Saturday, May 7, 2011

அன்னையர் தினம்


அம்மா என்ற மந்திரம், அது அன்பை விதைக்கும் எந்திரம்!
அந்திப் பொழுதில் அவள் அழகாய் ஊட்டிய நிலாச்சோறு
நினைத்துப் பார்க்கையில் தேனாய்ச் சுவைக்கும் எம் அனைவருக்கும்!
அவள் விரல் பட்ட உணவில்தான் நாம் உயிர் வளர்த்தோம்!
அவள் இதழ் சிந்திய வார்த்தையை உச்சரித்துத்தான்
மொழி பழகினோம்! அன்னையைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை,
அவள் புகழ் கூறாத காவியங்களுமில்லை! என்றாலும்….
அவளைப் பற்றிச் சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம்
சொற்களின் பொலிவு போதாமையை உணர்கின்றோம்!
குழந்தைக்கான ஒரு தாயின் தேவையும் தாய்க்கான ஒரு
குழந்தையின் தவிப்பும் பிணைக்கப்பட்ட அன்பியல் கூற்று.

பிள்ளைகளுக்காக ஒரு தாய் இந்த உலகையே இழக்கத் துணிவாள்.
ஆனால், தன் பிள்ளைகளை இழக்க எந்தத் தாயும் துணிவதில்லை.
பிரிந்துவிடும் எனத் தெரிந்தும் மலரை சுமக்க மறுப்பதில்லை தாய்ச்செடி.
பிரியும் பூவையும் பிரியத்துடன் சுமப்பதை தன் பாக்கியமாகக் கருதும் அது. காலமும் வாழ்க்கையும் இருவேறு திசைகளில் பயணிக்கையில்
பிரிவுகள் என்பவை நிச்சயிக்கப்பட்டவையே.

போரினால் தம் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும்
தாய்மையின் தவிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்ட தாய்மையின் உணர்வுகளை
அப்படியே வெளிக்கொண்டுவரவும் எம்மால் இயலாது. காரணம்
அவை வெறுமனே வார்த்தை வெளிப்பாடுகளுக்குள் கட்டுப்படுவதில்லை.
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை
உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும்
கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை
வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள்.
அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி
அவர்களுக்கு அக்கறை கிடையாது.
அன்னையர் தினத்திற்கும் அர்த்தம் கிடையாது!

கருவேற்று உருத்தந்த உத்தமி அன்னையின் அன்பினை
அகிலத்திற்கு எடுத்துணர்த்தும் வகையில் அன்யைர் தினத்தை சிறப்பிக்கும் நாம்
போரினால் பிரிவுற்ற உறவுகளுக்காகவும் பிரார்த்திப்போம்!

1 comment: