பெண்கள் மீதான வன்முறைகளில் பாதிக்கப்படுகிறவளும், குற்றம் சுமத்தப்படுகிறவளும் ஏன் பெண்ணாகவே இருக்கிறாள்? இதற்குப் பின்னால் இருக்கும் ஆணாதிக்க மனநிலையை என்ன செய்வது என 'த ஹிந்து' கேட்டிருந்த கேள்விக்கு சிலர் தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் சாராம்சத்தைப் பாருங்கள்...
- பெண் என்பவள் எப்போதும் பாதிக்கப்படக் காரணம் மதம், இனம் அடிப்படையிலான கட்டமைப்பு.
- பெண்களின் சாதனைகள் நேரடியாகவும் பல தருணங்களில் தந்திரமாகவும் மறைக்கப்படுகின்றன.
- ஆணாதிக்க மனநிலை ஒருவர் மனதில் சிறு வயதில் இருந்தே விதைக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்றே மாறியிருந்தாலும் பெண்ணுக்கான சொத்துரிமை, வேலைக்கான கூலி என அனைத்தும் பெண்ணுக்குப் பாதகமாகவே இருக்கிறது.
- பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே உறுதிசெய்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இன்னும் இந்தச் சமூகம் இருக்கிறது.
- பெண்கள் மன உறுதியில் ஆண்களைவிட பல மடங்கு பலம் பொருந்தியவர்கள். ஆனால், பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே கருதும் போக்கு காட்சி ஊடகங்களில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
- ஆண்களின் பார்வையில் போகப் பொருளாகவே பெண் தெரிகிறாள்.
- பெண்ணுக்குப் பாதுகாப்பு தருகிற நல்ல சட்ட திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்.
- தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும்.
- ஆண்மை என்பது எந்தப் பெண்ணுக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும்.
- குற்றவாளிகளுக்குக் காலம் கடத்தாமல் தண்டனை வழங்க வேண்டும்.
- கற்பு என்னும் அளவீட்டை ஆண்களுக்கு வகுக்காதது ஏன்? அதிலேயே புரிந்துவிடுகிறது இந்த ஆணாதிக்க சமூகத்தின் சூட்சுமம்.
- பெண்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
- பெண்ணை இரண்டாம்தர பிரஜையாகப் பார்க்கும் எண்ணத்துக்கு சமாதி கட்ட வேண்டும்.
- ஆணுக்கு உடல் வலிமை எனில், பெண்ணுக்கு மன வலிமை. வீட்டிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளை மட்டம்தட்டி வளர்ப்பதை நிறுத்த வேண்டும்.
- பெண்ணே ஆதி சக்தி என்பதை உணரச் செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுத்தர வேண்டும்.
- ஆணைவிட பெண் எந்த விதத்திலும் தாழ்ந்தவள் அல்ல. சொல்லப் போனால் ஆணைவிட பெண்தான் ஒரு படி மேலானவள். ஆனால் ஆண் செய்கிற தவறுக்கும் பெண்ணே பாரம் சுமக்க வேண்டிய கட்டாயம்.
- பாலியல் வன்முறைகளுக்குப் பெண்களே காரணம் என்று குதறிக் கொண்டிருப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது.
- தன்னை நிராகரித்த பெண் மீது அமிலத்தை வீச இந்த ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஒரு பெண் தன் உரிமைகளையும் நியாயங்களையும் தட்டிக் கேட்காதவரை இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாகவே இருக்கும்.
- ஒரு ஆணின் மனதுடன் பெண்ணும், ஒரு பெண்ணின் மனதுடன் ஆணும் ஓரளவாவது நடந்தால் நிச்சயம் சமுதாயம் மாறும்.
- நம் சமூகத்தினருக்குப் பாலினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- குடும்பத்தில் ஆண் குழந்தைகளை ஒழுக்க நெறியுடன் வளர்க்க வேண்டும்.
- பெண் பிள்ளைகளும் சமூகத்தில் சம உரிமையுடன் வாழப்பிறந்தவர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதைச் சிறு வயது முதலே ஆண் குழந்தைகளின் மனதில் பதியம்போட வேண்டும்.
- பாதுகாப்பற்ற பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரைக் கண்டறிந்து உரிய காப்பகங்களில் சேர்த்து வேலைவாய்ப்புடன் கூடிய கட்டமைப்பை உருவாக்குதல் அவசியம்.
- பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான மனத் துணிவை பெண்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பாதிக்கப்படும் பெண்களில் பலரும் தங்களது பாதிப்பை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்தான், ஆண்களை தைரியமாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளில் ஈடுபட வைக்கிறது.
- பெண் பலவீனமானவள், எதிர்த்துப் போராடும் உடல் தகுதி இல்லாதவள் என்ற பொய் விவாதங்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டதுதான் இந்த ஆணாதிக்க மனோபாவத்துக்குக் காரணம்.
No comments:
Post a Comment