Saturday, January 12, 2013

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...


தலைப்பைப் பார்த்ததும் Nursery போன ஞாபகத்தில ஏதோ எழுதப்போறேன் என்று தானே நினைக்கிறீங்க? இருக்கலாம்...




















‘Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky’

குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட இந்தப் பாடல் இரண்டு நூற்றாண்டுகளாக பல தலைமுறைகளுக்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டு, அதே வழித்தடத்தில் நமக்கும் கற்பிக்கப்பட்டு, நாளை நாம் நம்முடைய சந்ததியினருக்கும் சொல்லிக்கொடுக்கவிருக்கிறோம் என நினைக்கும் போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.

இன்று இந்தப் பாடலை தொலைக்காட்சியில் கேட்டபோது, எனக்கு உண்மையில் பாலர் பாடசாலை போன ஞாபகம் வரவில்லை. பதிலாக, இந்தப் பாடலை எழுதியவர் பற்றியே எண்ணத் தோன்றியது. அப்படியே அருகிலிருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன், ‘இந்தப் பாடலை யார் எழுதியது, தெரியுமா?’ என்று.

அவர் சிரித்துவிட்டு, ‘நல்ல கேள்வி! ஆனால், நான் இதுவரை சிந்தித்திராத ஒன்று,’ என்றார்!

உண்மைதான்! நம்மில் பலரும் சிந்தித்திராத, பலருக்கும் தெரியாத விடயம் இது.

ஜேன் டெய்லர் (Jane Taylor) எனும் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் தான் பல தலைமுறைகளாகத் தொடரும் இந்தப் பாடலுக்கு சொந்தக்காரி. இந்தப் பாடலுக்கான வர்ணனை வரிகளை இவர் தன்னுடைய 23ஆவது வயதில் (1806 ஆம் ஆண்டு) எழுதினார்.

உலகளாவிய ரீதியில் இந்தப் பாடல் புகழ்பெற்ற அளவிற்கு ஏனோ, ஜேன் டெய்லர் புகழ்பெறவில்லை.

இவரும் இவரது சகோதரி ஆன் டெய்லரும் (Ann Taylor) சேர்ந்து தயாரித்த பாலர் பாடசாலை குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பான ‘The Star’ எனும் புத்தகத்திலேயே இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளதால் இருவர் பற்றிய தகவல்களிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது.


இருப்பினும், ஆன் டெய்லரது மகளான ஜோசியா கில்பர்ட் (Josiah Gilbert) தனது சுயசரிதையில் ‘My mother’ பாடலை தனது தாய் ஆன் எழுதியதாகவும் 'Twinkle, twinkle, little Star’ பாடலை ஜேன் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டனில் (Shilling Street Lavenham Suffolk) பிறந்தவரான ஜேன் டெய்லரது குடும்பம் சிறந்த கல்வித் தகைமை கொண்டதொரு குடும்பமாகத் திகழ்ந்தது. இவரது தந்தை ஓர் அமைச்சர் (Isaac Taylor), தாய் ஆன் மார்ட்டின் (Anne Martin) ஒர் எழுத்தாளர்.

ஜேன் டெய்லரும் ஆன் டெய்லரும் இன்னும் இவர்களது நண்பர்கள் சிலரும் இணைந்து குழந்தைகளுக்காக வெளியிட்ட தொகுப்புகளில் சில Rhymes for the Nursery (1806), Hymns for Infant Minds (1808), In Original Poems for Infant Minds (1805).

அனைத்து பாடல் தொகுப்புகளிலும் உள்ள ஒவ்வொரு பாடலாசிரியரும் பின்னர் இனங்காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1783ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி பிறந்த ஜேன் டெய்லர் மார்புப் புற்றுநோய் காரணமாக 1824ஆம் ஆண்டு ஏப்ரல் 13அம் திகதி தனது 40ஆவது வயதில் உயிரிழந்தார்.

இவர் இறந்த பின்னர் இவருடைய பாடல் தொகுப்புகள், சுயசரிதை போன்றவற்றை இவருடைய சகோதரர் ஒருங்கிணைத்து The Writings of Jane Taylor எனும் தலைப்பில் 5 பிரிவுகளாக 1832ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இது தான் பிரெஞ்சு மெட்டைக்கொண்ட‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்... பாடலின் பின்னால் உள்ள லிட்டில் ஸ்டோரி...’

No comments:

Post a Comment