Monday, January 4, 2010

எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்...

தேநீர் குடித்த கோப்பை, பால், காய்கறிகள் வாங்கிய பைகள், குழந்தையின் உணவுக் குவளைகள், நாகரிக நாற்காலிகள், விலையுயர்ந்த வீட்டுத் தளபாடங்கள் அப்பப்பா.... எங்கெங்கு காணினும் அத்தனையும் பிளாஸ்டிக்.

வீடுதோறும் வந்து குவிந்து, மண்ணுக்குள் மக்காமல் சிக்கி, மழைநீர் கசிவை மறித்து, பாதாள சாக்கடையில் பதுங்கி, குப்பையோடு எரிந்து விஷக்காற்றாய் மாறி!... சில நேரங்களில் மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டு மறுபடியும் வீட்டுக்கே வருகிறது. இதை உருவாக்கிய மனிதனுக்கு உருக்குலைக்கத் தெரியவில்லை. பொலித்தீன் ஆக்கிரமிப்பில் தொடங்கி அழகாய் விரிந்துவிட்டது பிளாஸ்டிக் உலகம்.

மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில்
தென்மேற்குப் பருவக்காற்று வீசக்கூடும்,
மன்னிக்கவும் இது தென்மேற்கு பிளாஸ்டிக் காற்று!


தன்னையே முழுமையாக அழிக்கும் வல்லமை உடையவைகள் என்பதை உணராமல் மனிதன் கண்டுபிடித்தவற்றுள் ஒன்றுதான் பிளாஸ்டிக் (PVC – Poly Vinyl Chloride). மண்ணில் மக்குவதற்கு இவை பல இலட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும்போதும் அவற்றை எரிக்கும்போதும் டயாக்சின் (Dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை உட்கொள்ளும் மனிதருக்கு சில புற்றுநோய்களும் சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் சார்ந்த நோய்களும் உண்டாகிறது. ஓரு மனிதன் 4PG/KG உடல் எடைக்குமேல் இவ்வாயுவை நுகர்ந்தால் பேராபத்து விளையும். ((PG என்பது Piccogram, 1 Piccogram = 1/10, 12 Gram. 50 கிலோ எடையுள்ள ஒருவர் 20 Piccogram டயாச்சினை சுவாசித்தால் மரணம் நிச்சயம்) இதனைத் தடுக்க பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களையும் பொலித்தீன் பைகளையும் சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்பலாம்.

பூமி தன்னை ஒரு பூஞ்சோலையாக நம்மிடம் ஒப்படைத்தது. நாம் தான் அதை பாலைவனமாக மாற்றி வருகிறோம். 460 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த நம் பூமியை ஒரே நிமிடத்தில் அழித்துவிடும் வல்லமை படைத்த அணு ஆயதங்களைப் போட்டிபோட்டுத் தயாரித்து வருகின்றோம். நம்மை வாழ வைக்கின்ற நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்திவிட்டு நாம் எங்கு போவது?

நம்முடைய ஒவ்வொரு செயலும் செயற்கை சாதனங்களும் பூமியின் தட்பவெப்ப நிலையை மாற்றி வருகிறது. துருவப் பிரதேச பனிக்கட்டிகள் தட்பவெப்பநிலை மாற்றத்தால் உருகி கடலுடன் கலக்கிறது. இதனால் கடற்பரப்பு அதிகரித்து கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் இன்று விசனம் தெரிவிக்கின்றனர். 2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.5 மீட்டருக்கும் அதிகமாக உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பாதிக்குமேல் கடற்கரையை ஒட்டி வாழ்கிறார்கள். இவர்கள் நிலை 2050இல் என்னவாகும்?

No comments:

Post a Comment