
கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்க மனம் ஏனோ மந்தி போல் மாறி மாறி அலைபாய்ந்தபடி இருந்தது. அவ்வப்போது சில மனிதர்களின் நினைவுகள் மனதில் நிழலாடியது.
நினைவுகள் சுகமானவையா? சுமையானவையா?
அது எம் மனங்களில் ஏற்பட்டுள்ள இரணங்களின் ஆழத்தைப் பொறுத்தது. சில வேளைகளில் பிரிவுகள் பிணைப்புகளை ஆழப்படுத்தியிருக்கலாம், சில உறவுகள் வடுக்களை விட்டுச் சென்றிருக்கலாம். உறவிருந்தால் பிரிவிருக்கும் என்ற உண்மை புரியாமலேயே வாழப் பழகிவிடுகிறோம். உன்னதமான உறவுகளைப் பிரிகின்றபோது எம்மில் ஒரு பகுதி இறந்துவிடுகிறது. இறப்பு மட்டுமே இறப்பு அல்ல, இழப்பும் கூட ஒருவித இறப்பாகும்.
நினைவுகள் பெரும்பாலும் நிறைவுகளைத் தராது. நினைவுகள் நிழலாடும் போதெல்லாம் பெருமூச்சு மட்டுமே பெரிதாக வெளிவரும். நம்மை அறியாமலேயே நாம் சிலருக்கு ஏமாற்றங்களையோ எம்மைக் குறித்த நினைவுகளையோ விட்டுச் செல்கிறோம். அதையே சிலர் எமக்குப் பரிசளித்துச் செல்கின்றனர்.
காலத்தின் கட்டாயத்தால் நேர்ந்த பிரிவுகள் சில, சந்தர்ப்ப சூழ்நிலையால் சம்பவித்த பிரிவுகள் சில, நன்மை கருதி நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகள் சில, எது எவ்வாறாயினும் பிரிவுகளும் தற்காலிகமானவையே… சில வேளைகளில் அது நிரந்தரமாகவே நிலைத்துவிடுவதுண்டு.
பல ஆண்டுகள் கழித்து பிரிந்த நபரை சந்திக்க நேர்கையில் அன்றைய பிணைப்பு அவ்வாறே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் தவறான புரிந்துணர்வால் பிரிந்தவர்கள் கால ஓட்டத்தின் பின்னர் சந்திக்க நேர்கையில் கோபம் மறந்து புன்னகையுடன் சுக துக்க விசாரணைகளைத் தொடங்கிவிடுவதுண்டு. காரணம் காலம் காயத்திற்கு மருந்திட்டிருக்கும். கால மாற்றத்தால் கோலமும் சற்று மாறிப்போயிருக்கும். மறதி கொஞ்சம் மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கும்.
காலம், மாற்றம், மறதி இம்மூன்றுமே பல நேரங்களில் எம் மனக் காயங்களுக்கு மருந்தாக அமைந்துவிடுகிறது. கடவுள் மீது நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ எனக்கு காலத்தின் மீது நம்பிக்கை அதிகம்! ஆகவே இறந்த காலத்திற்குள்ளேயே இறந்துவிடாமல் நிகழ்காலத்தில் புதிதாய்ப் பிறப்போம்! மாற்றம் ஒன்றே மாறாமலிருப்பது, எனவே மாற்றமே பரிணாமம்! மறதியே மனதின் அமைதி!
“நெஞ்சில் காயமிருந்தால்
நினைவுகள் துன்ப வலிகள் தருமே…
உறவு மாறும் உலகில்
உனக்கொரு மறதி கூட வரமே..!”
No comments:
Post a Comment