Sunday, July 12, 2009

இலங்கை நாடு



இலங்கை – பூகோள அமைவு

உலகின் பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றான இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ளபோதும் கூட இதன் அமைவு இந்தியப் பாறைத்தட்டிலேயே உள்ளது. இலங்கை இந்தியத் தலைநிலத்துடனேயே மத்திய காலம் வரை அமைந்திருந்தது. இருப்பினும் 1480ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஊடறுக்கப்பட்டு தற்போது சுண்ணாம்புக் கற்பாறை, தீவுத் தொடர்களைக்கொண்ட ஆழம் குன்றிய நிலப்பரப்பைக்கொண்டு காணப்படுகிறது. சுனாமி, கடற்கோள் சந்தர்ப்பங்கள் இருப்பினும்கூட பூகோள ரீதியாக எரிமலை, நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் பெருமளவவில் பாதிப்பதில்லை.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?”
என்ற பாடல் வரிகளுக்கேற்ப பூகோள ரீதியாக அனைத்து வளங்களையும் பெற்றதோர் சிறந்த நாடு எம் தாய்த்திருநாடு!

எழிலுரு இலங்கை

இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோண்டு, சேலான், தப்ரபேன், செரண்டிப் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்ட எம் இலங்கை நாடு எழில் கொஞ்சும் ஓர் அழகிய தீவு!
தாழ்நில மழைக்காடுகளையும், வானுயர் பீதுறுதாலகால, சிவனொளிபாத மலையையும் பம்பரகந்த போன்ற அழகிய பல நீர் வீழ்ச்சிகளையும் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் பசுமை நிறைந்த எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களையும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பையும் கொண்டு காண்போரைக் கவர்ந்து நிற்கின்றது. இதன் வனப்பையும் வளத்தையும் அறிந்ததாலோ என்னவோ கவி பாரதி தன் பாடல் வரிகளில்
“சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம் உயர்
சேதுவை மேடிருத்தி வீதி சமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணளவாக 443 வகையான பறவையினங்களையும் ஆயிரக்கணக்கான விலங்கினங்களையும் கொண்டிருப்பதால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட எம் நாட்டில் பறவையினங்கள் அதிகமாகவே காணப்படுகிறது. வனப்புப் பெற்ற இந்நாட்டின் சிறப்பை உணர்ந்தே அதன் அழகைப் பருக அயல் நாட்டவர் படையெடுத்து வருகின்றனர். ஆகவே சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டு அதனூடாக நாட்டின் வருமானமும் உயர வழி கிட்டியுள்ளது.


வளமும் பொருளாதாரமும்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று பிரிட்டன் அரசாங்கத்தின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ஆம் ஆண்டு குடியரசாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. அக்காலந்தொட்டே பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட நாடாகத் தன்னை உயர்த்திக்கொள்ள எத்தனித்து வருகின்றது.
வெப்பமண்டல நாடாக கருதப்படும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, தைக்கப்பட்ட ஆடை ஆகியன திகழ்கின்றன. புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துக்கள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை கறுவா, இரப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கும் பெயர்பெற்று விளங்கியது. இடைக்கால பகுதியில் உலகப் பொருளாதார மந்த நிலை, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, நீண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக பொருளாதார ஒடுக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டது. இருப்பினும் தற்போது தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை கருதப்படுகிறது. இதன் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்நாட்டின் பொருளாதாரம் சாதாகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.


இன மதங்களும் கல்வி வளர்ச்சியும்

பௌத்தர்கள் 70 வீதமாகவும் இந்துக்கள் 15 வீதமாகவும் கிறிஸ்தவர்கள் 8 வீதமாகவும் இஸ்லாமியர்கள் 7 வீதமாகவும் உள்ள எம் நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் உத்தியோகப்பூர்வ மொழியாக இருந்து வருகின்றது. இருப்பினும் 10 வீதமானோர் கல்வி, விஞ்ஞானம் மற்றும் வர்த்தக தேவைகளுக்காக ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சிங்களவர் (73.8%), தமிழர் (13.9%), முஸ்லிம்கள் (7.2%), இந்திய வம்சாவளித் தமிழர் (4.6%) ஆகிய இன மக்கள் வாழ்ந்து வருவதுடன் ஏனைய இனத்தோரான பரங்கியர், சோனகர், கஃபீர் இன மக்களும் மிகக்குறைந்த (0.5%) அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
வளர்ச்சியுற்ற நாடுகளைக் கண்ணுற்றோமாயின் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வியே மூலாதாரமாக அமைந்திருக்கிறது. இலங்கையில் 1945ஆம் ஆண்டு முன்னாள் கல்வி அமைச்சரான கலாநிதி சி.டபிள்யூ.கன்னங்கர அவர்களால் இலவவச கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை மக்களின் கல்வியறிவு வீதத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்று அது 93 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றங்கண்டு நிற்பதையிட்டு இலங்கையரான நாம் பெருமையடைய வேண்டும்.

