Wednesday, September 1, 2010

கீதாவின் கதை - ஒரு உண்மைக்கதை


கீதா பணிப்பெண்ணாக இலங்கையிலிருந்து குவைத்திற்கு சென்றபோது அவளுக்கு வயது முப்பது. அவளுக்கும் அவளது கணவர் சுனிலுக்கும் 4 குழந்தைகள். சுனில் சாதாரண கூலி வேலைத் தொழிலாளி. சுனிலின் பரிந்துரையுடன் கீதா வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேட முடிவுசெய்தாள். கீதாவின் வருமானத்தைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டவும் குழந்தைகளைப் படிக்க வைக்கவும்இ எதிர்காலத்திற்கு பணம் சம்பாதிக்கவும் முடியும் என தம்பதியர் நம்பினார்கள். இந்த முடிவு எடுக்கப்பட்ட 3 மாதங்களிலேயே கீதா தன்னுடைய குழந்தைகளை சுனிலின் பராமரிப்பில் விட்டுவிட்டு குவைத்திற்குச் சென்றாள். அதற்கான செலவுகளை கடன்பட்டு சமாளித்தாள். அவள் திரும்பி வரும்போது கடன்களை அடைத்துவிடத் திட்டமிட்டாள்.

குவைத்தில் கீதா வேலைக்குச் சென்ற வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். அவர்கள் அவளுடைய பாஸ்போட்டினை எடுத்துக்கொண்டார்கள். இருந்தாலும் கீதா பாஸ்போட் இலக்கத்தையும் அவளுக்கு வேலையைப் பெற்றுக்கொடுத்த முகவர் நிலையத்தின் பெயரையும் ரகசியமாக எழுதி அவளுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டாள். அங்கு அவள் ஒரே ஒரு வேலைக்காரிதான் என்றதால்; குறைந்த ஓய்வுடன் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. எஜமானர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவதால் கீதா அந்த வீட்டில் ஒரு கைதியைப்போல இருந்தாள்.

சிறிது நாட்களிலேயே அவளின் எஜமான் அவளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தத் தொடங்கினான். அதிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்பி அவனது மனைவியிடம் சென்று முறையிட்டாள். பாலியல் விருப்பங்களை நிறைவேற்றுவதும் அவளுடைய கடமைகளில் ஒன்றாக இருக்கும் என தான் எதிர்பார்த்ததாக அவள் கீதாவிடம் கூறி அனுப்பிவிட்டாள்.

கீதா தன்னுடைய வீட்டிற்கு வழக்கமாகக் கடிதம் எழுதி அதனை அனுப்பிவிடும்படி எஜமானியிடம் கொடுப்பாள். ஆனாலும் அவளுக்கு வீட்டிலிருந்து பதில் கடிதம் வருவதேயில்லை. இலங்கைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் அந்த வீட்டில் அவளுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு நாள் அவள் காரைக் கழுவிக்கொண்டு இருக்கும்போது அவள் கொடுத்தனுப்பிய கடிதங்கள் அனைத்தும் காரில் பொருட்கள் வைக்குப் பகுதியில் வீசப்பட்டிருந்ததைக் கண்டாள். இதுபற்றி எஜமானியிடம் கேட்டபோது அவள் இவளை அடித்துத் துன்புறுத்தினாள். கீதா உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகி வேதனைப்பட்டதுடன் அவளுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை.

ஒருநாள் கீதாவின் எஜமான் அவளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த எண்ணி அவனது மனைவி வேலைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்தான். கீதா அவனை கண்ணாடிப் பாத்திரத்தினால் அடித்து காயப்படுத்திவிட்டாள். தன்னைப் பொலிஸ் கைது செய்துவிடும் என்ற பயத்தில் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டாள். சிறிது நேரத்தின் பின்னர் அவள் மெதுவாக மூன்றாவது மாடிக்கு ஏறிச் சென்று வெளியேற வழி தேடினாள். மூன்றாவது மாடியில் பூட்டப்படாமல் இருந்த ஜன்னல் ஒன்றைக் கண்டுபிடித்து ஒரு சேலையைக் கயிறுபோல் பயன்படுத்தி கீழே இறங்கினாள். அவள் கீழே இறங்குவதற்கு முன்னர் மத்திய கிழக்குப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது பாவிக்கும் அபாயா என்னும் ஆடையை அணிந்துகொண்டாள்.

அவள் தப்பி வந்த பின்னர் டாக்சி ஓட்டுநர் ஒருவர் அவளுக்கு உதவ முன்வந்தார். கீதா தனக்கு வேலை வழங்கிய முகவரகத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டாள். அவன் அதற்கு சம்மதித்துவிட்டு ஒரு தொடர்மாடிக்கு அவளை அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்திருந்தான். பின்னர்இ ஒரு தம்பதியர் வந்து அவளை வெளியில் அழைத்துச் சென்றனர். அவள் தன்னை முகவரகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தும் நிராகரிக்கப்பட்டது.

அடுத்த நாள் அந்தத் தம்பதியர் அவளை லீலா என்று அழைக்கப்படும் இலங்கை நாட்டைச்சேர்ந்த பெண்ணிடம் அழைத்துச் சென்றனர். லீலா அங்கு பல நாட்டுப் பெண்களையும் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தாள். கீதா தன் நிலையை விளக்கி தனக்கு உதவுமாறு கேட்டாள். லீலா அதற்கு தன்னுடன் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் நிறைய பணம் தருவதாகவும் கூறினாள். கீதா தன்னிடம் பாஸ்போட் இல்லாததாலும் நீண்ட நாட்களாக வீட்டிற்குப் பணம் அனுப்ப முடியாததாலும் லீலாவிடம் வேலை செய்ய சம்மதித்தாள்.

கீதா பாலியல் தொழிலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தில் சுனில் ஒரு வீடு கட்டினான். அவள் இலங்கைக்குத் திரும்பியதும் சுனில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை அறிந்தாள். எதிர்த்துக் கேட்ட அவளை சுனில் வீட்டை விட்டு வெளியேற்றினான். அவள் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் சென்றாள். ஒரு சிறிய இடத்தைப் பெற்று அதில் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு குடிசை ஒன்றை அமைத்துக்கொண்டாள்.

சிறிது நாட்களின் பின்னர் அவள் சுகயீனமுற்றதால் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவளுக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. அவளுக்குத் தெரியாமல் இந்த விடயம் அவளது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு பின்னர் கிராமம் முழுதும் தெரியவந்தது. அவளுடைய பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவளுடைய வீடு கோபமுற்ற கிராமவாசிகள் மூலம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இதேவேளை அவளுடைய தந்தையும் காலமானார்.

குழந்தைகளைத் தன் தாயுடன் விட்டுவிட்டு கீதா கொழும்பிற்கு வந்து ஒரு தனியார் கம்பெனியில் சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்தாள். தன்னுடைய வேலை போய்விடும் என்ற காரணத்தினால் தனக்கு எச்.ஐ.வி இருப்பதை கீதா எவரிடமும் தெரியப்படுத்தவில்லை. அவள் மாதம் 9இ000 சம்பளம் பெற்று கொழும்பில் தன்னுடைய தேவைகளையும் பாடசாலையில் படிக்கும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் செலவுகளையும் கவனித்துக்கொண்டாள்.

தற்போது கீதா குவைத்திலிருந்து நாடு திரும்பி 8 வருடங்கள் ஆகின்றது. அவள் தேசிய எச்.ஐ.வி எயிட்ஸ் கட்டுப்பாட்டு சிகிச்சை நிலையத்தில் பராமரிப்பிற்கென தன்னைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றாள். தவறாமல் ஆண்டிரெட்ரோவைரல் தெரபியினைப் பெற்று வருகின்றாள். அவள் தற்போது ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றாள். ஆனால் எதுவரை அவள் அவ்வாறு இருப்பாள் என்று தெரியாது.

வறுமையைப் போக்கும் நோக்கில் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்குப் பயணிக்கும் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதே! இந்நிலையில் வெளிநாடுகளில் வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினாலும் ஏனைய அரசாங்க அனுமதியினைப் பெற்ற முகவரகங்களினாலும் வெளிநாடுகளில் வேலை தேடி செல்பவர்களுக்கு எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அதனைப் புறக்கணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமே!

வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகவோ கல்வி மற்றும் இதர காரணங்களுக்காகவோ செல்பவர்கள் எச்.ஐ.வி நோய் குறித்தும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் கருத்தடை உறை பாவனை என்பன குறித்தும் ஆழ்ந்த அறிவுடன் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது.

இதேவேளை சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்று 18 ஆணிகளையும் ஊசிகளையும் உடலில் தாங்கி அண்மையில் நாடு திரும்பிய ஆரியவதியின் அவலத்தை நாம் மறந்திருக்க முடியாது.

உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை பெரும்பாலும் பெண்களே அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

(அடையாளத்தை வெளிப்படுத்தா வகையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

No comments:

Post a Comment