
அன்னையைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை, அவள் புகழ் கூறாத காவியங்களுமில்லை! என்றாலும் அவளைப் பற்றிச் சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம் சொற்களின் பொலிவு போதாமையை உணர்கின்றோம்!
கடந்த மே 9ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. கருவேற்று உருத்தந்த உத்தமி அன்னையின் அன்பினை அகிலத்திற்கு எடுத்துணர்த்தும் வகையில் இத்தினம் சிறப்பிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது தமது தாயைப் பிரிந்த பிள்ளைகளைக் கேட்டால் அவளின் அன்பைச் சொல்ல வார்த்தைகளின்றி கண்ணீரை மட்டுமே பதிலாக உதிர்ப்பார்கள். அதேபோல், தன் பிள்ளையைப் பிரிந்த தாயின் தவிப்பை வார்த்தைகளால் விபரிக்க முடியாது!
இடப்பெயர்வின்போது முள்ளிவாய்க்காலில் தன் மகள் தமிழினியைத் தவறவிட்ட திருமதி. பரமகுருநாதன், தன் மகள் குறித்த தனது ஏக்கங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். கலகலப்பான இயல்பு கொண்ட தன் மகளின் நினைவுகள் நீங்காமல் தன்னுடன் இருப்பதாகவும் அதனை மறக்க வழியறியாது தவிப்பதாகவும் தெரிவித்தார்.

உறவும் பிரிவும் உலகியல் நியதி. இருந்தாலும் தாய்மையின் பிரிவும் அவளது தவிப்பும் அளவிட முடியாத சோகங்களை உள்ளடக்கியது. குழந்தைக்கான ஒரு தாயின் தேவையும் தாய்க்கான ஒரு குழந்தையின் தவிப்பும் பிணைக்கப்பட்ட அன்பியல் கூற்று.
தன் மகனைப் பிரிந்து வாழும் யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியைச்சேர்ந்த சிவசிதம்பரம் சிவபாக்கியம் என்பவர் தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கையில் 'எங்களுக்கு ஒரேயொரு ஆண் பிள்ளைதான். அவர்தான் உழைத்து எங்களைப் பராமரித்தார். அவர் காணாமல் போயுள்ளார். எங்களுக்கு வயது போய்விட்டது. நாங்கள்தான் கூலிவேலைக்குப் போய் எங்கள் மற்ற பிள்ளைகள் இரண்டையும் வளர்க்கிறோம். யுத்தத்தின்போது காணாமல் போன எம் பிள்ளை இப்போது இருந்திருந்தால் எங்களைப் பார்ப்பார். எங்கள் பிள்ளை தற்போது எங்கு இருக்கின்றாரோ தெரியவில்லை” என்றார்.
பிள்ளைகளுக்காக ஒரு தாய் இந்த உலகையே இழக்கத் துணிவாள். ஆனால், தன் பிள்ளைகளை இழக்க எந்தத் தாயும் துணிவதில்லை. பிரிந்துவிடும் எனத் தெரிந்தும் மலரை சுமக்க மறுப்பதில்லை தாய்ச்செடி. பிரியும் பூவையும் பிரியத்துடன் சுமப்பதை தன் பாக்கியமாகக் கருதும் அது. ஆனால் பிரிவார்கள் என்று கனவிலும் நினைத்திடாத தன் பிள்ளைகளின் பிரிவு பற்றிய ஒரு தாயின் பரிதவிப்பு இது.
சுப்ரமணியம் சுப்ரவாணி தற்போது வவுனியா மெனிக்ஃபாம் முகாமில் வலயம் நான்கில் வசித்து வருகின்றார். 22 வயதுடைய தன் மகன் சிவமோகன், மகள் சுகந்தினி ஆகிய இருவரையும் யுத்தத்தின்போது தவறவிட்டுள்ளார். பொருட்களின் இழப்புக்கள் தமக்குப் பெரிய பாதிப்புக்களைத் தரவில்லை என்று கூறிய அவர், தனது இரண்டு பிள்ளைகளின் பிரிவு தன் குடும்பத்தாரையும் தன்னையும் பாரியளவில் பாதித்திருப்பதாகத் தெரிவித்தார்.

காலமும் வாழ்க்கையும் இருவேறு திசைகளில் பயணிக்கையில் பிரிவுகள் என்பவை நிச்சயிக்கப்பட்டவையே. பிரிவிலும் கூட தன் பிள்ளையின் கல்வியையும் அவனது உயர்வையும் மட்டுமே விரும்பும் ஒரு தாயின் கனவு இது.
முள்ளியவளையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிரஞ்சனா பிரபாகரன் காணாமல் போன தன் மகனைக் காணக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். தனது மகன் பிரபாகரன் சுஜீகரன் இந்தவருடம் உயர்தர கணிதப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியவர் என்றும் அவரது படிப்பு குறித்து தான் கவலையடைவதோடு அவரை எப்படியாவது விரைவில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்ட தாய்மையின் உணர்வுகளை அப்படியே வெளிக்கொண்டுவர எம்மால் இயலாது. காரணம் அவை வெறுமனே வார்த்தை வெளிப்பாடுகளுக்குள் கட்டுப்படுவதில்லை. மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும் கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள். அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது.
No comments:
Post a Comment