Saturday, January 23, 2016

E Numbers எனும் சேர்பொருட்களும் கண்ணுக்குத் தெரியா அபாயங்களும்



மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

என்றார் திருவள்ளுவர். உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அளவோடு உண்டால் உயிர் வாழ்தலுக்கு தொல்லை ஏதும் நேராது என்பது இதன் பொருள்.

உணவையே மருந்தாகக் கொண்ட நிலை மாறி, உடற்சத்திற்காகவன்றி நாச்சுவைக்காக உண்ணும் பழக்கம் வலுத்து வருகின்றது. ஆனால், நாச்சுவைக்காக சேர்க்கப்படும் சுவையூட்டிகளின் குணநலன்கள் பற்றி எம்மில் பலரும் கருத்திற்கொள்வதில்லை.

பொருட்கொள்வனவின் போது காலாவதித் திகதியை உற்று நோக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்ட நிலையிலும் கூட, Ingredients எனப்படும் சேர்பொருட்கள் தொடர்பில் இன்னும் பலருக்கு தெளிவில்லை. இதில் திடுக்கிடும் உண்மை நிலவரம் என்னவென்றால், சேர்பொருட்களில் சொல்லப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் பலவும் உண்ணத் தகுதியற்றவை என்பதுடன் உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பனவும் கூடத்தான்!




இதிலும் சிக்கலான நிலை என்னவென்றால், சேர்பொருட்களில் சொல்லப்பட்டுள்ளவை என்னவென்பதை சாதாரணர்கள் அறியாதிருப்பது தான். அத்தோடு, உணவுச் சேர்க்கைகளில் சொல்லப்பட்டுள்ள நிறமூட்டிகள் மற்றும் இரசாயனங்களின் பயன்பாட்டு அளவீடு நாட்டிற்கு நாடு மாறுபட்டுக் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், நாம் உட்கொள்ளும் உணவின் சேர்பொருட்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. சில நாடுகளில் உண்ணத் தகுதியற்றவை என தடை செய்யப்பட்டுள்ள இரசாயனங்களும் சுவையூட்டிகளும் வேறு சில நாடுகளில் குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொள்ளும் உரிமம் பெற்றவையாகக் காணப்படுகின்றன.

இன்னும் சில உணவு தயாரிப்பு நிறுவனங்களோ, தடை செய்யப்பட்டவற்றைக்கூட சட்டத்திற்கு அமைவாகக் கையாளும் தந்திரோபாயங்களைக் கொண்டு இலாபாமீட்டி வருகின்றன.

உதாரணமாக உணவுப் பொருட்களின் சேர்பொருட்கள் பட்டியலில் இடம்பெறும் Additives or E numbers/ International Numbering System for Food Additives எனப்படும் INS இனைக் குறிப்பிடலாம். ஐரோப்பிய ஒன்றியத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இதனை E Codes என்றும் கூறுகின்றனர். இதில் E 100 முதல் E 1521 வரையான குறியீடுகள் காணப்படுகின்றன. இந்தக் குறியீடுகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு இரசாயனமும் வெவ்வேறு தன்மையுடையன. சில உணவுடன் சேர்க்கப்படும் அனுமதி வழங்கப்பட்டவை, சில குறிப்பிட்டளவு சேர்த்துக்கொள்ளலாம் எனும் வகையறாவைச் சேர்ந்தவை. இன்னும் சில நச்சுப் பொருட்கள், உண்ணத் தகுதியற்றவை (Dangerous Additives). 

 

இந்த E numbers அல்லது  தான் உணவுப்பொருட்களிலுள்ள நிறம், சுவையூட்டி, பதனச்சரக்கு, ஒக்சிஜனேற்றி, கூழ்மமாக்கி மற்றும் பால்மமாக்கிகளின் அளவூட்டினை சுட்டி நிற்கின்றன.

கொள்வனவு செய்யும் பொருட்களின் பின்புறம் Ingredients பகுதியை உற்று நோக்கினால் சிலவற்றில் இந்த E numbers இனைக் காண முடியும். நச்சுப் பதார்த்தமும் கூட இந்த E numbers வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அது எத்தகைய தன்மையது என்பதை அவதானிக்கவோ அறிந்து கொள்ளவோ எம்மில் பலருக்கும் நேரம் வாய்ப்பதில்லை. இருப்பினும், உணவு நிறுவனங்களால் எமக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதுதான்.

நச்சுப் பதார்த்தம் சேர்க்கப்பட்டிருக்கிறதே என நீங்கள் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கோ, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கோ செல்வீர்களானால், பெரும்பாலும் தாங்கள் எச்சரிக்கை வழங்கியிருப்பதாகக் கூறி தப்பித்து விடும் நிலையே காணப்படுகின்றது.

அதுவும் ஒரு உணவு சுவையூட்டிதான் என எண்ணிக்கொண்டு உட்கொள்வோமேயானால் பாரிய உடற்குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் நாம் முகங்கொடுக்க நேரிடும்.

எல்லா E இலக்கங்களுமே உடலுக்கு பாதகமானவையல்ல, உகந்தவையும் உண்டு. என்றாலும், சில E இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பதார்த்தங்களைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.



பாதகமான சில E Numbers...

E621 – monosodium glutamate : MSG என அறியப்பட்ட இதனை சுவையூட்டியாகப் பயன்படுத்துகின்றனர். இது தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல், தசை வலி, படபடப்பு போன்ற ஆரம்ப நோய்க்குறிகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுப் பதார்த்தம் ஆகும். என்றாலும், சில நிறுவனங்களின் சுவையூட்டி பக்கெட்டுகளில் E621 குறிப்பிடப்பட்டிருப்பதை இனிமேலாவது அவதானிக்க மறக்காதீர்கள்.

E951 – aspartame : இதுவொரு செயற்கை இனிப்பூட்டி. இதனை சில குறை கொழுப்பு உணவுகள், சர்க்கரைப் பானங்கள்,  தின்பண்டங்கள், இனிப்பு வகைகளில் சேர்க்கின்றனர். PKU எனப்படும் Phenylketonuria உள்ளவர்கள் இதனைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இதன் பாதகமான பக்க விளைவுகளைக் கருத்திற்கொண்டு சாதாரணர்களும் தவிர்த்து விடுவது சிறந்தது.

E211 – sodium benzoate : பதனிடும் பொருளாக மாஜரின், சலட் வகைகள், சோயா சோஸ், இனிப்பு வகைகள் மற்றும் மென்பானங்களில் இது சேர்க்கப்படுகின்றது. குழந்தைகளில் இப்பதார்த்தம் hyperactivity இனை ஏற்படுத்தும் எனவும் பெரியவர்களுக்கு ஆஸ்த்துமா அல்லது ஒவ்வாமையினை ஏற்படுத்தும் எனவும் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

E151 – black PN / brilliant black BN : இதுவொரு கறுப்பு செயற்கை சாயம். சில பொருட்களில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி, நோர்வே, ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தடை செய்துள்ள போதிலும் வேறு சில நாடுகள் பாவித்து வருகின்றன. இது பரவலாகப் பலரிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்ததன் விளைவே மேற்குறிப்பிட்ட நாடுகள் தடை விதித்தமைக்கான காரணமாகும்.

E133 – brilliant blue FCF : இதுவொரு நீல நிற செயற்கை சாயமாகும். சில பொருட்களில் நீல நிறத்திற்காகப் பாவிக்கப்படுகின்றது. ஆஸ்திரியா, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே ஆகிய நாடுகள் இதனை முற்றாக தடைசெய்துள்ளன.

E213 – calcium benzoate : உணவு மற்றும் மென்பான வகைகளின் நீடிப்புத் தன்மைக்காக (நீண்டகால பாவனைக்காக) இந்தப் இரசாயனத்தை சேர்க்கின்றனர். இதுவும் பரவலாக ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.

இந்தத் தரவுகளை ஐக்கிய இராச்சியத்தின் Food Standards Agency தனது உத்தியோபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இது தவிர சில E Numbers இன் உள்ளடக்கங்கள்....

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு


Codex Alimentarius, World Health Organisation (WHO) எனப்படும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனம், Food and Agriculture Organization (FAO) எனப்படும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றினால் இந்த ENumbers/ INS வரையறுக்கப்பட்டுள்ளன.






Thursday, January 14, 2016

வெருண்டோடும் காளைகளும் மதம் சார் விலங்குரிமையும்














அடைபட்டு, வெருண்டோடும் காளைக்கு வெறி பிடிக்க வேண்டும் என்பதற்காய் அதன் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசுதல், வாலைக்கடித்து திருகுதல், ஐந்தாறு பேர் சேர்ந்து அடக்குதல் போன்ற காரணங்களால் எனக்கும் சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவல் விளையாட்டு மீது இளம்பராயத்திலிருந்தே உடன்பாடு இல்லை.

மாட்டுக்கறி சாப்பிடுவதை விட நெல் சாப்பிடுவது கூட மிருக வதைக்கு துணைபோதல் தான் என்றார் நண்பர். உண்மை தான், உழவுக்காக ஏரில் காளைகளைப் பூட்டுதலும், பார மூட்டைகளைக் கட்டியிழுக்க அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு வகையான மிருகவதை தான்.

என்றாலும், ட்ராக்டர் வரவால் மனிதர்கள் கணிசமானளவு காளைகளின் பயன்பாட்டை விவசாயத்துறையில் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

நாகரிக வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கொண்டாடும் மனித இனம் முடிந்தளவு விலங்குகளுக்கும் இயற்கைச்சூழலுக்கும் தொல்லையற்றதாகத் தனது இருப்பை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நியாயம்.
அதேவேளை, விலங்குணவை முற்றாகத் தடுக்க நினைப்பதெல்லாம் இயற்கையினதும் சமூகத்தினதும் யதார்த்தத்தை உணராத வறட்டுச் சிந்தனையாகும்.

தவிர, புனிதமாகக் கருதப்படும் விலங்குகளுக்கு மாத்திரம் அன்பையும் நேசத்தையும் காட்டிவிட்டு ஏனைய விலங்கு வதைகளைக் கண்டுங்காணாமல் இருக்கும் மனித குணம் கண்டிக்கத்தக்கது.

இனம், மதம், பண்பாடு சார்ந்து விலங்குரிமைகளைப் பாகுபடுத்திப் பார்க்காமல் பொதுவான நோக்கோடு, எம்மால் இயன்றளவு விலங்குகளை வதைகளிலிருந்து மீட்போம்.


Wednesday, March 25, 2015

பாதிக்கப்படுகிறவளும் குற்றஞ்சுமத்தப்படுகிறவளும் ஏன் பெண்ணாகவே இருக்கிறாள்?



பெண்கள் மீதான வன்முறைகளில் பாதிக்கப்படுகிறவளும், குற்றம் சுமத்தப்படுகிறவளும் ஏன் பெண்ணாகவே இருக்கிறாள்? இதற்குப் பின்னால் இருக்கும் ஆணாதிக்க மனநிலையை என்ன செய்வது என 'த ஹிந்து' கேட்டிருந்த கேள்விக்கு சிலர் தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் சாராம்சத்தைப் பாருங்கள்...


  • பெண் என்பவள் எப்போதும் பாதிக்கப்படக் காரணம் மதம், இனம் அடிப்படையிலான கட்டமைப்பு.
  • பெண்களின் சாதனைகள் நேரடியாகவும் பல தருணங்களில் தந்திரமாகவும் மறைக்கப்படுகின்றன.
  • ஆணாதிக்க மனநிலை ஒருவர் மனதில் சிறு வயதில் இருந்தே விதைக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்றே மாறியிருந்தாலும் பெண்ணுக்கான சொத்துரிமை, வேலைக்கான கூலி என அனைத்தும் பெண்ணுக்குப் பாதகமாகவே இருக்கிறது.
  • பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே உறுதிசெய்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இன்னும் இந்தச் சமூகம் இருக்கிறது.
  • பெண்கள் மன உறுதியில் ஆண்களைவிட பல மடங்கு பலம் பொருந்தியவர்கள். ஆனால், பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே கருதும் போக்கு காட்சி ஊடகங்களில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
  • ஆண்களின் பார்வையில் போகப் பொருளாகவே பெண் தெரிகிறாள்.
  • பெண்ணுக்குப் பாதுகாப்பு தருகிற நல்ல சட்ட திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்.
  • தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியும்.
  • ஆண்மை என்பது எந்தப் பெண்ணுக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும்.
  • குற்றவாளிகளுக்குக் காலம் கடத்தாமல் தண்டனை வழங்க வேண்டும்.
  • கற்பு என்னும் அளவீட்டை ஆண்களுக்கு வகுக்காதது ஏன்? அதிலேயே புரிந்துவிடுகிறது இந்த ஆணாதிக்க சமூகத்தின் சூட்சுமம்.
  • பெண்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • பெண்ணை இரண்டாம்தர பிரஜையாகப் பார்க்கும் எண்ணத்துக்கு சமாதி கட்ட வேண்டும்.
  • ஆணுக்கு உடல் வலிமை எனில், பெண்ணுக்கு மன வலிமை. வீட்டிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளை மட்டம்தட்டி வளர்ப்பதை நிறுத்த வேண்டும்.
  • பெண்ணே ஆதி சக்தி என்பதை உணரச் செய்ய வேண்டும்.
  • பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுத்தர வேண்டும்.
  • ஆணைவிட பெண் எந்த விதத்திலும் தாழ்ந்தவள் அல்ல. சொல்லப் போனால் ஆணைவிட பெண்தான் ஒரு படி மேலானவள். ஆனால் ஆண் செய்கிற தவறுக்கும் பெண்ணே பாரம் சுமக்க வேண்டிய கட்டாயம்.
  • பாலியல் வன்முறைகளுக்குப் பெண்களே காரணம் என்று குதறிக் கொண்டிருப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது.
  • தன்னை நிராகரித்த பெண் மீது அமிலத்தை வீச இந்த ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஒரு பெண் தன் உரிமைகளையும் நியாயங்களையும் தட்டிக் கேட்காதவரை இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாகவே இருக்கும்.
  • ஒரு ஆணின் மனதுடன் பெண்ணும், ஒரு பெண்ணின் மனதுடன் ஆணும் ஓரளவாவது நடந்தால் நிச்சயம் சமுதாயம் மாறும்.
  • நம் சமூகத்தினருக்குப் பாலினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • குடும்பத்தில் ஆண் குழந்தைகளை ஒழுக்க நெறியுடன் வளர்க்க வேண்டும்.
  • பெண் பிள்ளைகளும் சமூகத்தில் சம உரிமையுடன் வாழப்பிறந்தவர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதைச் சிறு வயது முதலே ஆண் குழந்தைகளின் மனதில் பதியம்போட வேண்டும்.
  • பாதுகாப்பற்ற பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரைக் கண்டறிந்து உரிய காப்பகங்களில் சேர்த்து வேலைவாய்ப்புடன் கூடிய கட்டமைப்பை உருவாக்குதல் அவசியம்.
  • பெண்ணுக்கான பாதுகாப்பை அவளே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான மனத் துணிவை பெண்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பாதிக்கப்படும் பெண்களில் பலரும் தங்களது பாதிப்பை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்தான், ஆண்களை தைரியமாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளில் ஈடுபட வைக்கிறது.
  • பெண் பலவீனமானவள், எதிர்த்துப் போராடும் உடல் தகுதி இல்லாதவள் என்ற பொய் விவாதங்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டதுதான் இந்த ஆணாதிக்க மனோபாவத்துக்குக் காரணம்.


Tuesday, November 11, 2014

எங்கே போய் சிறுநீர் கழிப்பது?


எனக்கெல்லாம் பயணங்கள் என்றதுமே அலறியடித்து ஓடவைக்கும் ஒரே விடயம், எங்கே போய் சிறுநீர் கழிப்பது என்பது தான்.

நீண்ட தூரப் பயணங்களின்போது பெண்களுக்கு ஏற்படும் பெரும்பிரச்சினை, எனக்குத் தெரிந்து இது தான்!

ஆண்களுக்கு இந்தத் தொல்லை இல்லை, அவர்களால் கூச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் சென்று சிறுநீர் கழித்துவிட முடிகிறது.

தவிரவும், ஆங்காங்கே காணப்படும் பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்லலாம் என்றால், அதைவிட அடக்கி வைத்துக்கொள்வதே உத்தமம் எனத் தோன்றும் அளவிற்கு அசுத்தமாகவே பேணப்படுகிறது.

தொழிலுக்காகவோ, பயணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் உரிய கழிப்பிட வசதிகளின்றி அல்லலுறும் நிலையை இந்த யூடியூப் வீடியோவில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

பல நாட்களாகவே என் கவனத்தை ஈர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று என்பதால், இந்த வீடியோவை உருவாக்கியவர்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்!


Saturday, November 1, 2014

அன்றென்ன? இன்றுவரை அப்படித்தான் அவர்கள்!



வாழ்க்கை முறையும் வரலாறும் எமக்கெல்லாம் மாறிக்கொண்டே போனாலும் தோட்டக்காட்டான் (?) என நாம் அழைக்கும் அவர்களுக்கு மட்டும் எவ்வித மாற்றமும் நேர்ந்துவிட்டிருக்கவில்லை.

எத்தரப்பும்  வாய்திறந்திருக்கவில்லை,
இன்று மண்ணோடு மண்ணாகிப் போனவர்களின் மக்கிப்போன வரலாறு பற்றி...!

ஏனில்லை? கிடைத்தவரை சுருட்டிக்கொண்ட அவர்களின் பிரதிநிதிகளுக்கும் அரச தரகர்களுக்கும் ஆடம்பரவாழ்க்கை அவர்களாலேயே வாய்த்தது, வாய்களை மூடிக்கொண்டார்கள்!

பிழைப்பிற்காக (?) வந்த அவர்களால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்ததே தவிர அவரது வீட்டின் ஒரு நேர சாப்பாடு பற்றிப் பேசவும் நாதியற்றவர்கள் அவர்கள்!

இன்று பேசுபொருளாகிப் போனவர்களின் மீதுள்ள மனிதாபிமான அக்கறையே நீளும் உதவிக்கரங்களுக்கான முழுமுதற்காரணம்.., தவிர, உரிமை கோரி நிமிர்ந்து நின்றால் இவ்வடக்கத்தியான்களை (?) உதறித்தள்ளும் உங்கள் கால்கள்!

மலையக மக்களின் மண்மூடிய சோக வரலாற்றை "தி ஹிந்து" தளத்தில் வாசிக்க நேர்ந்தது. இங்கு பதிவிட விரும்புகிறேன்.



இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.

தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.

கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

நடைப்பயணத்தின்போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.

இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந்தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலைகளை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள்.



இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங் கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப் பட்டார்கள்.

இந்த 10 இலட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 இலட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர் களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர் களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார்.



இலங்கையின் பூர்வீகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத்திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்வீகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின.

வளர வளரக் கவாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியர் என்ற காரணத்தாலும் சாதியாலும் ஒவ்வொரு கணமும் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாகச் சிலுவை சுமப்பதுபோல இலங்கையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடம் இலங்கை அரசியலில் இன்னமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது.

Thursday, October 30, 2014

'வீதியோர பாலியல் சீண்டல்கள்'

இளம்பெண் ஒருத்தி வீதியில் தனியாக நடக்கையில் எவ்வாறான தொல்லைகளுக்கு இலக்காகிறாள் என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது இந்த வீடியோ.




நியூயோர்க் நகர வீதியில், 10 மணித்தியாலங்களில் 100 தடவைகள் இப்பெண் ஆண்களால் வாய்மொழித் துன்புறுத்தல்களுக்கு இலக்காகிறாள்.

பெண்களுக்கு தெருக்களிலும் பொதுவிடங்களிலும் இடம்பெறும் துன்புறுத்தல்கள்/ சீண்டல்கள் தொடர்பில் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்கில் சொஷானா ரொபர்ட்ஸ் எனும் நடிகையின் உதவியுடன் இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இவை ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டிலும் இவ்வாறு பெண்களைக் கேலி செய்யும் நடவடிக்கைகள் அன்றாடக் காட்சிகள் தாம், என்றாலும் பெரும்பாலான ஆண்களுக்கு இவை துன்புறுத்தல்கள் என்றோ, வன்முறை என்றோ உரிமை மீறல் என்றோ தெரிவதில்லை(???)!

(தவிர, இந்த வீடியோ பிரபலமானதைத் தொடர்ந்து குறித்த நடிகைக்கு பலரால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.)





Wednesday, September 24, 2014

பாலியற்படுத்தப்பட்ட பெண்களும் இந்தியத் திரைத்துறையும்!






பாலியற்படுத்தப்பட்ட ரீதியில் பெண்களைக் காண்பிப்பதை இந்திய திரைப்படங்கள் தொடர்ந்து கையாண்டு வருகின்றன.

வணிக நோக்கில் இந்தியத் திரைப்பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும், ஏன் இந்திய நடிகைகள் சிலரும் கூட இந்த யுக்தியை மேற்கொள்வது வருந்தத் தக்க விடயமாகவேயுள்ளது.

அண்மையில், ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், பெண்களைப் பாலியற்படுத்தி காண்பிக்கும் திரைப்படங்கள் பட்டியலில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்படங்களில் பெண்களை பொறியலாளராகவோ, மருத்துவராகவோ அல்லது சொல்லத்தக்க நிலையில் உள்ள தொழிற்துறைகளில் முன்னிலை பெற்றவர்களாகவோ காண்பிப்பது குறைவாகவே காணப்படுகிறது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

என்றாலும், பாலியற்படுத்தப்பட்ட, பாலியல் உணர்வைத் தூண்டத்தக்க வகையில் எல்லா நாட்டுத் திரைப்படங்களிலும் பெண்களைப் பயன்படுத்தும் நடைமுறை இருந்து வருகின்றது.

அரைகுறை ஆடைகளுடனோ, ஆடைகள் இல்லாமலோ, மெல்லிய ஆடைகளுடனோ மிகக் கவர்ச்சியாகக் காண்பிப்பதை திரைப்படத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

இந்திய திரைத்துறையில் 35 வீதமாகவுள்ள இந்த நிலைக்கு மாறாக பெண் எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரின் எண்ணிக்கை வீதம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இதேவேளை, பெண் இயக்குனர்களின் உலகசராசரி வீதம் 7 ஆகவும் இந்திய சராசரி 9.1 ஆகவும் உள்ளது.

என்றாலும், பெண் எழுத்தாளர்களின் உலகசராசரி வீதம் 19.7 உள்ள நிலையில் இந்திய பெண் எழுத்தாளர்களின் வீதம் வெறும் 12.1.

அத்துடன், பெண் தயாரிப்பாளர்களின் உலக சராசரி வீதம் 22.7, ஆனால் இந்திய பெண் தயாரிப்பாளர்களின் வீதம் 15.2 ஆக உள்ளது.

திரைப்படத்துறை இலாபநோக்கில் மட்டுமே செயற்படும் வரையில் இந்த நிலை தொடரத்தான் செய்யும் என்பது வேதனைக்குரிய விடயம்!