Saturday, January 23, 2016

E Numbers எனும் சேர்பொருட்களும் கண்ணுக்குத் தெரியா அபாயங்களும்மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

என்றார் திருவள்ளுவர். உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அளவோடு உண்டால் உயிர் வாழ்தலுக்கு தொல்லை ஏதும் நேராது என்பது இதன் பொருள்.

உணவையே மருந்தாகக் கொண்ட நிலை மாறி, உடற்சத்திற்காகவன்றி நாச்சுவைக்காக உண்ணும் பழக்கம் வலுத்து வருகின்றது. ஆனால், நாச்சுவைக்காக சேர்க்கப்படும் சுவையூட்டிகளின் குணநலன்கள் பற்றி எம்மில் பலரும் கருத்திற்கொள்வதில்லை.

பொருட்கொள்வனவின் போது காலாவதித் திகதியை உற்று நோக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்ட நிலையிலும் கூட, Ingredients எனப்படும் சேர்பொருட்கள் தொடர்பில் இன்னும் பலருக்கு தெளிவில்லை. இதில் திடுக்கிடும் உண்மை நிலவரம் என்னவென்றால், சேர்பொருட்களில் சொல்லப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் பலவும் உண்ணத் தகுதியற்றவை என்பதுடன் உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பனவும் கூடத்தான்!
இதிலும் சிக்கலான நிலை என்னவென்றால், சேர்பொருட்களில் சொல்லப்பட்டுள்ளவை என்னவென்பதை சாதாரணர்கள் அறியாதிருப்பது தான். அத்தோடு, உணவுச் சேர்க்கைகளில் சொல்லப்பட்டுள்ள நிறமூட்டிகள் மற்றும் இரசாயனங்களின் பயன்பாட்டு அளவீடு நாட்டிற்கு நாடு மாறுபட்டுக் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், நாம் உட்கொள்ளும் உணவின் சேர்பொருட்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. சில நாடுகளில் உண்ணத் தகுதியற்றவை என தடை செய்யப்பட்டுள்ள இரசாயனங்களும் சுவையூட்டிகளும் வேறு சில நாடுகளில் குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொள்ளும் உரிமம் பெற்றவையாகக் காணப்படுகின்றன.

இன்னும் சில உணவு தயாரிப்பு நிறுவனங்களோ, தடை செய்யப்பட்டவற்றைக்கூட சட்டத்திற்கு அமைவாகக் கையாளும் தந்திரோபாயங்களைக் கொண்டு இலாபாமீட்டி வருகின்றன.

உதாரணமாக உணவுப் பொருட்களின் சேர்பொருட்கள் பட்டியலில் இடம்பெறும் Additives or E numbers/ International Numbering System for Food Additives எனப்படும் INS இனைக் குறிப்பிடலாம். ஐரோப்பிய ஒன்றியத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இதனை E Codes என்றும் கூறுகின்றனர். இதில் E 100 முதல் E 1521 வரையான குறியீடுகள் காணப்படுகின்றன. இந்தக் குறியீடுகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு இரசாயனமும் வெவ்வேறு தன்மையுடையன. சில உணவுடன் சேர்க்கப்படும் அனுமதி வழங்கப்பட்டவை, சில குறிப்பிட்டளவு சேர்த்துக்கொள்ளலாம் எனும் வகையறாவைச் சேர்ந்தவை. இன்னும் சில நச்சுப் பொருட்கள், உண்ணத் தகுதியற்றவை (Dangerous Additives). 

 

இந்த E numbers அல்லது  தான் உணவுப்பொருட்களிலுள்ள நிறம், சுவையூட்டி, பதனச்சரக்கு, ஒக்சிஜனேற்றி, கூழ்மமாக்கி மற்றும் பால்மமாக்கிகளின் அளவூட்டினை சுட்டி நிற்கின்றன.

கொள்வனவு செய்யும் பொருட்களின் பின்புறம் Ingredients பகுதியை உற்று நோக்கினால் சிலவற்றில் இந்த E numbers இனைக் காண முடியும். நச்சுப் பதார்த்தமும் கூட இந்த E numbers வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அது எத்தகைய தன்மையது என்பதை அவதானிக்கவோ அறிந்து கொள்ளவோ எம்மில் பலருக்கும் நேரம் வாய்ப்பதில்லை. இருப்பினும், உணவு நிறுவனங்களால் எமக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதுதான்.

நச்சுப் பதார்த்தம் சேர்க்கப்பட்டிருக்கிறதே என நீங்கள் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கோ, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கோ செல்வீர்களானால், பெரும்பாலும் தாங்கள் எச்சரிக்கை வழங்கியிருப்பதாகக் கூறி தப்பித்து விடும் நிலையே காணப்படுகின்றது.

அதுவும் ஒரு உணவு சுவையூட்டிதான் என எண்ணிக்கொண்டு உட்கொள்வோமேயானால் பாரிய உடற்குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் நாம் முகங்கொடுக்க நேரிடும்.

எல்லா E இலக்கங்களுமே உடலுக்கு பாதகமானவையல்ல, உகந்தவையும் உண்டு. என்றாலும், சில E இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பதார்த்தங்களைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.பாதகமான சில E Numbers...

E621 – monosodium glutamate : MSG என அறியப்பட்ட இதனை சுவையூட்டியாகப் பயன்படுத்துகின்றனர். இது தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல், தசை வலி, படபடப்பு போன்ற ஆரம்ப நோய்க்குறிகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பதார்த்தம் ஆகும். என்றாலும், சில நிறுவனங்களின் சுவையூட்டி பக்கெட்டுகளில் E621 குறிப்பிடப்பட்டிருப்பதை இனிமேலாவது அவதானிக்க மறக்காதீர்கள்.

E951 – aspartame : இதுவொரு செயற்கை இனிப்பூட்டி. இதனை சில குறை கொழுப்பு உணவுகள், சர்க்கரைப் பானங்கள்,  தின்பண்டங்கள், இனிப்பு வகைகளில் சேர்க்கின்றனர். PKU எனப்படும் Phenylketonuria உள்ளவர்கள் இதனைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இதன் பாதகமான பக்க விளைவுகளைக் கருத்திற்கொண்டு சாதாரணர்களும் தவிர்த்து விடுவது சிறந்தது.

E211 – sodium benzoate : பதனிடும் பொருளாக மாஜரின், சலட் வகைகள், சோயா சோஸ், இனிப்பு வகைகள் மற்றும் மென்பானங்களில் இது சேர்க்கப்படுகின்றது. குழந்தைகளில் இப்பதார்த்தம் hyperactivity இனை ஏற்படுத்தும் எனவும் பெரியவர்களுக்கு ஆஸ்த்துமா அல்லது ஒவ்வாமையினை ஏற்படுத்தும் எனவும் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

E151 – black PN / brilliant black BN : இதுவொரு கறுப்பு செயற்கை சாயம். சில பொருட்களில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி, நோர்வே, ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தடை செய்துள்ள போதிலும் வேறு சில நாடுகள் பாவித்து வருகின்றன. இது பரவலாகப் பலரிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்ததன் விளைவே மேற்குறிப்பிட்ட நாடுகள் தடை விதித்தமைக்கான காரணமாகும்.

E133 – brilliant blue FCF : இதுவொரு நீல நிற செயற்கை சாயமாகும். சில பொருட்களில் நீல நிறத்திற்காகப் பாவிக்கப்படுகின்றது. ஆஸ்திரியா, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே ஆகிய நாடுகள் இதனை முற்றாக தடைசெய்துள்ளன.

E213 – calcium benzoate : உணவு மற்றும் மென்பான வகைகளின் நீடிப்புத் தன்மைக்காக (நீண்டகால பாவனைக்காக) இந்தப் இரசாயனத்தை சேர்க்கின்றனர். இதுவும் பரவலாக ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.

இந்தத் தரவுகளை ஐக்கிய இராச்சியத்தின் Food Standards Agency தனது உத்தியோபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தவிர சில E Numbers இன் உள்ளடக்கங்கள்....

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு


Codex Alimentarius, World Health Organisation (WHO) எனப்படும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனம், Food and Agriculture Organization (FAO) எனப்படும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றினால் இந்த ENumbers/ INS வரையறுக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment