
வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் ஏற்படுவது தொடர்பிலும் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் சுகாதார வசதிகள் தொடர்பிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான தேசிய ஆலோசகர், மருத்துவர் நவரட்ணசிங்கம் ஜனகன் உடனான நேர்காணல்.
கேள்வி: வவுனியா நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்கள் எத்தகைய சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது?
பதில்: மெனிக்ஃபாம் முகாம்களில் கிட்டத்தட்ட 70,000 பேர் இருக்கின்றார்கள். ஒவ்வொரு வலயங்களிலும் அவர்களுக்கான வைத்தியசாலைகள் இருக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தற்போது முகாம்களிலிலுந்து வெளியில் சென்று வருவதற்கான வசதிகள் இருக்கின்ற காரணத்தினால் மக்கள் தம்முடைய வைத்திய தேவைகளை வெளியிலும் சென்று பெற்றுக்கொள்கின்றார்கள். உதாரணமாக செட்டிக்குளம் தள வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் அவர்களுக்கு அருகில் இருக்கின்றன. செட்டிக்குளத்திலுள்ள ஒவ்வொரு நிவாரணக் கிராமத்திலும் இருபத்து நான்கு மணித்தியாலமும் தொழிற்படுகின்ற வைத்தியசாலைகள் இருக்கின்றன. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கிட்டத்தட்ட 70 வைத்தியர்கள் இங்கு கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இது தவிர உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் 8 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வெளிக்கள சுகாதார ஊழியர்களும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இடம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய சுகாதாரத் தேவைகள் ஓரளவு பூர்த்திசெய்யப்பட்டு வருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் தொற்றுநோய்கள் பரவலாகக் காணப்பட்டன. தற்போது எவ்வாறான நிலமை காணப்படுகின்றது?
பதில்: 2009ஆம் ஆண்டின் ஆரம்பகாலப் பகுதியில் பல தொற்றுநோய்கள் அதிகளவில் இங்கே காணப்பட்டன. உதாரணமாக செங்கண்மாரி, ஈரல் அலர்ஜி, வயிற்றோட்டம், வயிற்றுழையு, கொப்பளிப்பான் போன்ற நோய்கள் பரவலாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது அந்த நோய்கள் முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எங்களுக்கு எவ்வித செங்கண்மாரி நோயாளியோ அல்லது நெருப்புக் காய்ச்சல் நோயாளியோ அல்லது வயிற்றுழைவு நோயாளியோ அறிவிக்கப்படவில்லை. அதுபோல 2009ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வவுனியா நகரப் பகுதியில் டெங்குநோய் அதிகளவில் காணப்பட்டது. அந்தகாலப் பகுதியில்தான் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் வெளியில் சென்றுவர வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா நகரப் பகுதிக்கு வந்து சென்ற காரணத்தினால் அவர்கள் மத்தியிலும் டெங்குக் காய்ச்சல் தொற்றியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது டெங்குக் காய்ச்சல்கூட கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கேள்வி: இவர்கள் மத்தியில் குறிப்பாக கூகைக்கட்டு நோய் தற்போது பரவி வருவதாக அறிகின்றோம். எதன் காரணமாக இந்நோய் தற்போது பரவி வருகின்றது?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்போது கூகைக்கட்டு நோய் பரவி வருவதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆரம்பத்தில் இந்நோய் குறிப்பிட்ட சில நிவாரணக்கிராமங்களில்தான் காணப்பட்டது. ஆனால் பெப்ரவரி மாதமளவில் அந்த நிவாரணக்கிராமம் மூடப்பட்டு அங்கிருந்த மக்கள் மற்றைய நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் இந்நோய் மற்றைய பகுதிகளுக்கும் பரவியதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. உதாரணமாக சித்திரை மாதத்தில் அதிகளவில் கூகைக்கட்டு நோய் காணப்பட்டது. ஆனால் இப்போது அந்நோயும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கேள்வி: தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றீர்கள்?
பதில்: நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் நாங்கள் சில பிரச்சினைளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. ஏனென்றால் இந்நோய் வருகின்றவர்களைக் கூடுமானளவில் தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் இந்நோயைத் தடுப்பதற்கு முயற்சிக்கின்றோம். நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கென சில வைத்தியசாலைகளை நாங்கள் அடையாளங்கண்டிருக்கின்றோம். ஆனால் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்களில் பலர் இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெறுவதை விரும்புவதில்லை. அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றபோது அவர்களின் குடும்பத்தவர்கள் மீள்குடியேற்றப்பட்டால் குடும்பங்களில் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாக தொற்றுநோய் உள்ள பலர் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற விரும்புவதில்லை. கூகைக்கட்டு நோயைப் பொறுத்தவரையில் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஆரம்பத்தில் எங்களுக்கு சிரமங்கள் இருந்தது. அதற்கு இது காரணமாக இருந்தது. இந்நோய்கூட தற்போது ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கேள்வி: தொற்றுநோயாளிகளுக்கு எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன? கூகைக்கட்டு தவிர வேறென்ன நோய்கள் இனங்காணப்பட்டுள்ளன?
பதில்: கொப்பளிப்பான் நோயைப் பொறுத்தவரையில் தற்போது பெரியளவில் நோயாளர்கள் காணப்படாவிடினும் ஒவ்வொரு வாரமும் 5 தொடக்கம் 10 வரையிலான நோயாளிகள் இனங்காணப்படுகின்றார்கள். தொற்றுநோயுள்ளவர்களைப் பொதுவாக நாங்கள் பூவரசங்குளம் பகுதியிலுள்ள பிரதேச வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுத்து வருகின்றோம். கொப்பளிப்பான் கூகைக்கட்டு தவிர வயிற்றோட்டமும் சிறpயளவில் இங்கே காணப்படுகின்றது. இந்த வயிற்றோட்டம் கிருமிகள் மூலம் தொற்றுவதைவிட உணவு ஒவ்வாமை அல்லது உணவைத் தாமதித்து உண்பது போன்ற காரணங்களினால்தான் இவை மிக முக்கியமாக ஏற்படுகின்றது. கிருமிகள் மூலமாக ஏற்படுகின்ற வயிற்றுழைவைப் பொறுத்தவரையில் அது பூரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது.
கேள்வி: பாரதூரமான நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன?
பதில்: அவ்வாறானவர்கள் உடனடியாக அருகிலுள்ள பெரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு பெரிய வைத்தியசாலைகள் இங்கு இருக்கின்றன. ஒன்று செட்டிக்குளத்திலுள்ள தள வைத்தியசாலை மற்றையது வவுனியா பொது மருத்துவமனை. எந்தவொரு இடம்பெயர்ந்த நபரும் அவர்கள் விரும்புகின்ற பட்சத்தில் அவர்களுடைய முகாம்களுக்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளுக்கும் சென்று சிகிச்சை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
கேள்வி: உலக சுகாதார ஸ்தாபனம் அரசிற்கு எத்தகைய உதவிகளை வழங்கி வருகின்றது?
பதில்: நாங்கள் மீள்குடியேற்றம் இடம்பெறுகின்ற பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளைப் புனருத்தாரணம் செய்வதற்கான உதவிகளை வழங்கி வருகின்றோம். மீள்குடியேற்றப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றது. ஆகவே சுகாதார அமைச்சிற்கு சுகாதார ஊழியர்களை மீள் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஏற்கனவே மருத்துவக் கல்வியை முடித்து உள்ளகப் பயிற்சிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வைத்தியர்களை குறுகிய காலத்திற்கு சேவையில் அமர்த்துவது அதுபோல சுகாதாரத் தொண்டர்களைப் பணியில் அமர்த்துவது போன்றவற்றிற்கும் உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய உதவியை வழங்கிக்கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment