

இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய பிரபலங்கள் அல்லாதவர்கள் பலர் நம் நாட்டில் இருந்தாலும் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில் வெட்கப்படுகின்றார்கள் என்ற நிலைதான் நிலவுகிறது. இவ்வாறான திருமண பந்தங்கள் ஒரு புறம் பெண்களின் சுதந்திரப் போக்கையே பிரதிபலிக்கிறது. பாரதியின் கனவை மிஞ்சிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது போலும்.

இந்தத் திருமணங்களை எம்மில் எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள், எத்தனை பேர் மறுக்கின்றீர்கள் என்பதற்கான புள்ளிவிபரப் பட்டியல் என்னிடம் இல்லை. ஆனால், மருத்துவ ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாவிட்டாலும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் ஒரு அன்பான, புரிந்துணர்வு மிக்க காதல் இந்தத் தடைகளையெல்லாம் தாண்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!