கலாசார பண்பாட்டு விழுமியங்கள்

பண்பாடு என்பது அறிவு வளர்ச்சிக்கும் மனித நாகரிகத்திற்கும் எவ்வளவு தூரம் தேவையாய் உள்ளது என்பதைப் பொருத்தே மதிக்கப்படும். தமிழர் தம் பண்பாடும் கலாசாரமும் சில சடங்கு முறைகளாடு ஒட்டி அமைந்தவை. சங்க காலத்துப் புலவர் அவாவிய
“யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்பதைத் தமிழர் பண்பாட்டின் உச்சமாகக் கருதலாம். அந்த வகையில் வந்தாரை வாழவைக்கும் தமிழர் பண்பாடு தலைசிறந்த கலாசார விழுமியங்களைக் கொண்டது.
தமிழர் இறை நம்பிக்கை சார்ந்த தமது பண்பாட்டு முறைகளை கோயில் திருவிழாக்களோடு இணைத்து சிறப்பிக்கின்றனர். தைத்திருநாள், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி, சிவராத்திரி – நவராத்திரி பூஜைகள், கந்தசஷ்டி – கெளரி விரதம் இன்ன பல விழாக்களை தமிழர் தம் பண்பாடு கலாசார முறைகளுக்கு உதாரணங்காட்ட முடியும்.

போதிமர புத்தன் வழி வந்த பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் சிங்களப் புத்தாண்டு, பூரணை தினங்களை சிறப்பாகக் கொண்டாடுவதோடு ஈசல பெரகர விழாவின் போது பாரம்பரிய உடையணிந்து, யானைகளை அழகுபடுத்தி, ஊர்வலம் நிகழ்த்தி, கண்டிய நடனம் எனப்படுகின்ற தமக்கே உரித்தான நடனத்தையும் ஆடி மகிழ்கின்றனர். மேலும் “தன்சல்” எனும் பெயரில் கூடாரங்களை அமைத்து உணவுப் பொருட்களை வறியாருக்கு வழங்கி எம் நாட்டின் இறையாண்மையைக் காத்து நிற்கின்றனர்.
ஏனைய மதத்தவரான கிறிஸ்தவவர்கள் இயேசு பிறப்பு, ஈஸ்டர் திருநாள் போன்றவற்றை மத அனுஷ்டானங்களின் பிரதிபலிப்பாக அனுசரித்து நிற்கின்றனர். இஸ்லாம் மதத்தவர்கள் ஈத் முபாரக், ரமழான் போன்ற பண்டிகைகளின் மூலமாக தமது பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றி நிற்கின்றனர்.

புகழ்பெற்ற போக்குவரத்து சேவை

இலங்கையின் நகரங்கள் பலவும் இரயில் போக்குவவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் கிராமங்கள் அனைத்தும் பேருந்து போக்குவரத்து சேவையினைப் பெருமுகமாக பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது இரயில் போக்குவரத்து சேவை 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேறு பல இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து சேவையும் கடல்வவழி கப்பல் போக்குவரத்தும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகம் பல நாடுகளினதும் கவனத்தை ஈர்த்து நிற்பதை அரசியல் அவதானிகள் அறிந்திருக்கக்கூடும். மேலும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


விளையாட்டுத் துறையில் வீறுநடை


இலங்கையின் தேசிய விளையாட்டாகக் கைப்பந்தாட்டம் கருதப்படுகிறது. இருப்பினும் உலகிற்கு எம்மை அடையாளங்காட்டிய விளையாட்டாக மட்டைப் பந்தாட்டமே திகழ்கிறது. உலகப் புகழ்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களையம் உலகத் தரப்படுத்தல் வரிசையில் முன்னணியில் இருக்கும் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனையும் கொண்ட பலம் பொருந்திய அணியான இலங்கையின் மட்டைப் பந்தாட்ட அணி உலகின் பிற அணிகளுக்கு சவாலாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. 1996ஆம் ஆண்டு எமது நாட்டு அணி உலகக் கிண்ணத்தை சுவீகாpத்ததோடு அல்லாமல் 2007ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி, உலகின் மற்றுமொரு பலம்பொருந்திய அணியான அவுஸ்திரேலிய அணிக்கு சவாலாக அமைந்தது.
ஓலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்ற எம் நாட்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஏனைய விளையாட்டுகளிலும் தாம் சளைத்தவர் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர். குறுந்துதூர ஓட்ட வீராங்கனையான சுசாந்திகா எம் நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டித் தந்தமையை எம்மில் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு ஆறாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் திட்டங்களை வகுத்துள்ள இலங்கை 1960ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களைப் பிரதமராகத் தெரிவு செய்ததன் பொருட்டு உலகிற்கு முதல் பெண் பிரதமரை வழங்கிய பெருமையைப் பெற்றுக் கொண்டது.
நீண்டகாலம் நிலவிய இனக் கலவரங்களும் வன்முறைகளும் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எம் நாட்டின் பலம்பொருந்திய விமானப் படை, தரைப்படை, கடற்படை என்பனவே காரணம் என்பதை எம் நாட்டின் ஜனாதிபதியான பௌத்த மதத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கௌரவ மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் விளக்கியுள்ளார். அவர் நீண்ட கால யுத்தத்தை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன் மோதல்களினால் சேதமுற்ற தமிழர் செறிந்து வாழ்ந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்திருப்பதை பல உலக நாட்டுத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

ஊடகத்துறையும் திரைப்பட வளர்ச்சியும்

தழிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழியிலான பல ஊடகங்கள் இலங்கையின் தலைநகரான கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. எட்டிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்களையும் பனிரெண்டிற்கும் அதிகமான வானொலி நிலையங்களையும் கொண்டு இலத்திரனியல் ஊடகத்துறையில் முத்திரை பதித்து நிற்கிறது. எமது நாட்டின் அறிவிப்பு முறை பிறநாட்டு மக்களால் குறிப்பாக இந்திய நாட்டு மக்களால் பெரிதும் கவரப்பட்ட ஒன்று. தமிழ் அறிவிப்பாளரான அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்புத் திறனும், குரல் வளமும் தொடர்ந்து பேசும் ஆற்றலும் பிற நாட்டு அறிவிப்பாளர்களுக்கு அவரை அறிவிப்புத்துறையில் ஒரு முன்னோடியாக அடையாளப்படுத்தியிருக்கின்றது. அத்தோடு வீரகேசரி, சுடர் ஒளி, தினகரன், தினக்குரல், போன்ற தமிழ் நாளேடுகளும் லங்காதீப, லக்பிம, திவையின, தினமின, இருதிம, ரிவிர போன்ற சகோதர மொழிப் பத்திரிக்கைகளும் டெய்லி மிரர், டெய்லி நியூஸ், சண்டே ஒப்சவர், தி ஐலண்ட் போன்ற ஆங்கில செய்தித்தாள்களும் அச்சு ஊடகத்துறையில் தமது பணியை மேற்கொண்டு வருகின்றன.

எம் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பெரும்பாலான திரைப்படங்கள் சிங்கள மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இந்தியத் திரைப்படங்களில் சாயல் அமைந்து காணப்படுகிறது. 1947ஆம் ஆண்டு முதல் முதலாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட “கடவுனு பொறந்துவ” என்னும் சிங்கள மொழித் திரைப்படம் தான் இலங்கையின் திரைப்படத்துறைக்கு திருப்பு முனையாக அமைந்தது. அது கருப்பு வெள்ளைத் திரைப்படமே. இலங்கையின் முதல் வண்ணத் திரைப்படம் “ரன்முது துவ”, அதன் பின்னர் இன்றுவரை ஏராளமான சிங்களத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. தமிழ் மொழியில் திரைப்படங்கள் தயாரிப்பது மிக அரிதே. அதற்குக் காரணம் தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கமே. இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட “மண்” தமிழ் மொழி திரைப்படம் பலரது பாராட்டையும் பெற்றது.

இனியொரு புது யுகம்

இனக் கலவரங்களும் நீண்டகால யுத்தமும் எம் நாட்டை சீரழிக்காதிருந்திருந்தால் இன்று எம் தாய்த்திருநாடும் வளர்ந்துவரும் நாடாக இல்லாமல் வளர்ச்சி பெற்ற நாடாக இருந்திருக்கும் என்பதற்கு எம் நாட்டில் அமைந்திருக்கும் வளங்களும் மனித வலுவுமே சாட்சியாக அமைந்திருக்கும்.
எங்கெங்கு காணிணும் புதுமையடா எனும்படி புது யுகம் படைக்க இனிவரும் காலம் வழி சமைக்கும்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் தோன்றி
சிறந்ததும் இந்நாடே..!

ஆம்! இது எம் நாடு, இதன் சீரும் சிறப்பும் எம்மைச் சாரும். இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எம் கரங்களிலேயே உள்ளது!

1 comment: