Wednesday, August 24, 2011

அகதியாக நான்…

காலம் தந்த காயங்களை காலம் தான் ஆற்றும் என்பார்கள். ஆனால், அந்தக் காலத்தாலும் ஆற்ற முடியாத காயங்களும் உண்டு என்பதை எனக்கு அகதி முகாம் வாழ்க்கை தந்த அழியாத காயங்கள் நினைவூட்டுகின்றன. குழந்தையாக இருந்த பொழுதே அகதி அந்தஸ்த்துப் பெற்று அண்டை நாடான இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தவள் நான். கடற்சீற்றங்களுக்கு மத்தியில் நீண்டு விடிந்த இரவுப் பயணத்தின் பின் மண்டபம் முகாமை அடைந்து அங்கிருந்த அதிகாரிகள் எம்மை பதிவு செய்து முகாம்களுக்குள் அனுப்பிய போது சீரழிவுகள் தெரியாத சிறுபிள்ளையாக இருந்தாலும் வீட்டை விட்டு வந்த துயரத்தின் சிணுங்கலுடன் முகவரியறியா முகாம்களுக்குள் நாங்கள் ஐக்கியமானது அடி மனதில் இன்றும் நிழலாடுகிறது.

உப்புமா தான் இந்தியாவின் தேசிய உணவு என்பதை உணர வைத்தது அங்கு அன்றாடம் வழங்கப்பட்ட உணவு வகையறாக்கள். அந்த நேரத்தில் இலவசமாக கிடைக்கப் பெற்ற உணவு என்பதால் அது தான் அமிர்தமாகத் தோன்றியது எம்மில் பலருக்கு. அங்கிருந்து வேறு முகாம்களுக்கு அடிக்கடி மாற்றப்பட்ட பொழுதுகளில் எல்லாம் எமது இருப்புகள் கேள்விக்குறியானதோடு படிப்பிலும் இடி விழுந்தாற் போல் ஆனது. அடிக்கடி பாடசாலை மாற்றம் வேறு…

தமிழகப் பாடசாலைகளில் எமக்கு பெரிதாக கட்டண சலுகைகள் எவையும் இருக்கவில்லை. ஒரு சில பாடசாலைகள் மாத்திரம் குறைந்த சலுகைகளை வழங்கியதோடு சில கிறிஸ்தவ சபைகளுடாக பாடநூல்களும் ஏடுகளும் கிடைக்கப்பெற்றன. முகாம்களுக்கு அருகில் மட்டுமே தொழில் செய்ய எமது குடும்பத் தலைவர்களுக்கு அனுமதி கிடைத்ததன் பயனாக அன்றாட செலவுகளை சமாளிக்க மட்டுமே போதுமான வருமானம் கிடைத்தது. பாடசாலைக் கட்டணங்களுக்கோ இதர செலவுகளுக்கோ இங்கிருந்து கொண்டு சென்றிருந்த அம்மாவின் நகைகளை விற்க வேண்டி இருந்தது. பல நேரங்களில் பாடசாலைக் கட்டணங்கள் கட்டாதவர்கள் வரிசையில் எமது அகதி மாணவர்கள் சகிதம் நானும் நின்றதும் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு திருப்பியனுப்பப் பட்டதும் நினைவிலிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல்கால பிரசாரங்களின் போதும் ஏனைய நிகழ்வுகளுக்கான வருகைகளின் போதும் ராஜீவ்காந்தியை உதாரணம் காட்டி எமது இளசுகளும் குடும்பத் தலைவர்களும் வெளியில் செல்ல முடியாதவாறு முகாம்களுக்குள் முடக்கப்பட்டபோதெல்லாம் எமக்காகக் குரல் கொடுக்க எந்த செழியர்களும் கோமான்களும் இருக்கவில்லை. அத்தோடு அன்றாட தொழில்வாய்ப்புகளும் கேள்விக்குறியாக்கப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்பட்ட சலுகைகள் யானைப் பசிக்கு சோளப்பொறி கதையாகத் தான் இருந்தது. அரச கோடவுண்களில் (களஞ்சியசாலைகளில்) வைக்கப்பட்டு எலிகளுக்கு மிஞ்சிய அரிசி கிடைக்கப்பெற்றதுவே எமக்குக் கிடைத்த பெரிய வரம்!!!

10 அடி வீட்டிற்குள் தான் பகலிரவுக் காட்சிகள் என்ற பரிதாப நிலையில் பாழ்பட்டுப் போனது சில இளசுகளின் மனசுகள். ஆம்! அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த அந்த வீடுகளுக்குள் தான் அனைத்தும் என்ற நிலையில் சீரழிவுகள் எவ்வாறு சீர்தூக்கியிருக்கும் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. இதன் விளைவாக இளவயது திருமணங்களும் கர்ப்பங்களும் நிகழாமல் இருக்கவில்லை.

இதுதவிரவும் பாடசாலையில் அகதி நாய்கள் என்று எவரோ சொன்னார்கள் என்பதற்காக உள்ளுர்காரர்களுக்கும் எமது ஈழத்தமிழர்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்தப் பாடசாலைக்கே திரும்பிப் போக முடியாத சம்பவம் நேர்ந்த பொழுது தான் “ஓ நாம் அகதிகள்இ தாழ்த்தப்பட்டவர்கள்” என்ற எண்ணம் என்னுள் எட்டிப்பார்த்தது. ஆனாலும் படிப்பில் இருந்த ஆர்வம் அப்பொழுது குறைந்துவிடவில்லை. மீண்டும் வேறொரு பாடசாலைக்குச் சென்று படிக்க ஆரம்பித்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தார் சீட்களினால் அமைக்கப்பட்டிருந்த 10 அடி வீடுகள் அனைத்தும் படபடவென வெடித்துத் தீப்பிழம்பாகச் சிதறி முகாம் முழுதும் எரிந்து சாம்பலானது. அன்றாடம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேகரித்து வீட்டில் அம்மா வாங்கி வைத்திருந்த பொருட்கள் அத்தனையும் அரை மணி நேரத்தில் வெறும் சாம்பலாகக் காட்சியளித்தது. அழுது வடித்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு உடுத்திய துணியோடு ஒப்பாரி வைத்து அழுத தாய்மார்களின் கண்ணீரும் அவர்களைத் தேற்றத் தெம்பில்லாமல் தேம்பிக்கொண்டு நின்றிருந்த ஆண்களின் ஆதரவற்ற நிலையும் இன்றும் என் கண்களில் நீரை வார்க்கச் செய்கிறது. எவரோ சமையல் செய்யும் போது தீ பரவி வீடுகள் தீக்கிரையானது அப்போது தான் தெரிய வந்தது.

அருகிலிருந்த அடுத்த முகாமிற்கு மாற்றப்பட்டு சில தொண்டு நிறுவனங்களாலும் தமிழக அரசினாலும் வழங்கப்பட்ட பொருட்களையும் உடைகளையும் வைத்து வாழ்க்கைய ஆரம்பிக்க நினைத்த எமது வாழ்வில் மீண்டும் விதி விளையாடிச் சிரித்தது. அந்த அகதி முகாமும் ஒரே வாரத்தில் எரிந்து சாம்பலானது. மீண்டும் முகாம் மாற்றம்.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து படித்துப் பட்டதாரியானதே எமக்கும் எமது பெற்றோருக்கும் பெரிய சாதனையாகப்பட்டது. திடீரெனத் தோன்றிய சில தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெற்ற நிதியில் அவர்களது செலவுகள் போக எஞ்சியவை எமது முகாம் மாணவர்களை அப்பொழுது தான் வந்தடையத் தொடங்கியது. அவர்களுக்கு எங்கிருந்து எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதையோ அவை எதனடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதையோ எம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு சென்றார்களே தவிர வேறு எதையும் யோசிக்கும் நிலையில் எம்மவர்கள் இருக்கவில்லை.

அவ்வப்போது இலங்கையில் இடம்பெறும் யுத்தங்களால் மாண்டுபோன தமது சொந்தங்களின் எண்ணிக்கையை பொதுக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் பதறிப்போவார்கள். சிறு கூட்டங்களைப் போட்டு சில பெரிசுகள் ஏதோ பெரிதாக ஈழத்துக்கும் முகாமுக்கும் செய்யப் போவதாக அலட்டிக் கொள்வார்கள். எங்கிருந்தோ சில வௌ்ளைக்காரர்கள் வந்து காயப்பட்ட நெஞ்சுக்கு களிமண் பூசுவதாகக் கூறிக்கொண்டு சில விளையாட்டு மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்திச் செல்வார்கள். தொண்டு நிறுவனங்கள் தூக்கிக்கொண்டு வரும் பொருட்களைப் பெற்று சிலர் பூரித்துப் போவார்கள். இது தான் அங்கு அன்றாடக் காட்சி.

காலப்போக்கில் முகாம்களுக்குள் சில மாற்றங்களும் ஏற்படத்தான் செய்தது. பல படித்த இளைஞர் யுவதிகள் உருவானார்கள். அவர்கள் மூலமாக சில நல்ல திட்டங்களும் முகாம்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நான் இருபது வருட இந்திய வாசத்தில் பார்த்த அகதி முகாம்களுக்கும் தற்போதுள்ள முகாம்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. இலங்கை வந்து சில வருடங்களின் பின்னர் நான் வாழ்ந்த முகாமிற்கு ஒரு முறை சென்றிருந்த போது அனைத்துமே மாறிப் போய் காட்சியளித்தது. எமது கலை கலாசாரமெல்லாம் காணாமல் போய்விட்டது என்றும் கூறலாம். இலங்கையரும் இந்தியரைப் போலவே நடை உடையில் மாறிப்போயுள்ளனர்.

சிலர் இலங்கைக்குத் திரும்ப எண்ணியுள்ளபோதும் பலர் திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளனர். காரணம் தமது பிள்ளைகள் பலர் இந்தியர்களைத் திருமணம் முடித்துக்கொண்டு அங்கேயே வாழத் தொடங்கிவிட்டது தான்.

இன்று ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இந்தியத் தமிழர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சுவிடத் தோன்றுகிறது. தமிழன் என்ற உணர்வால் உந்தப்பட்டு எமக்கு உதவியளித்த இந்தியத் தமிழர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள் தான் என்பதையும் என் மனது எனக்கு தெளிவுபடுத்தாமல் இல்லை. அங்கு நான் சந்தித்த எமக்கு உதவிய பல நல்ல உள்ளங்களையும் நான் மறந்துவிடவில்லை. அரசியல் இலாபங்களுக்காக ஈழப்பிரச்சினை பயன்படுத்தப்படுவதை அறியாதவர்கள் தான் அங்குள்ள அப்பாவித் தமிழ் பொது மக்கள்.

ஒவ்வொரு ஈழத்தமிழனின் வாழ்வும் ஷேக்பியரின் துன்பவியல் நாடகங்களை விடக் கொடூரமானது தான். அவையெல்லாம் எழுதப்பட்டால் இன்றைய கவிஞர்களும் திரைப்பட இயக்குனர்களும் அவற்றிற்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள்.

இறுதிக்கட்ட போரின்போது எமது இனம் சந்தித்திடாத இன்னல்கள் இல்லை என்பதை சகலரும் அறிவர். இந்த யுத்தங்கள் தரும் தீர்வுகள் தான் என்ன? உலகில் எங்கெல்லாம் யுத்தங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் என்னைப் போல் பல அகதி உருவாக்கப்படுவதை அறிகிறேன். யுத்தம் என்பதே வேண்டாம் என்று தான் கனவிலும் யாசிக்கிறேன்.

ஐயா அரசியல் கோமாளிகளே, உங்கள் இலாபத்திற்காக எங்களை சீரழிக்காதீர்கள். முடிந்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் இங்குள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கலாம். தமிழக மக்கள் உண்மைகளைப் புரிந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது நீங்கள் எல்லாம் காணாமல் போவீர்கள், கவனம்!!!

No comments:

Post a Comment