Wednesday, May 28, 2014

மாறுபடும் நியாய அநியாயங்களும் மாற்றங்காணா வன்முறைகளும்!

violence against women


இலண்டனில் உள்ள 'டேர் இலண்டன்'  என்ற விளம்பர நிறுவனம் பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கும் நியாய அநியாயங்கள் குறித்த விளம்பரம் ஒன்றைத் தயாரித்து வௌியிட்டுள்ளது.

அதில் இளம் காதலர்கள் மோதிக்கொள்வதாகவும், இளம்பெண்ணை ஆண் அடிக்கும் போது பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர், அதுவே சற்று மாறுதலாக, பெண் ஆணை அடிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

பெண்ணை ஆண் அடிக்கும்போது பலர் கேள்வி கேட்கின்றனர். பொலிஸாரிடம் முறையிடப் போவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், பெண் ஆணை அடிக்கும்போது பார்ப்பவர்கள் சிரித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த வீடியோவை குறித்த விளம்பர நிறுவனம்  YouTube தளத்தில் வெளியிட்டுள்ளது.

வெளியிட்ட ஒரே வாரத்தில் இதனை இலட்சக்கணக்கான இணையத்தள ரசிகர்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆண், பெண்ணை அடிக்கும்போது உடனடியாக நியாயம் கேட்கும் சுற்றியுள்ள மக்கள், ஒரு ஆணை, பெண் அடிக்கும்போது ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரிக்கின்றனர் என்று அந்த நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

வீடியோவைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்....




இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

முதலாவது - பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஆண்கள் வௌிப்படையாக ஈடுபடுவதில்லை.

அவ்வாறு நடந்துகொள்ளும் பட்சத்தில், அவனது ஆண்மைக்கு இழுக்கு என்னும் 'சமூக வேலி' இடப்பட்டிருக்கிறது.

எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண், அதை ஒரு மறைவான இடத்திலேயோ அல்லது யாரும் பாராத நேரத்திலேயோ தான்  செய்கிறான்.

மற்றையது, பெண் மெல்லியலாள், நலிவடைந்த பாலினமாகக் கருதப்படுபவள், இயற்கையிலேயே அவ்வாறான உடற்கூறுகள் காணப்படுகின்றமையால், வன்முறைகளில் ஈடுபடுதல் மிகக் குறைவு.

உலக நாடுகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவே என ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறிருக்க, இயல்பிலேயே பெண்கள், நலிவுற்றவளாகப் பலரது மனங்களிலும் பதியப்பட்டிருக்கிறாள்.

இந்நிலையில், அவளுக்கு எதிராகப் பொது இடங்களில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகப் பலர் குரல் கொடுப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இந்தக் காணொளியில் கூறப்பட்டிருப்பது போல் (The video might change the way you see domestic violence), வன்முறைகளைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் நேரும் என எனக்குத் தோன்றவில்லை!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளன, மறைவான இடங்களில், யாரும் அறியாத பொழுதுகளில்.... !!!

No comments:

Post a Comment