Saturday, October 26, 2013

அறிந்தும் அறியாமலும்; பெண்ணியம் ஓர் பார்வை!

பெண்ணியம் பேசும் பலருக்கும் அதன் தாத்பரியம் புரிவதில்லை. ஆண்களுக்கெதிரான கும்பல் கோஷமிடுவதாக சிலர் கருதிக்கொள்கின்றனர். இன்னும் சிலரோ அர்த்தம் தெரியாமலேயே கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றனர்.

பெண்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டமே பெண்ணியத்தின் எடுகோள். சுயநிர்ணயம் (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒருவர் தமது அரசியல் மற்றும் இன்ன பிற ஏற்பாட்டைத் தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது.


வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு அல்லது தனது தற்போதைய கட்டுண்ட நிலையில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவருக்குள்ள சுதந்திரமே சுயநிர்ணயம் என்பதன் வரைவிலக்கணம் ஆகும்.கட்டுண்ட நிலைக்கு இங்கு தவறான அர்த்தம் கற்பித்தலாகாது. குடும்ப கட்டுக்கோப்புகளையே இங்கு கட்டுண்ட நிலை என எடுத்தியம்பவில்லை. காரணம், அன்பினால் கட்டுண்டு பல விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வதுண்டு.


பெண்ணியம், பெண், விடுதலை, உரிமை, ‍feminism, feminist, rights, female


இருந்தாலும், குடும்ப கட்டுக்களை மட்டுமே கருத்திற்கொள்ளாது பரந்த உலகம் பற்றியும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
குடும்பக் கட்டுக்கோப்பிலும் சரி, சமூகக் கட்டமைப்பிலும் சரி, காலம் காலமாய் பெண்மையை மட்டும் அடையாளப்படுத்தி பெண்களை அடக்கி வைப்பது முறையல்ல. அதை இன்றும் பலர் ஆதரிப்பது ஆச்சரியமளிக்கிறது.

பெண்மைக்குரிய குணங்களாக வீட்டு வேலைகளையும் கணவனுக்கு பணிவிடை செய்வதையும் மட்டுமே சித்தரிப்பது வேதனையைத் தருகிறது. 


குடும்பம் என்று வருகையில் சில கடமைகளை இருபாலரும் பொறுப்பெடுக்க வேண்டுமே தவிர, எவரும் எவருக்கும் பணிவிடை செய்யப் பிறந்தவர்கள் அல்லர் என்பதை மறந்திடலாகாது.


பெண்ணியம் ஆண்களுக்கெதிரான ஒன்றெனக் கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். பெண்களும் ஆண்களும் சமமானவர்கள் அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இருவரும் தனித்துவம் மிக்கவர்கள் என்பது. யாரும் யாருக்கும் மேலானவர்கள் அல்லர்! கீழானவர்களும் அல்லர்!


அதோடு கற்பு, ஒழுக்கம் போன்ற விடயங்கள் ஆணுக்கும் பொதுவானவையே, பெண்களுக்கு மட்டுமாய் விதிக்கப்படுவதைத்தான் அபத்தம் என்கிறோம்!கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" என்றார் பாரதி. பொதுவாக இல்லாத சில கோட்பாடுகளை ஏற்க நாம் தயாரில்லை.


பெண்ணுரிமை என்பது எவ்வளவு முக்கியமானதோ அந்தளவு பெண்ணின் கடமைப் பண்பும் முக்கியமானதாகும். அதை மீறுவதை நாம் ஆதரிக்கவில்லை. இந்த கடமைப் பண்புகளில் நால்வகை குணங்களை சேர்ப்பது மடமை.


அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டும் நங்கையர்க்கல்ல என்று எப்போதோ பாரதி சொல்லிவிட்டார். சுயகட்டுப்பாடு என்பதை கடமைப் பண்புகளில் இணைத்தல் பொருந்தும். என்றாலும், அது இருபாலருக்கும் இருத்தல் அவசியம்.


ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லாம் சமமாகக் கிடைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவியலாது. அத்தோடு ஆண் வர்க்கத்தின் மீதான காழ்ப்புணர்விற்கும் பெண்ணியத்திற்கும் தொடர்பில்லை. அத்தகைய காழ்ப்புணர்வுகள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாகத் தோன்றியவை. அவற்றை பொதுவாகப் பார்த்தலாகாது.


 பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல, ஆதிக்கத்திற்கு எதிரானது, ஆதிக்க வர்க்கம் ஆண்கள் என நீங்கள் ஏற்றுக்கொண்டால் அது உங்கள் கருத்து, ஆதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் அதை நாம் எதிர்ப்போம்!!! ஒன்று நினைவிருக்கட்டும், பாரதி காலம் தொட்டு இன்று வரை பெண்கள் எல்லா உரிமைகளையும் போராடித்தான் பெற்றுள்ளார்கள். 


இருந்தாலும் பெண்கள் குடும்ப, சமூக மற்றும் அலுவலகப் பொறுப்புகளை சரிவர செய்தும் வருகின்றார்கள். (ஒரு சில தவறான உதாரணங்களைத் தவிர)தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் எடைபோடும் சிலரின் அறியாமையைக் கண்டு நகைப்பதா, அழுவதா தெரியவில்லை. 


அன்றியும், அடிமைகளாய் இருப்பதிலேயே ஆனந்தமடைகின்றனர் சிலர், இவர்கள் முழு சுதந்திரத்தின் சுவையறிந்தால் போதும்.

காலத்தின் தேவைக்கேற்ப மாற்று வடிவங்களோடு பெண்ணியம் பரிணமிக்க வாழ்த்துக்கள்! 

No comments:

Post a Comment