
மௌன வேலிக்குள் மரணித்துக்கொண்டிருக்கும் பெண்கள் தம் மௌனத்தைக் கலைத்து உண்மைகளை உலகிற்கு விளக்க முற்பட்டாலொழிய பெண்கள் மீதான அடக்குமுறைகளும் அதிகார துஸ்பிரயோகங்களும் முற்றுப்பெறாது.
எம்மில் எத்தனையோ பெண்களுக்கு குடும்பங்களுக்குள்ளேயே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவை வன்முறை என்பதைக்கூட உணராத சில பெண்கள் எல்லா குடும்பங்களிலும் இவை நடப்பதுதானே என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். வெகுசிலரே வெளிக்கொணருகின்றனர்.
அவ்வாறே புத்தளத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணொருவர் தனது குடும்பத்தில் தனக்கு இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்து எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
'வாப்பா பெருநாள் நாட்களில் எங்களுக்கு உடுப்பு எடுத்துத் தருவதில்லை. கேட்டால் அடிப்பார். இப்படி சரியான கொடுமைகளை செய்திருக்கிறார். அடுத்தவர்களின் வாப்பா போல் எங்கள் வாப்பா இல்லையே என்று எங்களுக்கு ஆத்திரமாக இருக்கும்” என்று அவர் ஆதங்கப்பட்டார்.
தந்தையொருவரின் அன்பும் அரவணைப்புமே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும். ஆனால்இ தன் தந்தையோ மற்றவர்களின் தந்தைபோல் அனுசரணையுடன் நடந்துகொள்ளவில்லையென கவலையுடன் கூறினார்.
'வாப்பா எப்போதும் எங்கள்மேல் இரக்கமாய் இருந்ததில்லை. உம்மா தான் எங்களுக்குத் துணையாக இருந்தார். நான் நன்றாகப் படிப்பேன். படிப்பதற்கும் எனக்கு என் வாப்பாவின் துணையிருக்கவில்லை. உம்மா அப்பம் செய்து விற்றுத்தான் என்னை படிக்க வைத்தார்.”

கல்விப் பொது தராதர சாதாரணத் தரத்தில் நல்ல பெறுபேற்றுடன் தேர்ச்சிபெற்ற இவருக்கு உயர்தரத்தில் கல்விகற்கும் வாய்ப்புக் கிட்டியும் தனது தந்தை தனக்கு திருமணம் முடித்து வைக்க விரும்பியதால் தனது படிப்பு தடைப்பட்டதாகத் தெரிவித்தார். இருந்தாலும் தனது சுய ஆர்வத்தின் பேரில் முதலாமாண்டு வரை கற்றிருக்கின்றார்.
வாப்பா வேறொரு திருமணம் முடித்துவிட்டார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு தடவைதான் வருவார். அவர் வீட்டிற்கு வராத நாட்களில் நான் பாடசாலைக்கு சென்று உயர்தரத்தில் முதலமாண்டுவரை படித்தேன். எங்கள் வீட்டிலிருந்த தென்னை மரத்தை விற்றுத்தான் எங்கள் உம்மா என்னை முதலாமாண்டு படிக்கவைத்தார்.
பதினெட்டே வயதான தனக்கு திருமணத்தின் மீது சிறிதும் விருப்பமில்லை என்று கூறிய இவர் தன் தந்தை மீது தனக்கிருந்த பயத்தின் காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருமணத்திற்கு சம்மதித்திருக்கின்றார்.
வாப்பா எனக்கு திருமணம் பேசினார். விருப்பமில்லை என்று சொல்லவும் என்னை சாகடிப்பேன் என்று பயமுறுத்தினார். வாப்பா எங்களை அடிப்பார். அதனால் நாங்கள் அவருக்கு சரியான பயம். நீ முடிக்கத்தான் வேண்டுமென்று கட்டாயப்படுத்தினதால் கல்யாணம் முடித்தேன்.
கணவரின் தாய் இறந்துவிட்ட காரணத்தினால் அந்தக் குடும்பத்தில் இவரைத் தவிர பெண்கள் எவரும் இருக்கவில்லை. கணவரின் தகப்பனுக்கோ இவர் கர்ப்பமானதில் சிறிதும் விருப்பமில்லை. இருந்தாலும் தனது கணவராவது தனக்கு ஆறுதலாய் இருப்பார் என்ற இவரின் எதிர்பார்ப்பும் வீணாய்ப்போனது காலத்தின் கொடுமை. கர்ப்பவதியான இவருக்கு போசாக்கான உணவு வழங்கக்கூட எவரும் தயாராய் இருக்கவில்லை. பிரசவத்திற்கென தாய்வீடு செல்வதற்கும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
'எனக்கு குழந்தை கிடைக்கவிருந்த நேரம் என்னை வீட்டிற்கு விடவில்லை. எங்கள் உம்மா, வாப்பா யார் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டாலும் அவர் என்னை அடிப்பார். நீ இங்கதான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். குழந்தை கிடைக்கும்போது ஒரு பெண் துணையிருந்து பார்ப்பதுபோல் வராது. மாமி இருந்தால் நான் இங்கு இருப்பேன். அவர் இல்லாததால் நான் வீட்டிற்கு போகிறேன் என்னை அனுப்புங்கள் என்று சொன்னேன். ஆனால் என்னை அனுப்பவேயில்லை.”
குழந்தை பிறந்த பின்னர் 11 நாட்கள் மட்டுமே இவர் தன் தாயால் கவனிக்கப்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் தனியாகவே சகல வேலைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்.
'பிள்ளையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்தேன். அப்படியெல்லாம் கஸ்டப்பட்டாலும் அவருக்கு பொறுப்பு இல்லை. மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள், அவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு இல்லை.”

திருமணம் வேண்டாம் என தீர்க்கமாக சொல்லுமளவிற்கு தைரியமில்லாமல் போனதால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்த இவர் தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார். தன்னைப்போன்று குடும்ப வன்முறைகளால் பாதிக்ப்பட்ட பெண்கள் நாட்டில் இருப்பதைத் தான் உணர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
'யாருக்காகவும் நம்முடைய வாழ்க்கையை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. நாம் எடுக்கின்ற தீர்மானத்தின்படி நாம் இருக்கவேண்டும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் பின் விளைவுகளை அறிந்து நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். பயத்தால்தான் என் வாழ்க்கை இப்படி போய்விட்டது.”
ஆண்கள் சொல்வதுதான் வேதம், அவர்கள் காட்டுவதுதான் உலகமெனில் பெண்களுக்கென்று இதயமும் கண்களும் எதற்கு? இந்த நிலை என்று மாறும்? வன்முறைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களின் அவல நிலை என்று தீரும்?
No comments:
Post a Comment