இருப்பு…?!
நேற்றுப் போட்ட கோலமாய்
கலங்கிப்போய் காட்சி தருகிறது
வெகுதூரத்தில் கனவுக் கப்பல்!
தொடக்கப் புள்ளியை வட்டத்தில்
தேடிப் பார்த்து வழிமாறி
விட்டத்தை நோக்கும் விழிகளுடன்
விடைதேடியே விடிகிறது பொழுதுகள்!
விசையுறு பந்தினைப் போல்
மீண்டுவந்து மோதி நிற்கும்
நினைவுகளுக்குள் தேடிப் பார்க்கிறேன்
எங்காவது சிதைந்து போனதா
என் சுயத்தின் சுவடுகள்?!
தேய்மானங்கள் போக
தேங்கி நிற்கும் பிறைநிலவாய்
வீதியோரமாய் வீசப்பட்டு காதறுந்து
கவனிப்பாரற்றுக் கிடக்கிறது
‘இருப்பு’ என்னும் ‘செருப்பு’…!!!
No comments:
Post a Comment