Monday, March 8, 2010

ஊடகத்துறையில் பெண்கள்: சாதனைகளும் சவால்களும்

ஆண், பெண் எனும் இரு விழிகளின் பார்வையில் உருவானதே இந்த உலகம். இருப்பினும் உலகின் உருவாக்கத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. பல துறைகளிலும் தம் காலடித்தடத்தை பதித்துவிட்ட பெண்கள் ஊடகத்துறையிலும் தமக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள தவறவில்லை.

ஆண்மையக் கட்டமைப்புள்ள சமுதாயத்தில் பெண்கள் தமக்கான இடத்தைத் தக்கவைப்பதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்கள் தம் துறைசார்ந்த ஆளுமையை வளர்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

சாதனை படைக்க பெண்கள் காலடி எடுத்துவைக்கும்போது பிரச்சினைகளும் அவர்களோடு காலடி எடுத்து வைக்கின்றது. இந்நிலையில், வேறுதுறைசார் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விட மேலதிகப் பிரச்சினைகளை ஊடகத்துறையிலுள்ள பெண்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

பல பெண்கள் ஒரு வேலையைப் பெற்றுக்கொண்டதும் நீண்ட காலத்திற்கு அதிலேயே தங்கிவிடுவதுண்டு. ஒரு இடத்தைவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்து தமது அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கான தேடலும் அதனை நோக்கிய நகர்தலும் அவர்களிடம் குறைவாக இருக்கின்றது. குடும்பச் சுமை, நேர எல்லை போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். இவையே ஊடகத்துறையிலுள்ள பெண்களும் பொதுவாக எதிர்கொள்கின்ற சவால்கள்.

'இன்றைய ஊடகத்துறையை எடுத்துக்கொண்டால் எல்லோருக்கும் சமமாகத்தான் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில பொறுப்புகளைப் பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. வெகுதூரங்களுக்குத் தனியாகச் சென்று தங்குவதற்கு எல்லாப் பெண்களும் துணிந்து முன்வருவதில்லை” என இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் பின்னர் செய்திப் பிரிவில் ஆசிரியராகவும் முறைசாரக் கல்வி ஒலிபரப்பு பொறுப்பதிகாரியாகவும் இருந்து ஓய்வுபெற்று தற்போது பகுதி நேர அறிவிப்பாளராக கடைமையாற்றிவரும் சற்சொருபபதி நாதன் குறிப்பிட்டார்.

அவர் இதுபற்றி மேலும் கருத்துரைக்கையில், 'சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கொள்கையின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களைக் கொண்டுள்ள வேலைத்தளத்தில் பெண்களுக்கு சில வசதிகள் செய்துகொடுக்கப்படல் வேண்டும் என்ற நியதி இருக்கின்றது. ஆனால், எமது ஒலிபரப்பு நிலையங்களைப் பார்க்கையில் அவ்வாறான நிலை இருப்பதாகத் தெரியயவில்லை. ஆரம்பகாலத்தில் வானொலிச் சேவையில் சேர்ந்த பொழுது எமக்கு ஓய்வெடுப்பதற்கென ஒரு தனி அறை இருந்தது. மேலும் கர்ப்பிணிகளுக்கு வாகன வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதெல்லாம் சில நிலையங்களில் அவ்வாறில்லை” எனத் தெரிவித்தார்.

ஆண்கள் எல்லா நேரத்திலும் பணியாற்றத் தயாராக இருக்கின்ற போது பெண்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் மாத்திரமே தம்முடைய பணிகளை முன்னெடுக்க முடிகின்றது. ஆண்கள் பெண்களைப் போன்று தொடர்பாடலுக்கோ கலந்தரையாடலுக்கோ தயங்குவதில்லை. இந்நிலையில் தலைமைத்துவப் பொறுப்புக்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமேயுள்ளன.

'தலைமைத்துவம் எனும்போது ஆண் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அதிகாரம் கொண்ட பெண்ணை சூர்ப்பனகையாகவோ வில்லியாகவோ காணுகின்ற நிலை இன்னும் மாறவில்லை. பெண் என்பவள் மென்மையானவள், கீழ்படிந்து நடக்கவேண்டியவள் என்றே எம்முடைய வாழ்க்கை முறை எமக்குக் கற்றுக்கொடுக்கின்றது. அதிகாரம் எனும்போது ஆட்களை அடக்குவது என்றில்லை, துறைசார் அறிவைப்பெற்று அதனை செயன்முறைப்படுத்த தெரிந்திருப்பதுவே” என இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளரான தேவகெளரி மகாலிங்கசிவம் சுரேந்திரன் தெரிவித்தார்.

சினிமாத் துறையில் பொதுவாக பெண்கள் கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற சச்சரவுகள் வலுத்து வருகின்ற நிலையில் எமது நாட்டில் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களும் அவ்வாறானதொரு பிரச்சினைக்கு முகங்கொடுப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

'பொதுவாக ஊடகங்கள் பெண்களைப் பயன்படுத்துகின்றனவே தவிர பெண்கள் ஊடகங்களைப் பயன்படுத்துவதாயில்லை. இலத்திரனியல் ஊடகங்களைப் பொருத்தமட்டில் ஒரு அழகான பெண் அல்லது குரல் வளம் மிக்க பெண் தேவைப்படுகின்றாள். குறைந்த நேரத்தில் குறைந்த சம்பளத்தில் பெண்கள் அறிவிப்புத்துறையில் பயன்படுத்தப்படுகின்றார்கள்” என தேவகெளரி மகாலிங்கசிவம் சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

'ஊடகத்துறை மட்டுமல்லாமல் கலைத்துறையிலும்கூட பெண்கள் கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெண்களும் பொறுப்பாளிகள்தான். ஊடகத்துறையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தரும் பெண்களின் நடை, உடை, பாவனை போன்றவற்றில் கவனஞ்செலுத்துதல் வேண்டும். பெண்களின் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட பின்னர் மேற்சொன்னவை அதற்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கும்” என இலங்கையின் மூத்த அறிவிப்பாளரான இராஜேஸ்வரி சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் அழகானவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டுக்கோப்புகளையும் தாண்டி அறிவுடையவர்களாக இருக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டிருக்கின்றது. ஆசிய நாடுகளையும் கீழத்தேய நாடுகளையும் தவிர்த்து நோக்கினால் ஊடகம், அரசியல், பொருளாதார துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. ஓர் உதாரணத்திற்கு அண்மையில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கை நிலவரத்தை வெளிக்கொணர வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களில் அநேகமானோர் பெண்கள் என்பது சுட்டிக்காட்டத் தக்கது. அத்தகைய தனித்துவத்தையும் ஆளுமையையும் எமது நாட்டுப் பெண் ஊடகவியலாளர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையைப் பொருத்தமட்டில் அச்சு ஊடகத்துறை என்பது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததொரு துறை. இதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் முகாமைத்துவ பொறுப்புகளை வகிப்பதில் எதிர்கொள்ளும் தடைகளும் வெளிக்கொணரப்பட வேண்டியவை.

'அச்சு ஊடகத்துறையில் பெண்கள் நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் போன்ற பதவிகளையே வகிக்கின்றனர். சில திறமையான பெண்களை மாத்திரமே இப்பதவிகளில் அவதானிக்க முடிகின்றது. நாட்டின் சூழ்நிலை காரணமாக பெண் நிருபர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. காரணம் இந்த அச்சு ஊடகத்துறைக்கு நேர எல்லை கிடையாது. நமது சமூகக் கட்டமைப்புகளுக்கமைய ஆண்கள் பெண்கள் உயர் பதவிகள் வகிப்பதை விரும்புவதில்லை” என தினக்குரல் பத்திரிகையில் உதவி வணிகப் பகுதி ஆசிரியராகக் கடமையாற்றும் மீரா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடகங்களில் மாத்திரமன்றி அச்சுத்துறையிலும் முகாமைத்துவப் பணிகளில் பெண்களின் பங்கு குறைவாகவே இருப்பதாக உணரப்பட்டிருக்கின்றது.

'பத்திரிகைத்துறையில் பெண்கள் பத்திரிகையாசிரியர் என்ற பொறுப்பை வகிப்பது மிகக் குறைவு. இலங்கையில் ஒன்றிரண்டு பத்திரிகை ஆசியர்களே இருக்கின்றார்கள். அவர்களும் ஆங்கில மொழி மூலமான ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களே. தமிழ் மொழி ஊடகத்துறையில் பெண்களுக்கு இவ்வாறான வாய்ப்புக்கள் வழங்கப்படுதல் அரிது. இதற்கான காரணம் எதுவென்பதை அறிந்துகொள்ள முடியாதுள்ளது. ஓரு செய்தியை அலசி ஆராய்ந்து பல கோணங்களிலும் நேர்த்தியாக எழுதும் திறமை பெண்களுக்குள்ளது. இருப்பினும் உயர் பதவிகளைப் பெறுவதில் பெண்களுக்குள்ள இரட்டைச்சுமைகள், ஆண்மையக் கட்டமைப்பு என்பனவே காரணமாக இருக்கின்றன” என பத்திரிக்கையாளராகப் பணியாற்றி வரும் துஸ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை குறிப்பிட்டார்.

ஊடகத்துறையில் கடமையாற்றும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஒரு புறமிருக்க ஒட்டுமொத்த பெண்கள் உரிமைகள் என்று நோக்குகின்றபோது இவர்களுக்கு சில கடமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

'பெண்ணுரிமை தொடர்பான சிறந்த கருத்துக்கள் பெண்களைச் சென்றடையச் செய்வதன் மூலம் ஊடகத்துறையிலுள்ள பெண்கள் ஏனைய பெண்களுக்கு உதவ முடியும். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் நாம் அவர்களை விழிப்பூட்டலாம். ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றபோது அந்தக் கருத்து சென்றடைபவர்கள் அதனை சிறப்பாக ஏற்றுக்கொண்டு செயற்படுத்த முன்வர வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இந்த முயற்சி மட்டுமன்றி பொதுவாக எந்தவொரு முயற்சியுமே தோல்வியடையும்” என தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளரான நாகபூஷணி தெரிவித்தார்.

அடுப்பபூதும் பெண்களுக்குப் படிப்தெற்கு என்ற விதண்டாவாதங்களை விட்டெறிந்து வீறுநடை போட்டு வரும் பெண்களுக்கு எத்தகைய சவால்களும் சாதாரணமானவையே. பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாரினில் வலம் வருகையில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் தகர்த்தெறியப்படும்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

No comments:

Post a Comment