Wednesday, August 18, 2010

அனுபவம் புதுமை….அவனிடம் கண்டேன்!

அலுவலகம் முடிந்து அவசர அவசரமாக கொழும்பு - புறக்கோட்டையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணிக்கும்  பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

 சற்று நேரத்திலேயே பஸ் கிளம்பிவிட்டது. டிக்கட் வாங்குவதற்காக பேர்ஸில் பணத்தைத் தேடினேன். எனக்கு நேரம் சரியில்லையோ என்னவோ சில்லறை குறைவாக இருந்தது. பேர்ஸை அலசிப் பார்த்ததில் 13 ரூபாய் மட்டுமே இருந்து.

புறக்கோட்டையிலிருந்து தெஹிவளை ஜங்ஷனுக்கு போவதற்கோ 18 ரூபாய் வேண்டும். அந்த 13 ரூபாய் தவிர எனது பேர்ஸில் வேறு ஆயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. என்ன செய்வது?

இலேசாக தலையைத் தூக்கி கன்டக்டர் வாலிபனா? வயோதிபனா? எனப் பார்த்தேன். அப்பாடா வாலிபன், திட்டமாட்டான் என்று மனசை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தேன்.

பொதுவாகவே சில்லறை கொடுக்காவிட்டால் திட்டுவது கொஞ்சம் வயசான கன்டக்டர்கள் தான். வாலிபன் தந்த நம்பிக்கையில் பஸ்ஸின் வேகத்திற்கேற்ப என் மனதின் வேகமும் அண்மைக்காலமாக நடந்த சில சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தது. ஏதோ ஒரு இழப்பும் வெறுமையும் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க கண்கள் வெளியில் தெரிந்த விளம்பரப் பலகைகளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

அருகில் வந்த கன்டக்டர் மிஸ் என்றதும் கையில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த 1000 ரூபாய் தாளை அவனிடம் நீட்டினேன். அவ்வளவுதான், அவன் பாட்டுக்கு திட்ட ஆரம்பித்துவிட்டான். ஏதேதோ பேசினான், ஒன்றுமே புரியவில்லை,நல்லவேளை எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது! இருந்தாலும் அக்கம் பக்கத்து சீட்களில் இருந்தவர்கள் என்னை ஏதோ மாதிரியாகப் பார்க்க இவன் வில்லங்கமாக ஏதோ திட்டுகிறான் என்று விளங்கிக்கொண்டேன். ரொம்பவே வெட்கமாகவும் இருந்தது. ஒன்றும் பேசாமல் அவனையும் பார்க்காமல் ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன். டிக்கட்டின் பின்னால் எழுதிக் கொடுத்துவிட்டு மீதிப் பணம் தராமல் முன்புறமாக சென்றுவிட்டான்.

தருவியா? தரமாட்டியா? என்று அவனை ஒரு தடவை பார்த்துவிட்டு சரி இறங்க இன்னும் நேரம் இருக்கு தானே, பார்த்துக்கொள்வோம் என்று இருந்தேன். பஸ்ஸின் முன்புறமும் பின்புறமும் மாறி மாறி போய் வந்த கன்டக்டர் என்னை அவ்வப்போது பார்த்து முறைத்துவிட்டு சென்றான். என்ன கேவலம் டா இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த கன்டக்டரை இரண்டு மூன்று தடவைகள் ஏற்கனவே பஸ்ஸில் பார்த்த ஞாபகமும் வந்தது. இருந்தாலும் மீதிப் பணத்தை தராமல் விட்டுவிடுவானோ என்று பயம் வேறு. கொழும்பு பஸ்களில் சரியான சில்லறையைக் கொடுத்து டிக்கட் எடுக்காமல் அதிகமாகக் கொடுத்தோமா அது காந்தி கணக்கில தான் சேரும்.

தெஹிவளை நெருங்கிவிட்டதால் சரி திட்டினால் வாங்கிக் கொள்வோம் என நினைத்துக்கொண்டு அருகில் வந்த அவனிடம் “சல்லி தென்டகோ” என்று எனக்கு தெரிந்த சிங்களத்தில் கேட்டேன். “சல்லி நே” என்றுவிட்டு பின்னால் சென்றுவிட்டான். ‘இன்டைக்கு மிச்சக் காசை வாங்காமல் இந்த பஸ்ஸில இருந்து இறங்கி போக வேண்டி வந்திடுமோ’ என்று பயந்து மனதுக்குள் அவனைக் கண்டபடி திட்டினேன். இறங்கவேண்டிய இடமும் வந்துவிட்டது. கன்டக்டர் படியில் நின்றுகொண்டிருந்தான். கையை நீட்டினேன். அழகாக காசை மடித்து கையில் வைத்தான். அப்பாடா என்று வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டு அவன்மேல் நம்பிக்கையில்லாமல் பணத்தைப் பார்த்தேன்.

18 ரூபாய் போக 982 ரூபாய் இருந்ததோடு ஒரு டிக்கட்டும் இருந்தது. அதை எடுத்த வீசப் போகும்போது அதில் ஏதோ எழுதியிருப்பது தெரிந்தது. படித்துப்பார்த்தேன். I Love You. I Want to talk with you. This is my mobile Number என்று அவனது போன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. இதுக்குத்தானா என்னை இந்தப்பாடு படுத்தினாய் என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டது, அவன் படியில் நின்று என்னை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். இலேசாக சிரித்துவிட்டு வீட்டிற்கு செல்ல அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தேன்.

2 comments:

  1. பதுமையான அனுபவம் தான்................ இத தான் சொல்லுவாங்களோ மோதலில் ஆரம்பித்த காதல் என்று.
    பரவாயில்ல நம்பர் இருக்கு தானே..!! ஹீ ஹீ.
    தொடர்ந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி பிரபா!
    இனியொரு காதல் ஏற்பட வாய்ப்பில்லை. கிடைத்த அனுபவங்களே போதுமானவை!

    ReplyDelete