
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி உலகளாவிய ரீதியில் சிறுவர் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்குரிய உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நவம்பர் மாதம் 20ஆம் திகதி சர்வதேச சிறுவர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுவது எம்மில் பலரும் அறிந்திடாத விடயம்.
முதன் முதலில் 1924ஆம் ஆண்டிலேயே சிறுவர் உரிமைகள் பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. பின்னர், சில திருத்தங்களுடன் பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கியதாக 1959ஆம் ஆண்டு மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 1979ஆம் ஆண்டினை ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. இதன் மூலமாக சிறுவர் உரிமையின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
'வெற்றிகொண்ட தேசத்தை சிறுவர்களுக்காகக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு சிறுவர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் இடம்பெயர்ந்து நலன்புரி
நிலையங்களில் வாழும் சிறுவர்கள் பல்வேறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. சிறுவர் உரிமைகள் எனும்போது அவர்களது சுதந்திரமான வாழ்க்கை உறுதி செய்யப்படுவதே பிரதான நோக்காக இருக்கின்றது. அத்தோடு சமூகப் பாதுகாப்பும் மிக அவசியமானதொன்று. ஆனால் இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலை சற்று மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. முகாம்களில் சில குடும்பங்கள் ஒன்றாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றபோது சிறுவர்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. பெற்றோரைப் பிரிந்து சிறுவர்களை வேறொரு குடும்பத்தினருடனோ அல்லது உறவினர்களுடனோ இணைத்துவிடும்போது அச்சிறுவர்களுக்கு முழுமையான பராமரிப்பு கிடைக்கின்றதா என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமே.

இடம்பெயர்ந்த சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கவென ஒவ்வொரு முகாம்களிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் சேவை அலகு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி மாவட்ட இணைப்பாளர் தங்கவேலு செல்வக்குமார் இதுபற்றித் தவிக்கையில், 'சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற உரிமை மீறல்களைக் கண்காணிப்பது, உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது, சிறுவர்களுக்குத் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவது போன்ற நோக்குடனேயே இந்த சிறுவர் சேவை அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்கள், சிறுவர் ஊழியம் போன்ற பிரச்சினைகள் முகாம்களில் காணப்படுகின்றன. பெற்றோரைவிட்டுப் பிரிந்த சிறுவர்களைப் பெற்றோருடன் இணைப்பதற்கு சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது,” என்றார்.
இடம்பெயர்ந்த சிறுவர்களை உளவியல் தாக்கங்களிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் சிறுவர் நட்புறவுக் கூடங்கள், சமூக அபிவிருத்தி அமைப்புக்களின் ஒன்றியத்தின் மூலமாக வவுனியாவிலுள்ள முகாம்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவ்வமைப்பின் சிறுவர் திட்ட நிலை இணைப்பாளர் ஸ்ரீதேவி கருத்துரைக்கையில், 'பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்ததன் காரணமாக சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றது. உறவுகளை இழந்ததை நேரடியாகக் கண்ட சிறுவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்களுக்கு சரிவர உணவு வழங்கிப் பராமரிக்கும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. இதேவேளை சில பெற்றோரும் உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டிருப்பதால் பிள்ளைகளின் நலனில் அக்கறை குறைவாகக் காணப்படுகின்றது,” என்றார்.
சேவ் த சில்ரன் நிறுவனமும் 5 சிறுவர் நட்புறவுக்கூடங்களை வவுனியா மற்றும் திருகோணமலையிலுள்ள முகாம்களில் அமைத்து அங்கு தொண்டர் ஊழியர்களை நியமித்து அவர்களின் மூலமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. முகாம் சூழலைப் பொறுத்தவரையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் குடும்பத்திற்குள்ளாகவே சிறுவர்களுக்கு இளைக்கப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பாதுகாப்புக் குழக்களினூடாக சிறுவர் துஸ்பிரயோகங்கள் வெளிக்கொணரப்பட்டு அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சேவ் த சில்ரன் அமைப்பின் கிழக்குப் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் மார்க் பீட்டர்சன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டிய 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அம்பேபுஸ்ஸ மற்றும் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விசேட தேவைக்குரிய சிறுவர்களுக்கான உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் Handicap International, Psycho Social Unit, UNICEF போன்ற நிறுவனங்கள் முன்னிற்கின்றன. இதேவேளை இடம்பெயர்வின்போது பெற்றோரை இழந்த அல்லது விட்டுப்பிரிந்த சிறுவர்களை அவர்களது பெற்றோருடனோ உறவினருடனோ மீளிணைக்கும் திட்டங்களும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறான முன்னெடுப்புகள் அரசினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டாலும் நாளைய சமுதாயத்தின் மீது பற்றுக்கொண்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டியது எம் ஒவ்வொருவருக்குமுள்ள கடப்பாடாகும். சிறுவர்களுக்கெதிராக நாட்டில் நிலவி வரும் தீய செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்துவதே அவர்களின் உரிமையைப் பேணுவதற்கான சிறந்ததோர் வழியாகும்!
No comments:
Post a Comment