Tuesday, December 11, 2012
காலத்தை வென்ற கவிஞன் பாரதியின் பிறந்த தினம் இன்று
காலம் கடந்தாலும் ஜீவியம் பெறும் கவி வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார். நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் இரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? என்று முழங்கிய மகாகவி சுப்ரமணிய பாரதியின் 91ஆவது பிறந்த தினம் இன்று!
நவ பாரதத்தின் எழுச்சி விதையே இந்த நாமம்! புதுமை, புரட்சி, விடுதலை வேட்கை, ஆன்மிகம், பெண்ணியம், இலக்கியம், சமூக நோக்கு என ஓயாத பல அலைகளைத் தந்த ஜீவ சமுத்திரமே மகாகவி சுப்பிரமணிய பாரதி...! வீரத்தின் அடையாளமாய் முண்டாசு, நெற்றியில் வெற்றித் திலகம், வேலும் வாளுமாக நிமிர்ந்த புருவங்கள், தீட்சண்யம் கக்கும் கண்கள், நெஞ்சுரத்தைப் பறைசாற்றும் முறுக்கு மீசை, கம்பீர முகப்பொலிவு கொண்ட இக்கவிஞனை காலம் என்றும் கரைப்பதில்லை.
1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாளின் குலம் தழைக்கவைக்கும் குலக்கொழுந்தாக சுப்பையா, எட்டயபுரத்தில் அவதரித்தார். இவரின் சூட்சுமமான கவித்துவம் எட்டயபுர சமஸ்தானத்தின் ஆஸ்தானக் கவிஞர்களை ஆட்டங்காண வைத்தது. அகமகிழ்ந்த எட்டப்ப நாயக்கர், பாரதி எனும் பட்டத்தை சுப்பையாவிற்கு சூட்ட, தமிழ்த் தாயின் பிரசவத்தில் சுப்பிரமணிய பாரதி ஜனனித்தார்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, தமிழ் பேரறிவாளர் என பல முகங்களைக் கொண்ட பாரதி தீண்டாமை, சாதியம் எனும் கொடுமைகளைத் தகர்க்கும் புரட்சியின் முகவரியாகவும் திகழ்ந்தார். பெண்ணடிமைவாதத்தை தனது வீறுகொண்ட கவிதைகளால் புறமுதுகிடவைத்த பாரதி பெண்ணியத்தின் உச்ச காவியமாக வர்ணிக்கப்படும் பாஞ்சாலி சபதத்தையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈந்தார்.
காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பாரதி சுதேசமித்திரன், இந்தியா உள்ளிட்ட பத்திரிகைகளின் ஊடாகவும் பாரதத்தின் சுதந்திரப் பயிருக்கு அந்நாளில் உரமூட்டினார். இரும்புக் கோட்டைகளாக கற்றவர்க்கு மட்டுமே பொருள் புரியும் வகையில் இருந்த இலக்கிய வடிவங்களின் இறுக்கத்தை தளர்த்த பாரதி, புதுக்கவிதை எனும் புதியதோர் இலக்கிய வடிவத்தையும் பிரசவித்தார்.
பாரத மாதாவையும் தமிழ்த்தாயையும் தனது 38 ஆண்டு வாழ்நாளில் புளகாங்கிதமடையச் செய்த அந்த உன்னத புருஷர், யானைத் தோழனை அருகில் அழைத்து 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமரத்துவம் எய்தினார்.
காலத்தை வென்ற பாரதியின் வாழ்நாள் எம் அனைவருக்கும் சிறந்ததோர் உதாரணமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment