Wednesday, April 14, 2010

கற்பிட்டியில் நீலக்குழந்தைகளில் பிறப்பும் இறப்பும், தொடரும் அவலம்...!

புத்தளம் மாவட்டத்தில் நீர் மாசடைதல் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இது தொடர்பில் ஆராயும் நோக்கில் புத்தளம் நோக்கிய எமது கள விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தோம். குறிப்பாக அங்கு இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் நாம் அவதானித்த நிலத்தடி நீர் மாசு அதன் காரணமாக நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்து இறத்தல் இன்ன பிற தொடர்புபட்ட நோய்கள் ஏற்படல் என்பன எமக்கு திடுக்கிடும் தகவல்களாக இருந்தன.

புத்தளத்திலுள்ள 142 முகாம்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவை கற்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மனிதர் வாழ்வதற்குப் பொறுத்தமற்ற பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில்தான் 1990ஆம் ஆண்டளவில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஃபீக் என்பவர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கற்பிட்டி பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். 1998ஆம் ஆண்டில் தனது முதற்குழந்தை பிறந்த 3 நாட்களில் இறந்ததாகவும் அதன்போது குழந்தையின் உடல் கருநீல நிறத்தில் மாற்றங்கண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் இதுபற்றி தெரிவிக்கையில் 'எனது முதல் குழந்தை ஆண் குழந்தை. அப்போது நான் விவசாயம் செய்துகொண்டிருந்தேன். முதற்குழந்தை என்பதால் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வதற்குக் கூட என் மனது தயாராய் இருக்கவில்லை. உறவினர்கள் அனைவரும் இங்கிருந்து குழந்தையை மாறி மாறி தூக்கி வைத்திருந்தார்கள். காற்றோட்டமான இடத்தில் குழந்தையை வைத்திருக்கும்போது உதடு கருத்திருப்பதை அவதானித்தோம். திடீரென குழந்தை கருநீல நிறமாக மாறிவிட்டது” என்றார்.

இதுகுறித்து திருமதி ரஃபீக் குறிப்பிடுகையில், 'பிறக்கும்போது குழந்தை நன்றாகத்தான் இருந்தது. மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த அடுத்த நாள் குழந்தை நீல நிறமாக மாறி இறந்துவிட்டது. ஆனால், அடக்கம் செய்யும்போது உடல் சாதாரண நிறமாக மாறிவிட்டது” என்றார்.

முன்னர் வெங்காயத் தோட்டங்களாகப் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட காணிகளிலேயே அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான இருப்பிடங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. மலக்கழிவுகள் மற்றும் வெங்காயத் தோட்டங்களில் பாவிக்கப்பட்ட அசேதனப் பசளையான யூரியா என்பன அதிகளவில் நிலத்தடி நீருடன் கலந்திருப்பதுவே இதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவாசம் தொடர்பான நோய்கள், இதய துவாரம் ஏற்படல் என்பன தமது சொந்த ஊரில் அவதானிக்கப்படவில்லை எனவும் அவ்வாறான நோய்கள் தாம் இடம்பெயர்ந்து வாழும் கற்பிட்டி பிரதேசத்தில் அதிகரித்திருப்பதை அறுவை சிகிச்சைக்கென முகாம்களுக்கு பணம் வசூலிக்க வருபவர்களைக் கொண்டு அவதானிக்க முடிகின்றது எனவும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வுச் செயலமர்வில் (RAFF) பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வரும் எஸ். எச். எம். ரிஸ்னி குறிப்பிட்டார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், 'வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இங்கு வந்து ஒரு திட்டமற்ற நிலையில் ஆங்காங்கே குடியேறினர். அவ்வாறு ஆலங்குடா பகுதியில் குடியேறிய மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக நோய்கள் ஏற்பட்டதுடன் இறப்புக்களும் ஏற்பட்டன. எல்லோரும் அந்த இடத்திற்குச் செல்லப் பயப்பட்டார்கள். மலசலக்கூடம், கிணறுகள் என்பன போதியளவில் இல்லாமையே அதற்கான காரணமாக இனங்காணப்பட்டது” என்றார்.
10 அடி அளவுள்ள காணித் துண்டுகளிலேயே வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நடுவில் வீட்டையும் ஒரு பக்கத்தில் கிணற்றையும் ஏனைய பக்கத்தில் மலசலகூடத்தையும் கட்டியிருப்பதனால் மலக்கழிவுகள் இலகுவாகக் கிணற்றை அடைவதாகவும் இதன் காரணமாகவே இவ்வாறான பாதிப்புகள் மக்கள் மத்தியில் ஏற்படுவதாகவும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வுச் செயலமர்வில் ஆய்வு அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் திட்ட முகாமையாளராகவும் கடமையாற்றி வரும் அப்துல் கபூர் அனீஸ் குறிப்பிட்டார்.

