Saturday, October 30, 2010

மாற்றம் தேவை!!!?

குட்டிப் பயல் எர்னிக்கு சைக்கிள் ஓட்டும் ஆசை வந்ததும் தன் அம்மாவிடம் சென்று கூறினான். அவளோ, “நீ நல்ல பையனாக இருந்தால் வாங்கித் தருகிறேன்” எனக் கூறிவிட்டாள்.
எர்னியும் ஒரு வாரம் தன்னை நல்ல பையனாக காட்டிக்கொள்ள முயன்றான். ஆனால், அது அவனுக்கு மிகவும் கஸ்டமான காரியமாக இருந்தது. எனவே அவனது அம்மா ஆலோசனை கூறினாள், “இயேசுவுக்கு ஒரு குறிப்புக் கடிதம் எழுது, பின் எல்லாமே நல்லபடியாக முடிந்துவிடும்” என்றாள்.

குட்டி எர்னி தன் படுக்கையில் அமர்ந்து இயேசுவிற்குக் கடிதம் எழுதுகிறான். அன்புள்ள இயேசு, நீ எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தர உதவினால், நான் என் வாழ்நாள் முழுவதும் நல்லவனாக இருப்பேன்” என்று. உடனே அது சாத்தியமாகாது என்று அவனுக்குப் புரிகிறது. மறு கடிதம் எழுதுகிறான். ஒரு மாதத்திற்காவது நான் ஒழுங்காக இருப்பேன் என்கிறான். அதுவும் இயலாது என்று தோன்ற சட்டென்று ஒரு யோசனை வருகிறது. அவன் ஓடிப்போய் கன்னிமேரியின் சிலையை எடுத்து தன் காலணி பெட்டிக்குள் ஒளித்து வைத்துவிட்டு மீண்டும் கடிதத்தை இப்படி எழுதலானான், “அன்புள்ள இயேசு, நீ உன் அம்மாவை மீண்டும் பார்க்க விரும்புகிறாயா? அப்படியானால்.........!”

குழந்தைகள் கூட வன்முறைகளைக் கையாண்டு மிரட்டிக் காரியங்களை சாதிக்கும் மனோநிலையைப் பெற்றுவிட்டார்களா? இதற்கு காரணம் குழந்தை வளர்ப்பில் ஏற்பட்டுள்ள சீர்கேடு தானா?

பிரசவத்தில் ஆரம்பிக்கும் வன்முறைகள்

ஆயுதங்களைக் கையாண்டு மேற்கொள்ளப்படும் ‘சிசேரியன் டெலிவரி’ முதல் தொடங்கிவிட்ட இந்த வன்முறைப்பாதை சுவாசத்தைச் சீராக்க தலைகீழாகப் பிடித்து அழ வைப்பதில் வேரூன்றி விட்டதோ?

3 நிமிடங்களில் அழுதுவிடு அல்லது தலைகீழாய்த் தூக்கி நாலு தட்டுத் தட்டி அழவைப்பேன் என்று எவரெடி (Ever ready) என எப்போதும் தயாராகவே நிற்கும் டாக்டர்களுக்கு மத்தியில் அடிவாங்கி அழாமல் தானாகவே அழுது தப்பிக்கும் சில சாதுர்யக் குழந்தைகளுக்கு ஓர் சபாஷ்! ஆனால்… அடிவாங்கித்தான் அழுவேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு….?

விடைகாணா வினாக்கள்…

பெற்றோரின் ஆசைகளையும் கனவுகளையும் இலட்சியங்களையும் தின்று வளரும் குழந்தை எவ்வாறு தனித்துவம் மிக்கதாய் எதிர்காலத்தை எதிர்கொள்ளும்?

இந்துயிசத்துக்கோ இஸ்லாமியத்துக்கோ கிறிஸ்துவத்துக்கோ பெற்றோரால் தாரைவார்க்கப்பட்ட குழந்தை எப்படி தனித்துவத்தை ஸ்தாபிக்கும்?
இன, மத, கலாசார கட்டுகளுக்குள் சிக்குண்ட குழந்தை சுதந்திரக் காற்றை எப்போது சுவாசிக்கும்?

குழந்தை வளர்ப்பில் மாற்றம் தேவையெனத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

No comments:

Post a Comment