புகுஷிமா அணு ஆலையில் உள்ள உலை ஒன்றிலிருந்து பெறப்பட்ட நீரில் சாதாரணமாக இருக்கக்கூடிய அளவை விட ஒருகோடி மடங்கு அதிக கதிர்வீச்சு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் ஆலை நிர்வாகம் தவறான அளவு சுட்டிக்காட்டப்பட்டதாக பின்னர் மறுப்பு வெளியிட்டு தப்பித்துக்கொள்ள எத்தனித்தது.

இந்நிலையில் கதிர்வீச்சு வெளியாகும் இடத்தையறிந்து சரிசெய்வதற்கான பணியில் இன்னமும் பல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகின்ற போதும் இப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கசிவு எங்கிருந்து ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதே சவால்மிக்க விடயமாகியிருந்தது. இவ்வாறிருக்க, இந்த அணு உலையானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் ஒரு புறமாக எச்சரிக்கை மணியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல நாடுகள் ஜப்பானுக்கான தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தி வருகின்ற நிலையில் புகுஷிமா அணு ஆலையை அண்டிய பிரதேசங்களில் இருப்பவர்கள் தத்தம் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பாவம்! அவர்கள் தங்கள் வீட்டு ஜன்னல் கதவுகளைத் தாண்டி எட்டிப் பார்க்கக்கூட தைரியமற்றவர்களாய் சொந்த வீட்டில் சிறைவாசம் இருக்கின்றனர்! அத்தோடு அப்பகுதிகளில் குறிப்பிட்ட எல்லைவரை விமானங்கள் பறப்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டவர்களைப் போல தற்போது ஜப்பான் அரசாங்கம் இதனால் கதிகலங்கி விழி பிதுங்கி நிற்கிறது.

மின்சார உற்பத்திக்கு எத்தனையோ வழிகள் இருக்க அணு உலைகளை பிரதானமாக நம்பி நர்த்தனமிடும் நாடுகளுக்கு ஜப்பானில் ஏற்பட்ட இந்த விபத்து ஓர் பாடமாக அமைந்துள்ளது. கதிர்வீச்சு கலந்த நீரை கடலில் கொட்டுவது எத்தகைய பாரிய விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற கிலிபிடித்து அண்டை நாடுகள் அலறுகின்றன. கடலில் வாழும் மீன்கள் உட்பட கடல்வாழ் அனைத்து உயிரினங்களுக்கும் கதிர்வீச்சின் பாதிப்பு ஏற்படும் என்பதோடு அதனை உட்கொள்ளும் மனிதருக்கும் பாதிப்புகள் ஏற்படுவது சாத்தியமே. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கத்தால் ஏற்படும் தைராய்டு புற்றுநோயினைக் குறைத்துக்கொள்ள அயோடின் கலந்த உப்புக்களை வாங்கி வீட்டில் குவித்துக்கொள்கின்றனராம் சில நாட்டினர்!
இலங்கையைப் பொறுத்தமட்டில் வெய்யில் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் ஆடும் இந்த காலகட்டத்தில் ஜப்பான் அணு உலை வெடிப்பின் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது.
சுற்றுச் சூழல் மாசடைவதற்கு காரணகர்த்தாக்களாக நாமே இருந்துவிட்டு ‘வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு குத்துது குடையுது’ என்பதைப்போல இயற்கை மீது பழிபோட்டுக்கொண்டு அலைகிறோம். முள் குத்திவிட்டது, கத்தி வெட்டிவிட்டது, கல் தடுக்கிவிட்டது என்று ஜடப்பொருட்கள் மீதே பழிபோட்டு பழக்கப்பட்டுவிட்ட மனித ஜென்மம் தானே!? கொஞ்சம் எம் தவறையும் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது!

இயற்கை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும், அவதானம் நண்பர்களே!
No comments:
Post a Comment