Sunday, July 19, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே..!


பிரச்சினைகள் இல்லாத மனிதன் யார்? வாழ்க்கை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வாழ்வில் பிரச்சினைகளும்.

வாய்த்தவர்களுக்குத்தான் வாழ்க்கை என பலர் வறட்டுக் கௌரவம் பேசுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, நம்முடைய மனம்தான் பிரச்சினைகளின் பிள்ளையார் சுழி, அது தான் ஆணிவேர், பிரச்சினைகள் விருட்சமான பின் ஆணிவேரைத் தேடுவதில் அர்த்தமில்லை.

வாழ்க்கையின் தாத்பரியமே நல்லெண்ணங்கள் தான். நல்லெண்ணம் இல்லாமல் ஆரம்பிக்கும் எந்தவொரு செயற்பாடுமே இறுதியில் பிரச்சினை என்ற வட்டத்திற்குள்தான் சிக்குண்டு போகும். பின்னர் அந்த சிக்கல்களை சமாளிப்பதிலேயே காலமும் காணாமல் போய்விடும்.


காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை. பயம், கவலை, வெறுப்பு, காமம் போன்ற குப்பைகளை எம் மன வீட்டிலிருந்து எறியாவிட்டால் வாழ்க்கை சுபீட்சம் பெறாது. பிரச்சினைகள் ஆரம்பமான மனதை விடுத்து பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் தெருவில் தேடுகின்றோம்.

முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்துவிட்டுத் தரையில் தேடிக்கொண்டிருந்தார். எதைத் தொலைத்துவிட்டீர்கள் முல்லா? என்று வழியில் போனவர் கேட்டார். “எனது சாவியை” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து தேடினார் முல்லா. மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், “எங்கே சாவியைத் தொலைத்தீர்கள்?” என்று, முல்லா, “என் வீட்டில் தான் தொலைத்தேன்,” என்றார். வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, “வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்?” என்று கடுகடுத்தார்.

முல்லா அமைதியாக சொன்னார், “இங்கே தான் வெளிச்சம் இருக்கிறது” என்று!

இப்படித்தான் நாமும் பிரச்சினைகளுக்கான தீர்வை எம்மிடமே தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்? எதனால் இப்பிரச்சினை நேர்ந்தது? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை.

சரி, நாம்தான் பிரச்சினைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துவிட்டோம், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதை தைரியமாக எதிர்கொள்கிறோமா? அதுவும் இல்லை!

“இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார்
இருளும் ஒரு பெருமையென எண்ணி வாழ்ந்தேன்”

என்பது போல பிரச்சினைகளுக்குள்ளேயே வியாபித்திருப்பதை சிலர் பெருமையாக எண்ணிக்கொண்டு அதனை, “நான் பார்க்காத பிரச்சினையா? எல்லாம் பழகிப்போச்சு” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.

அதிலிருந்து வெளியேறுவதற்கு சிறிதும் முயற்சிக்க மாட்டார்கள். பிரச்சினைகளுக்குள் வீழ்வது மனித பலவீனம், அதற்குள் வீழ்ந்தே கிடப்பது மதியீனம், வீழ்ந்தும் எழுவதுதான் மனிதம்!

எல்லாம் விதியென்று நோவதை விட, சதியென்று பழிப்பதை விட, மதியென்ற ஒன்றினால் சமாளிப்பதே சாலச் சிறந்தது. அடிப்படையில் வாழ்வு என்பதே எம்முடைய சுய தேவைக்கான போராட்டம் தான், போராடித்தான் பலவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. சோர்ந்துவிட்ட மனிதன் தனக்குத்தானே பகைவன், துணிந்துவிட்ட மனிதன் சாவுக்கும் பகைவன், ஆகவே துணிந்து போராடினால் தீர்வை எளிதில் பெற்றுவிடலாம்.

சிக்கல் இல்லாத வாழ்வுடன்தான் நாம் பிறந்தோம். பிறகு நாமாகவே சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். சரியாகக் கவனித்து சிக்கல்களை அவிழ்த்தால்தான் வாழ்க்கை இனிதாகும்.

வாழ்க்கையை வாழப்பார் அல்லது வாழ்க்கைக்கேற்ப உன்னை வார்க்கப்பார் என்றார் வைரமுத்து, உண்மைதான் வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுதுவடிப்பதற்கல்ல, அத்தகைய வாழ்க்கையை பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் எமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் நடக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்.”

2 comments:

  1. நல்லது சகோதரியே!

    உங்கள் கருத்துக்களில் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு உள்ளது.

    """"வாழ்க்கையை வாழப்பார் அல்லது வாழ்க்கைக்கு ஏற்ப உன்னை வார்க்கப்பார்... """" கவிப்பேரரசர் வைரமுத்துவின் வைரவரிகள் அற்புதம்...

    தொடர்ந்தும் பதிவுகளை வெளியிடுங்கள்...

    ஒரு ஆரோக்கியமான இளைய ஊடக சமுதாயம் உருவாக வேண்டும் என்பது எனது விருப்பமும் எதிர்பார்ப்பும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன். தாளம் வானொலி

    ReplyDelete
  2. prathapdj.blogspot.comDecember 3, 2010 at 9:27 PM

    wish all the best just now i show u r blog nice i'm prathap vasantham fm

    ReplyDelete