அவர் இதுபற்றி விபரிக்கையில், 'மாசடைந்த நீரை அருந்துவதன் காரணமாக பலவித நோய்களுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர். இலங்கையின் மொத்த வெங்காய உற்பத்தியில் கிட்டத்தட்ட 35 வீதம் கற்பிட்டி பிரதேசத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன்போது யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இது நிலத்தடி நீருடன் இலகுவில் கலந்துவிடுகிறது. இந்த நீரைத்தான் மக்கள் குடிநீராகவும் பயன்படுத்துகின்றார்கள். இது கர்ப்பவதிப் பெண்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது” என்றார்.

அண்மைக்காலமாக பல நீலக்குழந்தைகள் பிறந்ததை அவதானித்ததாகக் குறிப்பிட்ட அவர், 'இப்பகுதியில் அதிகமான முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர். சாதாரணமாக ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால் 24 மணித்தியாலத்திற்குள் புதைத்துவிட வேண்டும். இந்நிலையில்இ சிறு பிள்ளைகள் இறந்தால் மிக விரைவிலேயே புதைத்துவிடுகின்றனர். இதனால் இந்த நீல நிற மாற்றத்தை எங்களால் அவதானிக்க முடியாமல் இருக்கின்றது” எனவும் குறிப்பிட்டார்.

இதுதவிர வயிற்றோட்டம், வயிற்றுவலி, காய்ச்சல், வாந்திபேதி போன்ற சுகாதார பிரச்சினைகள் தோன்றுதல், மலக்குழி நீர் தரையில் வழிந்தோடுவதால் கால் விரல்களுக்கிடையில் நீர்ச்சிரங்கு, புண்கள் தோன்றுதல் என்பனவும் இப்பகுதி மக்கள் மத்தியில் இனங்காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சமூக அபிவிருத்திக்கான ஆய்வுச் செயலமர்வு இலங்கை சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்குகின்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு 2006ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இது பற்றி வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் சமன் சேனநாயக்கவிடம் வினவியோது, 'கற்பிட்டி பிரதேசத்தில் அதிகளவிலான அசேதனப்பசளையின் உபயோகம் காரணமாக நிலத்தடி நீர் மாசு பல தசாப்தங்களாக நிலவி வருகின்றது. அங்கு இடம்பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பதன் காரணமாகத்தான் இந்நிலை தோன்றியிருப்பதாகக் கூற முடியாது. அப்பிரதேச மக்கள் வெங்காயம், பெரிய மிளகாய் மற்றும் இதர பயிர்செய்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காகப் பயன்படுத்தப்படும் அசேதனப் பசளைகள்தான் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. ஒரு தடவை நிலத்தடி நீர் மாசடைந்துவிட்டால் அதனை நல்ல நிலமைக்குத் திரும்ப கொண்டுவருதல் கடினமான காரியம். மலக்கழிவுகள் நிலத்தடி நீருடன் கலப்பது மற்றுமொரு பிரச்சினை. கழிவுநீர் தாக்கிகளிலிருந்து வெளியேறும் கறுப்பு நிறத்திலான மணல் துகள்கள் சாதாரண மணலுடன் கலந்து பின்னர் நிலத்திற்கடியிலுள்ள நீருடனும் கலந்து விடுகின்றன. அனைத்து கழிவுநீர் தாங்கிகளிலிருந்தும் கழிவுப்பொருட்களை அகற்றி ஒரு இடத்தில் வைத்து அவற்றை பயனுள்ள வகையில் மாற்றுவதைத்தான் சுற்றாடல் அதிகாரசபை செய்யக்கூடும். அரசு செய்யக்கூடியது அவர்களை சொந்த இடங்களிலேயே விரைவில் மீளக்குடியேற்றுவதுதான்” என்றார்.

கொதித்தாறிய நீரைப் பருகுவதாலும் குளோரினைப் பாவித்து குடிநீரைத் தொற்று நீக்குவதாலும் சேதன விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பதாலும் குடிநீர் மாசினால் ஏற்படும் நோய்களிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்புப் பெற முடியும். இருப்பினும் நிலத்தடி நீர் மாசுபடாமல் காப்பது எமது ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்களை விரைவில் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவது அரசினது கடமையாக இருக்கின்றது.

No comments:

Post a Comment