Saturday, February 11, 2012

ஏன் என்னைக் காதலிக்கிறாய்?


ஏன் என்னைக் காதலிக்கிறாய்?

கனங்களால் கணங்கள் நிறைந்து, காத்திருந்து காதல் வளர்த்து, காலம் பார்த்து அதைச் சொன்னதும் கண்டிப்பாய் இந்தக் கேள்வி மறுமுனையில் தொக்கி நிற்கும்!

காதலுக்குக் காரணம் தேடி காலங்காலமாய் ஓடிக் களைத்தவர்கள் பட்டியலில் நாமும் சேர்ந்து கொண்டு காரணம் கண்டுபிடிக்க விரைகிறோம்!

என்னைக் கேட்டால், காரணத்தோடு வரும் காதலை நான் அந்தப் பெயரில் அழைப்பதில்லை.

ஒரு முறை தான் காதல் வரும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், முதற்காதல் மூச்சு நிற்கும் வரை மனதின் எங்கோ ஓர் மூலையில் மரணிக்காமல் பதுங்கிக் கிடந்து, சமயம் பார்த்து சற்றுத் தலைதூக்கி, விழியோரமாய் நீரை வரவழைக்கும்.

மணித்துளிகள் விரைந்தோடி நாட்களும் மாதங்களும் வருடங்களாகிக் கடக்கும் போது உங்கள் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பாருங்களேன், சொல்லியதும் சொல்லாததுமாய் எத்தனை காதல்கள் கண்களுக்குள் கருக்கொள்ளும்!??

தனித்திருக்கும் பொழுதுகளில் காதலுக்காய் தவித்த தருணங்கள் உங்கள் நினைவுகளில் நிழலாடியதுண்டா? கண்களை மூடி கண்ணீர்த்துளிகளால் அந்த நினைவுகளுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியதுண்டா? மற்றவர்களிடம் சொல்லி மனதையாற்றிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து புளுங்கிப்போனதுண்டா?

அப்படியானால், இந்தக் காதலர் தினத்தை நீங்கள் நினைவு தினமாக அனுஷ்டிக்கலாம் அல்லவா? இது தவிரவும், காதலர் தினத்தில் எப்படியாவது காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று கிளம்பும் போது, கண்டிப்பாய் இந்தக் கேள்வி உங்களை நோக்கி தொடுக்கப்படும்.

“ஏன் என்னைக் காதலிக்கிறாய்?”

உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போவீர்கள்!!!

ஆனால், தைரியமாகச் சொல்லுங்கள், காரணம் பார்த்துக் காதல் வருவதில்லை, காரணத்தோடு வருமென்றால் அது காதலில்லை.


இனி காரணம் தேடி அலையாதீர்கள்!

2 comments:

  1. ஏன் என்னைக் காதலிக்கிறாய்? ....

    இன்றைய காதலர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல பதில்தான்....

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete